கோவை, பிப். 16-
பேச்சுவார்த்தை நடத்த சென்ற கரும்பு விவசாய சங்கத்தின் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை நிர்வாக மேலாளரை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை நான்கு வருடத்திற்கும் மேலாக தராமல் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை இழுத்தடித்து வருகிறது. ஆலை நிர்வாகத்தின் செயலை கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வெள்ளியன்று சக்தியமங்கலத்தில் உள்ள ஆலை நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது, பலநூறு கோடி ரூபாய்நிலுவை தொகையை விவசாயிகளுக்கு தராமல் இழுத்தடிப்பது என்ன நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் பண்ணாரியம்மன் ஆலையின் மேலாளர்கந்தசாமி திடீரென கரும்பு விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி அருகில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இதனை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், அன்னூரில் கரும்பு விவசாய சங்கத்தின் பொகலூர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமதுமுசீர், சரவணன், சுகுமார் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் குப்பேபாளையம் ஆறுக்குட்டி, செல்லப்பாளையம் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பண்ணாரியம்மன் ஆலை நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: