கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்டது திப்பம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரான பொள்ளாச்சி வ.ஜெயராமனின் இல்லம் இக்கிராமத்தில் தான் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சேமிப்பு நிதி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2014-15 ஆண்டில் ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டது.

ஆனால், இந்த கழிப்பிடத்திற்கு போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தராததால் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மூடப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தற்போது திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த முதியோர், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தூய்மை இந்தியா எங்கே?
முன்னதாக, கோவையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநருடன், துணை சபாநாயகரான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து சென்றார். ஆனால், அவரது சொந்த கிராமமான பொள்ளாச்சி திப்பம்பட்டியில், அதுவும் அவரது வீடு அமைந்துள்ள 200 மீட்டர் தொலைவிலே கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் கடந்த பல மாதங்களாக முள்செடிகளால் மூடப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தவரின் கிராம மக்களே திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையை ஏற்படுத்தலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

-மணியாழன்

Leave A Reply

%d bloggers like this: