புதுதில்லி:
மேற்கு வங்கத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் மேற்கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் ரயிலை ஏற்றிக் கொடூரமானமுறையில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யாவும், பொதுச் செயலாளர் மரியம் தாவலேயும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமையன்று ரயில்வேயைத் தனியாருக்கத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ரயில்வேலியில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
நடைபெற்ற போராட்டம் மத்திய பாஜக அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து நடைபெற்றபோதிலும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது பாஜக அரசை விமர்சித்த போதிலும், மத்திய அரசாங்கத்தின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி வெகுஜன அமைப்புகள் போராடினால் மட்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களாலும், காவல்துறையினராலும் சகித்துக்கொள்ள முடியாது தாக்குதல் தொடுப்பதை கண்டிப்பதற்கு வார்த்தைகள் போதுமான அளவிற்கு இல்லை. வெளிப்பார்வைக்கு மத்திய அரசை எதிர்ப்பதுபோல் திரிணாமுல் காங்கிரஸ் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் நடப்பது என்ன என்பதையே இக்கொடூரமான சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.
இந்த சம்பவத்தில் ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் தோழர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், உள்ளூர் ரயில் என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவதற்குப்பதிலாக, போராடிய பெண்கள் மற்றும் வாலிபர்கள் மீது ஓடவிட்டிருக்கிறார். இதில் நான்கு பெண்களுக்குக் கொடுங்காயங்கள் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் இக்கொடூர சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயக இயக்கங்களை நசுக்கிவிட முடியாது. இப்போராட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து உறுதியுடன் போராடிய மாதர்குல மாணிக்கங்களை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதிலிருந்து எங்களை எவரும் தடுத்துநிறுத்திட முடியாது.இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.