தில்லி,

அகில இந்திய அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கு கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 7 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளதாக லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் லோக்நிதி – சிஎஸ்டிஎஸ் ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. மே 1ம் தேதியிலிருந்து 15ம் தேதிவரை ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 7 முதல் 20ம் தேதி வரை 19 மாநிலங்களில் இரண்டாவது முறையாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் பிரதமர் மோடியின் செல்வாக்கு 7 சதவிகிதம் குறைந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரசின் செல்வாக்கு 3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளோடு ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு 8 சதவிகிதம் சரிந்து 25 சதவிகிதமாக உள்ளது.  தென்னிந்தியாவில் காங்கிரசின் செல்வாக்கு 5 சதவிகிதம் அதிகரித்து 39 சதவிகிதத்துடன் உள்ளது.

எட்டு மாத இடைவெளியில் நடத்தப்பட்டுள்ள இந்த இரண்டாவது கருத்துக் கணிப்பில் உயர் வகுப்பினரிடையே பாஜக தனது செல்வாக்கை 2 சதவிகிதம் இழந்துள்ளது.  காங்கிரஸ் 9 சதவிகிதம் கூடுதலாக பெற்றுள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் இடையேயும் பாஜக அரசு தனது செல்வாக்கை இழந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் செல்வாக்கை அதிகமாக பெற்றுள்ளது. இளைஞர்களின் செல்வாக்கை அதிகமாக பெற்று ஆட்சியை பிடித்த பாஜக, தற்பொழுதும் இளைஞர்களின் மதிப்பை பெற்றுள்ளது. ஆயினும் அதிலும் சரிவை கண்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட முடிவுகளில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 20 சதவிகித சரிவை பாஜக அரசு பெற்றுள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கும் பாஜகவின் செல்வாக்கு அதிகளவில் சரிவை கண்டுள்ளது. ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக சரிவை கண்டுள்ளது.  கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்குரியவர் என்ற தேர்வில் அதிக வாக்குகளை பெற்ற மோடி தற்பொழுது சரிவை கண்டுள்ளார். கடந்த ஆண்டில் 44 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த மோடி தற்பொழுது 37 சதவிகித வாக்குகளையே பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு 9 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த ராகுல்காந்தி தற்பொழுது முன்னேற்றம் கண்டு 20 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார்.அடுத்தடுத்து மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, இந்த கருத்துக் கணிப்பின் மூலம் மக்களின் மனதில் பின்னடைவை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: