புதுதில்லி:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அளவிற்கு பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார்.

அவர் ஒரு மாதத்திற்கு முன்பே இந்தியாவிலிருந்து ஓடிவிட்டதாகவும், தற்போது, சுவிட்சர்லாந்தில் அவர் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கு 100 கடைகளையாவது திறக்க வேண்டும் என்பதே அவரின் திட்டமாக இருந்து என்று கூறப்படுகிறது. இதற்குத்தான் அவர் பஞ்சாப் நேசனல் வங்கியைப் பயன்படுத்தி ரூ. 11 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கிறார்.பொதுவாக, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்கள், இந்திய வங்கிகளிடமிருந்து குறைவான வட்டி விகிதத்தில் வெளிநாட்டு நாணயக் கடனை பெறுவார்கள். இதற்காக, பஞ்சாப் நேசனல் வங்கியின் துணை நிர்வாகியான கோகுல்நாத் ஷெட்டியை வசப்படுத்திய நீரவ் மோடி, அவர்மூலம் வெளிநாட்டு நாணயக் கடனை, ‘ஸ்விப்ட்’ தகவல் அமைப்பு மூலமாக கடனுக்கு ‘உத்தரவாதம்’ அளிக்கும் முறையில் பெற்றுள்ளார்.

அதாவது நீரவ் மோடி எந்த வங்கியிடமிருந்தும் கடன் பெற்றுக் கொள்ளலாம். அந்த கடனுக்கான உத்தரவாதத்தை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கும்
இதனடிப்படையில்தான் வெளிநாட்டில் உள்ள பல இந்திய வங்கிகள் வெளிநாட்டு கரன்சியாக நீரவ் மோடிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக அள்ளிக் கொடுத்துள்ளன. வெளிநாட்டில் வங்கிக் கிளைகள் வைத்துள்ள பல இந்திய வங்கிகளே பெருவாரியாக கடனை வழங்கியுள்ளன.

இந்நிலையில்தான், ஜனவரி மாதம் பஞ்சாப் நேசனல் வங்கி அளித்துள்ள ‘உத்தரவாதம்’ முடிவடைந்தும் பணம் வராததால், என்ன ஆனது? என்று மற்ற வங்கிகள் கேட்க, பிரச்சனை பூதாகரமாகத் தொடங்கியுள்ளது.பஞ்சாப் நேசனல் வங்கி தலைமையகமும், அப்போதுதான் நீரவ் மோடி தங்களை மோசடி செய்துவிட்டார் என்பதை அறிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்தே, முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாயை நீரவ் மோடி முறைகேடாக பெற்றதாக கூறி கடந்த ஜனவரி 29-ஆம் தேதி, சிபிஐ-யிடம் புகார் அளித்த பஞ்சாப் நேசனல் வங்கி, இந்த மோசடிக்கு துணைபோனதாக தனது வங்கி ஊழியர்கள் 10 பேரை, பணி இடைநீக்கமும் செய்தது.இதனிடையே, வங்கி அளித்த புகாரின் பேரில், நீரவ் மோடி மற்றும் அவரது மனைவி அமி, அண்ணன் நிஷால், மாமா மேகுல் சோக்‌ஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் என்ற கிளர்க் உள்ளிட்டவர்கள் மீது ஐபிசி 120பி கீழ் கிரிமினல் நடவடிக்கை, 420 கீழ் மோசடி வழக்கு மற்றும் பிற ஊழல் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஜனவரி 31-ஆம் தேதி நீரவ் மோடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றையும் நடத்துகின்றனர். எனினும் நீரவ் மோடி உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னொருபுறத்தில், நீரவ் மோடியின் மோசடி குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய பஞ்சாப் நேசனல் வங்கி, தாங்கள் சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை நீரவ் மோடியிடம் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறது.

இந்த கடன் மதிப்பானது 2016-2017 நிதி ஆண்டில் பஞ்சாப் நேசனல் வங்கி பெற்ற லாபத்தை விட 8 மடங்கு அதிகம். பஞ்சாப் நேசனல் வங்கியின் சந்தை மதிப்பான 35 ஆயிரத்து 300 கோடிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பின்னர்தான், நீரவ் மோடி ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டதாக மத்திய புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ), புதனன்று அவசர அவசரமாக இரண்டு புகார்களை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கிறது. இந்த மோசடி ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாறுகிறது.அதைத் தொடர்ந்துதான், வியாழக்கிழமையன்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர். அவர்கள் நீரவ் மோடியின் குர்லா பகுதியில் அமைந்த இல்லம், காலா கோடா பகுதியில் அமைந்த அவரது நகை கடை, பந்திரா மற்றும் லோயர் பேரல் பகுதிகளில் அமைந்த 3 நிறுவனங்கள், குஜராத்தில் சூரத் நகரில் 3 இடங்கள் மற்றும் தில்லியில் சாணக்யபுரி மற்றும் டிபென்ஸ் காலனி பகுதிகளில் அமைந்த ஷோரூம்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தினர். மும்பையில் உள் நீரவ் மோடியின் வீட்டுக்கு சீலும் வைத்தனர். நீரவ் மோடி கைது செய்யும் முயற்சியிலும் இறங்கினர்.

அப்போதுதான், நீரவ் மோடி தற்போது இந்தியாவிலேயே இல்லை. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பியோடி விட்ட தகவல் கிடைத்துள்ளது.மேலும், விஜய் மல்லையா, லலித் மோடி, தீபக் தல்வார் மற்றும் சஞ்சய் பண்டாரி வரிசையில் நீரவ் மோடியையும், மத்திய பாஜக அரசு தப்பவிட்டதும் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: