====க. பழனித்துரை====
ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூகத்தையோ அழிக்கவேண்டும் என்று நினைத்தால் அதற்கு அணுகுண்டு போடவேண்டியதில்லை. சமூக விரோதிகளை உருவாக்கத் தேவையில்லை, கல்வியை சிதைத்துவிட்டால் அந்தச் சமூகத்தைப் பாழ்படுத்திவிடலாம். தரமற்ற கல்வி ஒரு நாட்டில் மாணவர்களுக்குப் புகட்டப்படுமேயானால் அங்கு தரம் குலைந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், குடிமக்கள் என உருவாக்கப்பட்டு சமூகச் சீரழிவு ஏற்பட்டுவிடும்.
தரமான கல்வி எது? ஆசிரியர் யார்?
தரமற்ற பொறியாளர்களால் உருவாக்கப்படுகின்ற கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், பள்ளிக்கூடங்கள், இதேபோல் தரமற்ற மருத்துவர்கள் செய்யும் சிகிச்சைகள், தரமற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள், தரமற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் இவைகள் அனைத்தின் மூலம் நம் சமூகத்தை எவ்வளவு சிதைக்க முடியுமோ அவ்வளவு சிதைத்துவிடலாம். இவர்கள் படித்தவர்களாக காட்சியளிப்பார்கள், ஆனால் சமூகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே சமூகத்தைக் கெடுக்கும் பணிகளைச் செய்வார்கள். மேற்சொன்ன செயல்பாடுகள் அனைத்தும் இன்று நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் பலனையும் இன்று நாம் பார்த்து அனுபவித்து வருகிறோம்.
கல்வி என்பது மக்களை நெறிப்படுத்தும் ஒரு கருவி. மக்களைப் பாதுகாக்கும் ஒரு அரண். மனித மாண்புகளை வளர்த்து உயர்த்தும் ஒரு செயல். கல்வியின் பயன் அறத்தின் வழி செயல்படல். கல்வி அறிவு வளர்க்கும் ஒரு தவச் செயல். அறிவும் ஆற்றலும் அறத்துடன் செயல்படும் பண்பை வளர்ப்பதுதான் கல்வியின் தலையாய கடமை. கல்வி என்பது மானுடத்திற்கு புலன்களை அடக்க, தன் ஆற்றலை அறிய உதவிடும் ஒரு ஒப்பற்ற கருவி. அந்தக் கல்வி என்பது இன்று வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்யவும், பணம் சம்பாதிக்கவும் பயன்படும் பொருளாக மாற்றப்பட்டதன் விளைவு, கல்வியின் மாண்புகள் சிதைக்கப்பட்டுவிட்டன.
கல்வி தரத்துடன் போதிப்பதில்தான் தரமான மாணவர்களை கல்விச்சாலைகளிலிருந்து உருவாக்க முடியும். தரமான கல்வியை யார் தரமுடியும் என்றால் தரமான ஆசிரியர்களால்தான். தரமான ஆசிரியர் என்பவர் தன்னை வருத்தி, மாற்றி, மாணவர் முன் உதாரணமாக நின்று தன் கடமையைப் போராட்டமாக நடத்தி சமூகப் பார்வையுடன் மாணவர்களை உருவாக்கும் தவச்சாலையாக கல்விக்கூடத்தைப் பார்ப்பவர்கள். இவர்கள் ஒழுக்க நியதியை உயர்நிலையில் கடைப்பிடிக்கும் ஒழுக்க சீலர்கள், நெஞ்சுரம் கொண்ட சுதந்திர மனிதர்கள். கல்வி ஒருவனுக்கு ஆக்கம் தரும் கருவி. மானுடத்தின் மேன்மையை உயர்த்தி தாங்கிப் பிடிக்கும் ஒரு பணி. இந்தக் கல்வியை நாம் எங்கு கொண்டுவந்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதறும்.
சட்டங்களை நிராகரித்த கொள்ளைகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த துணைவேந்தர் கைது என்பது ஒரு சிறு துளி. அந்த நிகழ்வு படித்தவர்களுக்கு, அறிவுஜீவிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு, கல்வியாளர்களுக்குப் பெரும் அவமானம். தமிழகத்திலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் அத்தனையும் இதற்கு விதிவிலக்கல்ல. இதைவிட மோசமாக கல்வி விற்பனை பெருமளவு லாபத்துடன் தனியார் பல்கலைக்கழகங்களில் நடந்தேறி வருகின்றது. தனியார் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நடக்கின்ற கல்வி வணிகம் எல்லாச் சட்டங்களையும் நிராகரித்த கொள்ளைகள்.
நம் கல்வியைக் கொலைக்களத்துக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் நம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கல்வி வணிகர்கள், கல்வி வணிகத்திற்கு துணைபோன சந்தைக் கல்வியாளர்கள். பாரதியும், வள்ளுவனும் இந்த மண்ணில்தான் பிறந்து வாழ்ந்தார்களா, அவர்கள் போதனைகள் யாவும் நமக்கு ஒரு வணிகமா என்று கேட்கத் தோன்றுகின்றது. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது என்பது ஒரு மிகப்பெரிய கொள்கை மாற்றத்தின், மற்றும் பார்வை மாற்றத்தின் வெளிப்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தச் சீர்கேடு துவங்கிய இடம் புதிய பொருளாதாரக் கொள்கை. கல்வி என்பது சந்தைக்கு ஆட்கள் தயார் செய்வது என வரையறுத்து, அந்தப் பணியையும் தனியாரிடம் தந்து கல்வியை வணிகப் பொருளாகப் பார்க்கப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் பார்த்து அனுபவித்துவரும் சமூகச் சீரழிவு. இன்றைக்கு நாம் கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பார்த்த நிகழ்வு கல்வியை எவ்வளவு தாழ்நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளோம் என்பதற்கு ஒரு சான்று. கல்வி பொதுத்துறை நிறுவனமாக அரசிடம் இருந்தபோது கல்வி என்பது தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் ஒப்பற்ற கருவியாக பார்க்கப்பட்டது. அடிப்படையில் கல்வி என்பது சமூக மாற்றத்திற்கானது, நாட்டின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கானது என்ற நிலையில் பார்க்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது தான் கல்வியா?
கல்வியை இன்று யாரும் வாழ்வை செம்மைப்படுத்தும், செழுமைப்படுத்தும், நெறிப்படுத்தும் கருவி என்று பார்ப்பது கிடையாது. கல்வி என்பது பணம் செய்வதற்கு, லாபம் ஈட்டுவதற்கு, வாழ்க்கை வசதிகளைக் கூட்டுவதற்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இந்தச் சூழலை அரசும், சந்தையும் சேர்ந்தே செய்துகொண்டுள்ளது. ஆகையால்தான் சமூக மேம்பாடு, சமூக வளர்ச்சி, மானுட மேம்பாடு என்பதைப் புறம்தள்ளிவிட்டு தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் கருவி கல்வி என்ற பார்வையை நம் அனைவருக்கும் தந்துவிட்டனர். இதன் விளைவுதான் நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு, அறம்சார்ந்த வாழ்வை புறம்தள்ளி தவறுதல்களோடும், குற்றங்களோடும் வாழ்க்கைப் பயணத்தை நம் படித்த சமூகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகாலமாக கல்விச்சாலைகள், ஆரம்பப் பள்ளியில் ஆரம்பித்து உயர்கல்வி நிலையங்கள்வரை தொழிற்சாலை தொடங்கி நடத்துவதுபோல், கல்வி நிலையங்களை வணிகர்களும், அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் பெருமளவில் மூலதனம் செய்து நடத்தி லாபம் ஈட்டிவருகின்றனர். இதன் நீட்சிதான் உயர்கல்வி நிலையங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள். இந்த முறைகேடுகளை நம் கல்வியாளர்களால் ஏன் தடுக்க முடியவில்லை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களால் ஏன் தடுக்க முடியவில்லை, நம் அரசியல் கட்சிகளால் ஏன் தடுத்திட முடியவில்லை என்பதை நாம் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விற்பனை பொருளான பதவி, பணி
இந்தக் கல்விச்சாலை முறைகேடுகள், ஊழல்கள் என்பதை நாம் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. இது ஒரு காலக்கட்ட நிகழ்வு. இது சந்தைக்காலம், இந்தச் சந்தைக் காலத்தில் கல்வியும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரசு நிறுவனங்களில் பணி வழங்குவதோ பணியிட மாற்றமோ இவைகள் அனைத்தும் நடைமுறையில் விற்பனைப் பொருளாக மாற்றப்படும் நிலையில் கல்விச்சாலையில் உள்ள பதவிகளும், அது எந்தப் பணியாக இருந்தாலும் அது விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணம் கல்வி என்பதை இன்னும் கொள்கைரீதியாக தெளிவாக வரைவு செய்யப்படவில்லை.
பொதுவாக ஒரு நாட்டில் கொள்கை என்பதுதான் செயல்பாட்டுக்கு வழிகாட்டும் நெறி. இன்றைக்கு நம்மிடம் கல்விக்கொள்கையே கிடையாது. கடந்த நான்கு ஆண்டுகளாக விவாதத்திலும் பரிசீலனையிலும்தான் நம் கல்விக்கொள்கை உள்ளது. இதன் விளைவு இன்றைய கல்விச்சாலைகள் நடத்துவோருக்கு போட்ட மூலதனத்தை எடுப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றார்களே தவிர, கல்விச்சாலையை தவச்சாலையாக, வேள்வியாகச் செய்து, சமூக மாற்றத்திற்கு வித்திடும் சமூகப் பார்வை கொண்ட, தன்னம்பிக்கையுடைய ஆண்களையும் பெண்களையும் உருவாக்க முனையவில்லை, முடியவில்லை. இன்றைக்கு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சமூகப் பார்வையுடன், சமூக அக்கறையுடன் செல்வதற்குப் பதில் சான்றிதழ் சுமந்து தன்னம்பிக்கையற்று சார்ந்துவாழும் மனநிலையில் கல்விச்சாலையை விட்டு வெளியே செல்லும் நிலையில் உள்ளார்கள் என்பதுதான் கவலையளிக்கிறது. எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக கல்விக்கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும்.
கல்வி பாதுகாப்பு இயக்கம் தேவை
அடுத்து கடந்த இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் மற்றும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி ஓர் விரிவான விசாரணையை மத்திய அரசு நடத்திட வேண்டும். அதற்கான ஓர் உயர்மட்டக்குழு ஒன்று உருவாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளின் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து ஒரு சிபிஐ விசாரணை நடத்தப்படல் வேண்டும். இந்த ஊழல்களை, கல்விச் சிதைவுகளை இன்றைய சூழலில் களைந்திட கல்விச்சாலையில் பணிபுரியும் ஆசிரியர்களால் முடியாது. ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் கல்வியாளர்களாக ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே கல்விப்பாதுகாப்பு இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு போராட்டத்தின் மூலமாகவே நம் கல்வியைப் பாதுகாக்க முடியும், கல்வித்துறையைச் சீரமைப்புச் செய்ய முடியும். இந்தச் சூழலில் இவைகள் அனைத்தும் நடைபெறவில்லை என்றால் இந்த உயர்கல்விச்சாலைகள் சமூக விரோதிகளை உருவாக்கும் கூடமாக மாறி சமுதாயத்திற்குப் பாரமாக மாணவர்களை உருவாக்கிவிடும் என்பதனை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.