கோவை, பிப். 18 –
காவிரி நதிநீர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றவில்லையெனில், பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மேற்கு மண்டல மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கவலையளிக்கிறது. இதில் உச்ச நீதிமன்றத்தை குறைகூற விரும்பவில்லை. ஆனால், கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா என்பது கேள்வியாக உள்ளது. இந்த தீர்ப்பில் 15 ஆண்டுகள் மேல்முறையீடு கூடாது என்பது கருத்துருவா அல்லது கண்டிப்பான உத்தரவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தண்ணீர் வழங்கப்படும் டிஎம்சி கணினி மூலம் பங்கீடு செய்யவும், இதை கண்காணிக்க மாநிலத்திற்கு ஒரு பிரதிநிதி நியமிக்க வேண்டும்.

மேலும், காவிரி நதிநீர் தொடர்பான நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனில், பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றார். மேலும், மோடி சொல்லி தான் அமைச்சரவையில் இணைந்தேன் என்ற துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கருத்து குறித்த கேள்விக்கு ஒபிஎஸ் உண்மையை சொல்லியுள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள் என தா.பாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.