=====எம்.பாலசுப்பிரமணியன்=====                                                                                                                                                                    ஒரு வழியாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புக்கிடையில் நாடு முழுவதும் வருகிற மே 6 ஆம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நடைபெறும் என மத்திய அரசின் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
“வாழ்க்கையிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகி நிற்கும் கல்வி பொய்யும், பித்தலாட்டமும் ஆகுமென என்றென்றும் பிரகடனப்படுத்துவோம்” என்று மாமேதை லெனின் கூறிய கூற்று நீட் தேர்விற்கும் அப்படியே பொருந்தும்.

நீட்தேர்வைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கூறிய காரணங்கள்:
1) நாடு முழுவதும் பல்வேறு விதமான தனித்தனி நுழைவுத் தேர்வுகளிலிருந்து மாணவர்களை நீட் தேர்வு பாதுகாக்கும்.
2) மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போது நிலவும் ஊழல்கள், கட்டணக்கொள்ளைகள் முதலியன ஒழிக்கப்படும்.
3) ஒரே மாதிரியான மருத்துவ வர்க்கம் இந்தியா முழுவதும் உருவாகிட வழிவகுக்கும் என்பதாகும்.

பொய்யும் பித்தலாட்டமும்!                                                                                                                                                                               மேற்குறிப்பிட்ட காரணங்களில் முதலாவதை எடுத்துக் கொள்வோம். நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மாநில அரசுகள், தனியார் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் ராணுவ மருத்துவக் கல்லூரிகள் என 50க்கும் மேற்பட்டநுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாய நிலை உள்ளது என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.
இது ஒரு பலவீனமான வாதமாகவே உள்ளது. எப்படியெனில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 130 கோடி மக்கள் 22க்கும் மேற்பட்ட தேசிய
இனங்களின் மொழிகளையும், பழங்குடிகளின் மொழிகளையும், 100க்கும் மேற்பட்ட பேச்சு வழக்கில் உள்ள மொழிகளையும் கடந்து அன்றாடம் தமது வாழ்க்கையை எவ்வித சிரமமின்றி நடத்திக் கொண்டிருக்கும் போது, 50க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை நமது மாணவர்கள் எளிதில் கடந்து விடுவார்கள் என்பது புலப்படவில்லையா? ஆகவே, தர்க்க ரீதியாகவே மத்திய அரசின் மேற்கண்டவாதம் தளர்ந்துவிடுகிறது.களத்திலிருந்து கிடைத்துள்ள உண்மையான விபரங்களும் அரசின் வாதத்தை நிராகரிக்கும் படியாகவே உள்ளன.
2016ஆம் ஆண்டு அனைத்திந்திய கல்வி நிறுவனங்கள் நடத்திய பொது நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் ஆகும். இது, அப்போது மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வெறும் பத்து சதம் தான். அப்போது பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் இல்லை என்பதால் மீதமுள்ள 90 சதம் மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டவில்லை. அதாவது நீட்டை விருப்பத்துடன் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதாகும்.
பெருச்சாளிகளுக்கு விருந்து…
இரண்டாவதாக, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போது மலிந்துள்ள ஊழல்கள் மற்றும் கட்டணக்கொள்ளைகளை ஒழிக்கப்போவதாகக்கூறும் மத்திய அரசு அதை தடுப்பதற்கு நீட் தேர்வு முறையில் கையாளும் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்கிறது?
ஏற்கெனவே, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தி வந்த அகில இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துக் கட்டிவிட்டு, தற்போது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றியுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர் சேர்க்கையில் அரசின் கட்டுப்பாட்டையும், இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி கடைப்பிடிக்கப்படுவதையும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவங்கிட அனுமதிப்பதற்கான ஒழுங்காற்று விதிகளையும் கண்காணிப்பதாக இருந்தது. ஆனால் தேசிய மருத்துவ ஆணையமானது முன்பு மாணவர் சேர்க்கைக்கான கட்டணங்களை மாநில
அரசின் கட்டணக்குழுக்களே நிர்ணயித்த அதிகாரத்தைப்பறித்து 40 சதம் மட்டும் மாநில அரசுகள் நிர்ணயித்துக்கொள்ளவும், 60 சதமான இடங்களை தனியார் கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளது.
இத்தகைய தனியார்மயமே ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவதன் மூலம், அபரிமிதமான லாபத்தை கொள்ளையடிக்கத் துடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வாசலையும் திறந்து வைத்துவிட்டு, ஊழலையும், கட்டணக் கொள்ளையையும் ஒழிக்கப் போவதாகக் கூறுவது அப்பட்டமான அயோக்கியத்தனமின்றி வேறென்ன?
சமூக நீதிக்கு சவக்குழி
மத்திய அரசு குறிப்பிடும் மூன்றாவது காரணம், நீட் தேர்வானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ வர்க்கம் உருவாகிட வழிவகுக்கும் என்பதாகும்.
இன்று நாடு முழுவதும் உயர்கல்வியானது 70 சதம் தனியார்மயமாகிவிட்டது. மருத்துவக் கல்விக்கும் இது பொருந்தும். உயர்கல்வியில் சேரத் தகுதி உள்ள மாணவர்களில் 28 சதத்திற்கும் குறைவானவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணமாக நாடு முழுவதும் உள்ள தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் 30.9.2017 வரை காலியாகவே இருந்தன. இதற்கு நேர்மாறாக அதே ஆண்டில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 1 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அப்படியானால் அந்த 200 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட
வர்களைத் தவிர விண்ணப்பித்தவர்களில் மீதமுள்ள 1 லட்சத்து 88,800 பேரின் கதி என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
மேலும், நீட் தேர்வானது நேரடியாக இட ஒதுக்கீட்டை நிராகரிக்கவில்லை என்ற போதிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தான் நடத்தப்படும் என்னும் போது பெரும்பாலானவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் உள்ள பின்தங்கிய பொருளாதார மற்றும் சமூகப் பின்னணி கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற போதிலும், தமிழகம் போன்ற மாநிலத்தில் இது மிகவும் கடுமையான விளைவுகளை உண்டாக்கவல்லது. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த மிருந்த மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 1398 ஆகும். இதில் இட ஒதுக்கீடு போக அனைத்து சாதியினரும் ‘மதிப்பெண்’ அடிப்படையில் போட்டியிட்டு பெறக்கூடிய இடங்கள் 433. இதில் உயர்சாதியினர் 59 பேர் இடம் பிடித்தனர். இட ஒதுக்கீடு தவிர்த்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 14 பேரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 374 பேரும் பொது (open) போட்டியில் இடம் பிடித்தனர்.
இதில் முதல் 14 இடங்களைப் பிடித்தவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தில் தொடர்ந்து இடஒதுக்கீடு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதால் ஏற்பட்ட சமூக நீதியாகும்.
ஒரு வேளை அரசே நீட் தேர்வு பயிற்சி மையங்களை நடத்தினாலும், நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்றாலும் அனைவருக்கும் மருத்துவக் கல்வி அனுமதி கிடைத்துவிடுமா என்பது சந்தேகமே! ஏனெனில் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 462 மருத்துவக் கல்லூரி களில் சுமார் 63,000 இடங்களே உள்ளன எனும் போது, அதிலும் தற்போதைய தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி 60 சதம் இடங்களுக்கு தனியாரே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும் போது சமூகநீதி எந்த அளவுக்குப் பிற்பற்றப்படும் என்பது மட்டுமல்ல; பல லட்சங்களையும், கோடிகளையும் செலவழிக்க முடிந்த ஒருவரால் மட்டுமே மருத்துவராக முடியும் என்பது தெளிவு.
இது தவிர ஏற்கெனவே எய்ம்ஸ், பிஜிஐ, ஜிப்மர் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நடைமுறை இல்லை. அதே நேரத்தில் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட்டிலிருந்து ‘விலக்கு’ அளிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு இன்னும் சிறப்பான தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம்! அப்படி யானால் சாமானிய மாணவர்களுக்கு இந்த மும்மூர்த்தி களின் ‘ஆசி’ கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
ஆக மொத்தத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ வர்க்கம் உருவாகிட வழிவகுக்கும் என்று மத்திய அரசு கூறுவது பணவசதி படைத்த – உயர் நடுத்தர
மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தை – சாதியைச் சேர்ந்த மருத்துவ ‘வர்க்கமே’ யாகும்.
மருத்துவர்கள் பற்றாக்குறை தான் இந்திய பொது சுகாதாரத் துறையின் மிகப்பெரும் தடையாக உள்ளது. சீன மருத்துவர்களின் எண்ணிக்கையை அடைய, மேலும் கூடுதலாக 7 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவிற்கு தேவை.
ஆனால் ஆண்டிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மருத்துவர்களை மட்டுமே உருவாக்கக் கூடிய அளவில்தான் இந்தியாவில் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக்கல்விக்கு இந்தியாவில் உள்ள மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க மத்திய – மாநில அரசுகள் தேவையான கூடுதல் நிதி ஒதுக்குவது மட்டுமே இந்த இலக்கை அடைய ஓரளவிற்கு உதவும்.
அதுமட்டுமல்ல, கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை 200 சதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இதன்
மீது அக்கறை செலுத்த வேண்டிய அரசுகள் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யும் தொகையை குறைத்துக்கொண்டே வருகின்றன. இந்தப் பின்னணியில் நீட் தேர்வு முறை, ஏழைகளின் மருத்துவ உரிமையை நிச்சயம் பறிக்கும் என்பது தெளிவாகிறது.
நீட் தேர்வில் தமிழகமும், கேரளமும்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும் என அனைத்து தரப்பினரும் போராடி வரும் அதே வேளையில், கேரள அரசு நீட் தேர்வை ஆதரிப்ப
தாகக் கூறப்படும் விமர்சனங்களை சிலர் முன்வைக்கிறார்கள்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு நீட் தேர்வை மாநிலக் கல்வி வாரியத் தேர்வுக்கு மாற்றாகப் பார்க்கவில்லை. அதே நேரத்தில் கேரளாவில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில்,பயிற்றுவிக்கும் வகையிலான பொதுக்கல்வி முறையினை பலப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) மட்டும் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட உயர் கட்டமைப்புகளின் காரணமாக 1.4 லட்சம் குழந்தைகள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றல் சான்றுகளைப் பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கின்ற
னர். இவ்வாண்டும் 4775 பள்ளிகளில் கம்ப்யூட்டர்களை உள்ளடக்கிய 45000 உயர்தர (ஹைடெக்) வகுப்பறைகள் என்ற வகையில், அவற்றிற்குரிய ஒதுக்கீட்டுத் தொகையும் கேரள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பொதுக்கல்வி அமைப்பு முறையை பலப்படுத்திக் கொண்டே நீட் தேர்வையும் எதிர்கொள்வதென்பது கேரள மாணவர்களின் நலனைப் பாதுகாக்கின்ற ஒரு நடவடிக்கையாகும். அதே நேரத்தில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும், தற்போதுள்ள நிலைமையில் பொதுப்பட்டியலிலிருந்து மத்திய அரசு அதிகாரத்திற்கு கொண்டு செல்லும் எந்தவொரு முயற்சியையும் கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசு எதிர்த்தே வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.ஆனால் தமிழக அரசின் அணுகுமுறை என்ன?
தமிழக அரசின் அணுகுமுறை
தமிழக ஆட்சியாளர்கள் பொதுக் கல்வி முறையினை சீர்குலைத்து, 70 சதவீதம் தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து விட்டனர். இதன் காரணமாக நீட் தேர்வில் பங்குகொள்ளும் தமிழகத்தின் மாணவர்கள் பெரும் கட்டணக் கொள்ளைக்கு ஆளாகவே நேரிடும்.அதுமட்டுமல்ல மருத்துவம் போன்ற உயர்கல்விக்கு மத்திய அரசு எப்படி நிதியினை வெட்டிச் சுருக்குகிறதோ அதேபோல தமிழக அரசும் நிதியினை வெட்டிச் சுருக்குகிறது.
உதாரணமாக 2017-18 ஆம் ஆண்டிலிருந்து தலித்,பழங்குடி மாணவர்களுக்கான உதவித் தொகை மூன்றிலொரு பங்காக வெட்டப்பட்டிருக்கிறது.
மருத்துவப் படிப்பில் ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட ரூ.12,50,000 வரை யில் உதவித்தொகை கிடைத்து வந்தது. இவ்வாண்டு முதல் ரூ.4,00,000 வரைதான் கிடைக்கும். பொறியியலில் 85,000
வரை தான் கிடைக்கும். இதர பிரிவுகளிலும் இதே நிலை தான்.எனவே கேரளாவில் பொதுக்கல்வி முறையை பலப்படுத்தும் நடவடிக்கையோடு ஒப்பிட்டால், தமிழக அரசின் அணுகுமுறை எவ்வாறு தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இது மட்டுமின்றி, நீட் தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் படி எழுப்பப்படும் கேள்விக்கான விடை என்னவாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றியதாக- அதாவது அதன் உள்ளடக்கத்தைப் பற்றியதாக இருக்கவில்லை – மாறாக எவ்வாறு விடையளிக்க வேண்டும் என்பதைப் பற்றிய தேர்வு வடிவமாக உள்ளது.
எந்தவொரு வடிவமும் அதற்கு ஒத்திசைவான உள்ள டக்கத்தையும் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வடிவத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் இடையிலான முரண்பாடு பற்றி இறுதியில் அந்த வடிவமே அகற்றப்படலாம்.
எனவே, மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை திணித்த பின்பு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் கல்வி அமைப்பு முறையை நீடிக்க
அனுமதிக்காது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதனை அகற்றுவதற்கே முயலும்.
மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்று துவங்கி இடைநிலைக் கல்விக்கான பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலைக்கல்விக்கான நவோதயா பள்ளிகள் என உந்தித்தள்ளும்.
இந்நிலை தொடருமானால் கல்வியை பொதுப்பட்டி யலிலிருந்து மத்திய அரசின் அதிகாரப்பட்டியலுக்குள் கொண்டு வருவது அவர்களுக்கு கடினமான பணியாக இருக்காது!
எனவே, நீட் தேர்வானது வெறும் தேர்வு முறை மட்டுமல்ல – மதச்சார்பற்ற கல்வியை அடித்தளமாகக் கொண்ட இந்திய கல்வி அமைப்பு முறையின் மேல் படர்ந்துள்ள சிலந்தி வலையாகும்.
கட்டுரையாளர் : சிபிஎம் மதுரை மாநகர்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.