கோவை, பிப்.16-
கோவையில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவன ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் கூறியதாவது: தமிழக அரசு தமிழ்நாடு தொழில் நிறுவன வசதி அமைப்பு அவசரசட்டம் 2017 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து மாவட்ட அளவிலான ஒற்றை சாளர இடர் நீக்க வசதி அமைப்பு குழுமூலம் விரைந்து பெற்று தரப்படும். இச்சட்டம் குறித்து விரிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தொழில்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட அளவிலான வசதி அமைப்பு குழு, மாதத்திற்கு இரண்டு முறை கூடி மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பெற்றுதரும். மேலும்,

இந்த அவசர சட்டத்தின்படி, தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு கால கெடுவுக்குள் ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும், தவறான தகவல் அளித்து விண்ணப்பம் அளிக்கும் தொழில் நிறுவனத்தின் மீது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அசோகன், கொடிசியா தலைவர் சுந்தரம், இந்தியதொழில் வர்த்தக சபை துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார த்துறை கூடுதல் இயக்குநர் அருள் மற்றும் அனைத்து செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.