திருப்பூர், பிப். 16-
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருப்பூரில் தங்கி பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களில் ஒரு சிலர் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி வருவதால் காவல்துறையினர் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த ஸ்ரீ நகர் கே.ஜி.நகரில் நைஜீரியர்கள் ஒரு சிலர் பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாகவும் அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகர காவல்ஆணையர் நாகராஜன் உத்தரவின் பேரில் வியாழனன்று அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு தலைமையில் காவலர்கள் நைஜீரியர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது,அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்த 6 நைஜீரியர்களை அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த நுவான்க்பே ஒனேகாக் (வயது 31), நிக்கோலஸ் உச்சேனா யூசிப் (38), ஒனாஜிடே (31), நெல்சன் ஓ பேக்போ (32), நுவோனு ஓ க்வூடி (34), டாய் டினேபில்சி (35) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாஸ்போட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல்ஸ்ரீநகர் பகுதியில் தங்கி பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், அந்த 6 பேரிடமும் அவர்களுடைய சொந்த நாட்டில் வழங்கப்பட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. இதையடுத்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை திருப்பூர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்பு அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இதேபோல், திருப்பூர் ராயபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஸ்டீபன் (30), ஜான்சன் (32) ஆகியோரை வடக்கு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: