இராமேஸ்வரம்:
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்தபோதும், இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு எதிராக ‘ரூ. 17 கோடி அபராதம்’ விதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை திரும்பப்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பின்னர், சமரசப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்ற மீனவர்கள், 4 நாட்களுக்கு பிறகு சனிக்கிழமையன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலேயே மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குட்டி ரோந்துக் கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து மீனவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகியுள்ளனர். அப்போது சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மீனவர்கள் சிலரையும் தாக்கியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், அங்கிருந்து அச்சத்துடன் காலை கரை திரும்பியுள்ளனர்.

Leave A Reply