விருதுநகர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும் தூத்துக்குடிக்கு தியாகி சங்கரலிங்கனார் நினைவுச் சுடர் இன்று புறப்பட்டது.சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிட வலியுறுத்தி விருதுநரில் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் இறப்பதற்கு முன், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, அவரது உடலை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்பு, அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அண்ணா முதல்வர் ஆனதும் சென்னை மாகாணம் என்பது மாற்றப்பட்டு தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்டது.அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாட்டிற்கு தியாகி சங்கரலிங்கனார் நினைவுச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. அதன் துவக்க நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சங்கரலிங்கனார் நினைவு மண்டபத்திலிருந்து நினைவுச் சுடர் புறப்பட்டது.
முன்னதாக சங்கரலிங்கனாரின் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். நகர்க்குழு உறுப்பினர்கள் தேனிவசந்தன், எஸ்.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நினைவுச் சுடரை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் எடுத்துக் கொடுக்க, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த சுடர்ப் பயணம், அல்லம்பட்டி, பாத்திமாநகர், தேசபந்து மைதானம், மல்லாங்கிணறு, திருச்சுழி, பாலையம்பட்டி வழியாக தூத்துக்குடியில் மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்தப் பயணக்குழுவில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், எம்.தாமஸ், வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் மீ.சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.