சேலம்,பிப்.16-
சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஜெய் ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் இயங்கி வந்த ஜெய் ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால் அதன் உரிமையாளர் ச.ரஞ்சித்குமார் மற்றும் மா.கோபி ஆகியோர் மீது டான்பிட் சட்டத்தின் கீழ் சேலம் பொருளாதார குற்றப்பிரிவினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி ச.ரஞ்சித்குமார் என்பவரின் சொத்துக்களான ஆத்தூர் வட்டம், அட்டவணை கொத்தாம் படி கிராமத்தில் 0.74 சென்ட் நிலம் குறைந்தபட்ச விலையான ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு ஏலம் விடப்படவுள்ளது.

சொத்துக்கள் தகுதி பெற்ற அலுவலர்களால் மார்ச் 1 ஆம் தேதியன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 115) பொது ஏலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏல நிபந்தனைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, பெத்தநாய்க்கன் பாளையம், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகங்களில் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏல தேதிக்கு முன்பாக ஆத்தூர் வட்டாட்சியர் மூலமாக மேற்படி நிறுவனத்தின் ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.