தில்லி,

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை அரசு துறை வங்கிகளில் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை வெளியிட்டது.

அதில், கடந்த 2015, ஜனவரி 1ம் தேதி முதல் 2017, மார்ச் 31ம் தேதி வரை அரசு வங்கிகளில் பணியாற்றும் 5 ஆயிரத்து 200 அதிகாரிகளுக்கும் அதிகமானோர் மோசடியில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அபராதம் விதிக்கப்பட்டோ, இடைநீக்கம் செய்யப்பட்டோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டோ தண்டிக்கப்படுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) வங்கியில் பணியாற்றும் ஊழியர்களில் 1,538 பேர் மோசடி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் 449 ஊழியர்களளும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 406 ஊழியர்களும் மோசடிகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

யூனியன் வங்கியில் பணியாற்றும் 214 ஊழியர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் 184 பேர், மற்ற 22 அரசு வங்கிகளில் பணியாற்றும் 2409 ஊழியர்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது 2015ம் ஆண்டு 2 748 ஊழியர்களும், 2016ம் ஆண்டு, 1994 ஊழியர்களும், 2017ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி வரை 458 ஊழியர்களும் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர்.

மேலும், 2013-14ம் ஆண்டில், 76 வங்கிகளில் மொத்தம் 4305 மோசடிகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.10,470 கோடியாகும். இதில் 501 வழக்குகளில் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே ஈடுபட்டுள்ளனர்.

2014-15ம் ஆண்டில் 4639 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.19,455 கோடியாகும். இந்த மோசடிகளில் அந்த வங்கி ஊழியர்களை 551 பேர் ஈடுபட்டுள்ளனர்.

2015-16ம் ஆண்டில் 4 ஆயிரத்து 690 மோசடி வழக்குகள் பதிவாகின, இதன் மதிப்பு ரூ.18,691 கோடியாகும். இதில் 582 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 870 மோசடி வழக்குகள் பதிவான. இதன் மதிப்பு ரூ.17,750 கோடியாகும். இந்த மோசடியில் வங்கியில் பணியாற்றும் 450 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 17,504 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் ஒட்டுமொத்த பணமதிப்பு ரூ.66,066 கோடியாகும். ஏறக்குறைய 2,800 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு நடந்த 17, 504 வங்கி மோசடிகளில், அந்தந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் 2,800 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி குற்றங்களில் 12 சதவீதத்தை அந்த வங்கி ஊழியர்களே செய்துள்ளனர். ஆனால், இவர்கள் மூலம் அந்த வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.