தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநாடு திருப்புமுனையாக அமையட்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான மையமான தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், மகாகவி சுப்ரமணிய பாரதியார் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களான என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது.

தற்போது நாடு வலதுசாரி, மதவாத சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஜனநாயக,மதச்சார்பற்ற கோட்பாடுகளுக்கும் சவால் ஏற்பட்டுள்ளது. நவீன தாராளமய கொள்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சர்வதேச நிதி மூலதனத்தின் தத்துவமாக நவீன தாராளமயம் உள்ளது. தற்போது முதலாளித்துவ நாடுகளால் நவீன தாராளமய நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. இதனால் பல்வேறு முதலாளித்துவ நாடுகள் இடையேயும் அதன் நட்பு நாடுகள் இடையேயும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.நவீன தாராளமய நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் அதிருப்தியால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியால், முதலளித்துவ நாடுகளில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை வலதுசாரிகள் பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயன்று கொண்டிருக்கின்றனர். உலக அரங்கில் ஏற்பட்டுள்ள வலதுசாரி திருப்பத்திற்கு நமது நாடும் விதி விலக்கல்ல. உலக நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் இது நடந்துள்ளது.

இதற்கு எதிராக மக்கள் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இடதுசாரிகள் பலமாக உள்ள நாடுகளில் இதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி முன்னேறுகிறார்கள். கிரீசில் சிரிசா என்ற இடதுசாரி அமைப்பு ஆட்சிக்கு வந்தது. உலக அரங்கில் வலது சாரி போக்கு இருந்தாலும் இடதுசாரிகள் தான், எதிர்காலத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய சக்தியாக உள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் பல்வேறு நாடுகளில் உள்ள வளங்களை பங்கு போட்டுக் கொள்கின்றன. நவீன தாராளமய நெருக்கடியால் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தால் அதன் நட்பு நாடுகளுக்கு பாதகமும் தீங்கும் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த நாடுகள் எதிர்க்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை புரட்சிகர முற்போக்கு சக்திகள் பயன்படுத்தி முன்னேற ஆக்கத்தையும், ஊக்கத்தையும் பெற வேண்டும்.ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் வலதுசாரி ஆதிக்கம் இருந்தாலும், இடதுசாரிகள் முன்னுக்கு வருகிறார்கள். தெற்குஆசிய பிராந்தியத்திலும் இந்தப்போக்கு உள்ளது. இந்தியாவில் வலதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் கூட நமது அண்டை நாடான நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் 62 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளன. முழுக்க, முழுக்க கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே ஆட்சி செய்கிற அரசாங்கமாக உள்ளது. இது மிக முக்கியமான அரசியல் வளர்ச்சிப் போக்கு ஆகும். 

இந்தியாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ள மத்திய பாஜக அரசு, மதவெறி தாக்குதல்களை இந்தத்துவா நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த ஏதேச்சதிகார பாதையில் செல்கிறது. பாசிச சித்தாந்தம் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் கட்டுக்குள் வைத்து பாஜக அரசு இயக்கப்படுகிறது. இந்த அரசு தாராளமயக் கொள்கைகளை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கூச்ச நாச்சமின்றி செயல்படுத்துகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் திட்டங்களை பாஜக அரசாங்கம் செயல்படுத்துகிறது.இதனால் விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு அதலபாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், தொழிலாளர்கள், விவசாயிகள் சாதாரண மக்களுக்கு எதிராக பாஜக அரசு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலின்படி அரசு நிர்வாகத்தையும், நிறுவனங்களையும் சீர்குலைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவான நபர்கள், உயர்கல்வி, கலாச்சார நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளளனர். அதன் வழிகாட்டலில் செயல்படக் கூடிய பல்வேறு அமைப்புகள் மதவெறி தாக்குதல்களை இஸ்லாமியர்கள் மீது தொடுக்கின்றன. நிதித்துறை, ராணுவம், அதிகார மட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை ஊடுருவச் செய்து கொண்டிருக்கின்றன. ஜனநாயக மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் மீது பாசிச தாக்குதல்களை நடத்துகின்றன.

நவீன தாராளமயம், இந்துத்துவா வகுப்புவாதம் என இருமுனை தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது. பாஜக அறிவித்த ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள், ஊழலற்ற நிர்வாகம் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.10 லட்சம் வேலை வாய்ப்புகளை கூட உருவாக்க முடியவில்லை. பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி, அந்நாட்டிற்கே சென்று புதிய ஒப்பந்தம் போட்டுள்ளார். விமானம் குறித்த விலையை கேட்ட போது, அது அரசாங்க ரகசியம் என்கின்றனர். விமானத்தின் உதிரி பாகங்களை தயாரிக்கக் கூடிய பணி, அணில் அம்பானி நிறுவனத்திற்கு 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோ நாடிக்கல் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு எந்தப்பணியும் வழங்கப்படவில்லை. மோடி அரசின் ஊழலாக இதைப்பார்க்க முடியும்.நடைமுறையில் பாஜக மிகப்பெரும் ஊழல் ஆட்சியாகத்தான் உள்ளது.மோடி அரசின் மோசமான கொள்கைகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பல்வேறு பகுதியினர் போராட்டங்களை மேற்கொள்கின்றனர். நவீன தாராளமயக் கொள்கை, மதவெறி, தலித் மக்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள், தனியார் மயத்தை எதிர்த்து போராட்டடக் களத்தில் இறங்கியுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட மக்களும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலித் மக்கள், குஜராத் மாநிலம், உனாவில் எழுச்சிகரமான போராட்டத்தை நடத்தினர். 

போராட்டங்கள்,இயக்கங்களை வளர்த்தெடுக்க, மக்களைத் திரட்டுவது நமது கடமையாக உள்ளது. முதலாளித்துவ நிலபிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்களை சுயேட்சையாகவும், கூட்டாகவும் நடத்த வேண்டும்.

பாஜக அரசின் மோசமான செயல்பாட்டால் பாதிக்கப்படுகிற மாணவர், வாலிபர், விவசாயிகள், தொழிலாளர்களை திரட்டி இந்துத்துவாவிற்கு எதிரான நாசகர பொருளாதார கொள்கைகளுக்கு போராட்டங்களை நடத்த வேண்டும். அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகள், அறிவு ஜீவிகள் கொண்ட மேடையை கட்ட வேண்டும். இந்து, இந்தி, இந்துஸ்தான் என உயர்சாதி ஆதிக்க தத்துவத்தை எதிர்த்தும் சமூக ஒடுக்குமுறையை எதிர்த்தும் போராட்டங்களை நடத்த வேண்டும். ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க போராட்டங்களை நடத்த வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்துடன் இணைந்து நடத்த வேண்டும். அப்போது தான் மதவாத வலதுசாரி சக்திகளை பின்னுக்குத் தள்ள முடியும். அதற்கு நமது சொந்த பலத்தை அதிகரிக்க வேண்டும். இடதுசாரி ஒற்றுமையைக்கட்ட வேண்டம். அப்போது தான் இதர ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட முடியும்.இடது ஜனநாயக அணியை கட்டுவதே நம்முன் உள்ள இலக்கு.
மதவாத எதிச்சதிகார பாதையில் செல்லும் பாஜக அரசை தோற்கடிக்க இந்தியாவில் அனைத்து ஜனநாய மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்ட வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றுக் கொள்கையை முன் வைப்போம். தூத்துக்குடி மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையட்டும்..

Leave A Reply

%d bloggers like this: