====கண்ணன் ஜீவா===
இந்தியாவில் இருந்து 8 ஆயிரத்து 500 கி.மீ தூரத்தில் இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. அதன் ஒரு முனையில் இந்திய ஆடவர் அணியும், மறு முனையில் இந்திய மகளிர் அணியும் மாறி மாறி தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் ஆண்கள் அணியைக் கொண்டாடிய அளவிற்கு இந்திய மகளிர் அணியைக் கொண்டாடவில்லை. இந்த (மன) நிலைக்கு யார் காரணம்? கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். முதல் ஒருநாள் போட்டியில் பூனம் ராவத் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஆட்டத்தை தொடங்க பூனம் ராவத் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதையடுத்து ஆடவந்த மிதாலி ராஜூவுக்கு எந்த பந்தையும் தரமால் அனைத்தையும் பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டு இருந்தார் மறுமுனையில் இருந்த மந்தனா. 21 வயதான அவரின் சூறாவளி ஆட்டத்தின் மூலம் 213 குவித்தது இந்திய அணி. இரண்டாவதாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பூனம் யாதவ் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் சூழலில் சிக்கி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இதே நிலைதான். பூனம் ராவத் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க மிதாலி வந்தார். இந்த ஆட்டத்திலும் மிதாலிக்கு வாய்ப்பு தர மந்தனாவிற்கு மனம் வரவில்லை. பொறுமையுடன் அவர் பந்துகளை சந்தித்து இறுதியாக 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த ஹர்மனி ப்ரீத் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மந்தனாவிற்கு நேர்மாறாக அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 302 ரன்களை குவித்தது. இதனைத் தொடந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அதே பூனம் யாதவ், ராஜேஸ்வரி கூட்டணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது .இறுதியாக முதல் போட்டியை விட ஒரு ரன் குறைவாக 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்கா. இதனால் இந்திய மகளிர் அணி தொடரையும் கைப்பற்றியது. இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேசப் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இந்தியாவின் ஜூலான் கோஸ்வாமி.
சம்பிரதாய போட்டியாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று மனதைத் தேற்றிக்கொண்டது தென் ஆப்பிரிக்கா. இப்படி முழுக்க இளம் வீராங்கனைகளால் மட்டும்தான் இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியமானது.
அப்படிப்பட்ட இவர்களை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேரலையில் ஒளிபரப்பக்கூட முயற்சி எடுக்கவில்லை. அதே தென் ஆப்பிரிக்காவில் இந்திய ஆடவர் அணி விளையாடிய போட்டி மூன்று அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்வாறு நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று அணித்தலைவர் மிதாலி ராஜ் வாரியத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு முறையும் ஒளிபரப்புக்கான உரிமை எங்களிடம் இல்லை என்று மற்றவர்கள் மீது பழியை போடுவதையே கிரிக்கெட் வாரியம் வழக்கமாகக் கொண்டுள்ளது. பிசிசிஐக்கே அக்கறை இல்லாத போது ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தான். இப்படி ஒவ்வொரு முறையும் பெண்கள் அணியின் மீது வெளிச்சம் படாமல் இருட்டில் மட்டுமே வைத்திருக்கிறது பிசிசிஐ. ஆனால் அதையும் மீறி தங்களின் வெற்றிகளின் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை உயர்வான இடத்திற்குக் கொண்டுசென்றுள்ளனர். இப்படிப்பட்ட சாதனைப் பெண்களை இருட்டிலேயே வைத்திருப்பவர்கள் யார் என்பதை இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
இது கூட முடியவில்லை
ஆடவர் அணியின் அனைத்துப் போட்டிகளும் பந்துக்கு பந்து டுவிட்டரிலும், பிசிசிஐ இணையத்திலும் நேரலையாகப் புதுப்பித்துக்கொண்டிருந்தனர். ஆனால் மகளிர் அணியின் போட்டிகள் 5 ஓவருக்கு ஒரு முறைதான் டுவிட்டரில் புதுப்பிக்கப்பட்டன. அதுவும் இரண்டு வரி மட்டும்தான். இதற்கு என்ன காரணம் என்பதை பிசிசிஐதான் சொல்ல வேண்டும். ஒரு வேளை ஆட்கள் பற்றாக்குறையாக இருக்குமோ? அல்லது மகளிர் என்றாலே அவர்களுக்கு இதுபோதும் என்று பொதுவாக ஆடவர்களிடம் காணப்படும் ஒருவிதமான மனக்கோளாறுக்கு பிசிசிஐ-யையும் விதிவிலக்கு இல்லையோ.4 விழுக்காடு
விளையாட்டுக் கட்டுரைகளில் 4 விழுக்காடும், விளையாட்டுச் செய்திகளில் 12 விழுக்காடு மட்டுமே பெண்களுக்கு இடம் தரப்படுவதாக யுனெஸ்கோ உதவியுடன் எடுக்கப்பட்ட உலக ஊடக கண்காணிப்பு திட்ட அறிக்கை கூறுகிறது. இதைப் பார்க்கும் போது விளையாட்டு ஒளிபரப்பில் கூட பாலின சமத்துவத்தை கொண்டு வரவேண்டியது இன்றைய கால கட்டத்தின் அவசரத்தேவைகளில் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.