கோவை, பிப்.18-
கோவையில் நடைபெற்ற காதலர் தின விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதியினர் பாராட்டப்பட்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் கலப்பு மணம் புரிந்தோர் சங்கத்தின் சார்பில் கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் காதலர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் சாதி மறுப்பு திருமணம் மேற்கொண்ட தம்பதிகள் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பேசுகையில், பெரியார் பிறந்த இம்மண்ணில் காதலர்களுக்கு பாதுகாப்பில்லை. ஆனால், கேரளா
வில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறார்கள். கேரளத்தில் நடப்பது பொதுவுடமை ஆட்சி. தமிழகத்தில் நடப்பது மதுவுடமை ஆட்சியாக உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்டவர்களை பெற்றோர்களே கொல்வது அவர்களின் உறவுகளின் தூண்டுதலே காரணம். இத்தகைய தூண்டுதலே சாதிய அமைப்புகளுக்கு தேவைப்படுகிறது. சாதிய அமைப்பின் தேவையானது அரசியல் அதிகாரத்திற்கு வரும் மோடி மஸ்தான்களுக்கு தேவைப்படுகிறது. உரிமைகள் அனைத்தையும் போராடிப்பெற வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். அத்தகைய போராட்டத்தை தொடருவோம் என அவர் பேசினார்.

முன்னதாக, நிமிர்வு கலைக்குழுவினரின் பறை நிகழ்ச்சியுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். மேலும், புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையான்டி மற்றும் பகுத்தறிவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.