திருப்பூர், பிப்.15 –
வங்கிக் கடன் தள்ளுபடி கேட்டு தமிழக முதல்வரை சந்தித்து முறையிடுவது என்று திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 90 சதவிகித விசைத்தறிகள் கூலிக்கு நெசவு செய்பவை என்ற வகையின் கீழ் வருகின்றன. சமீப காலமாக தொழில் முடக்கம் காரணமாக விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒப்பந்த கூலியைக் கூட பெறமுடியாத நிலை உள்ளதால், பலர் தற்கொலை விளிம்பில் இருப்பதாக விசைத்தறியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்களின் வங்கிக் கடன்  ரூ.65 கோடி வரை உள்ளதால், மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அனைத்து விசைத்தறியாளர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்நிலையில், விசைத்தறி சங்க கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியை திங்களன்று நேரில் சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்தனர். இதன்பின் விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், அரசிடம் கடனைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல் வங்கியாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு இதில் ஏதேனும் சலுகை நடவடிக்கை எடுக்க முடிந்தால், அதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை சந்தித்து கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை விடுத்தோம். வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து பேசுவதாக அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளோம். அப்போது, எங்களது கூலி விவகாரம் குறித்தும் பேசி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.