சேலம், பிப்.18-
சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடங்குவது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஞாயிறன்று ஆய்வு செய்தார்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உடல் உறுப்பு மாற்று சிகிச்சைப் பிரிவு துவங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுதொடர்பான முதற்கட்டப் பணிகள் குறித்து ஞாயிறன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் கனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவமனை பேராசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆகவே, தமிழகத்தின் சென்னையைத் தொடர்ந்து சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 2-ம் கட்ட பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவினை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான கருவிகள் மற்றும் கட்டமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் இதயம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தினைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் பெறுவது அதிகரித்துள்ளது. பொதுமக்களிடம் இதுகுறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உறுப்பு தானத்திற்கு விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய வசதியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இது அரசு மருத்துவர்களின் சாதனையைவெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்ந்த மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அறிக்கை பெறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

மேலும், தமிழகத்தில் வேறு எப்போதும் இல்லாத வகையில், பொதுசுகாதாரத்துறையில் 2 ஆயிரத்து 500 மருத்துவர்கள், 580 சிறப்பு மருத்துவர்கள் என அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 500 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave A Reply