திருப்பூர், பிப். 15 –
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்த கட்சியின் துண்டறிக்கையில் பிரசுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை திருப்பூரில் நடைபெற்றது. இந்நிலையில், திருப்பூர் கே.வி.ஆர். நகர் பள்ளி நல்லூர் சமுதாய நலக்கூடம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையத்திலும் முருகன் மக்களைச் சந்தித்து மனுக்கள் பெற இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவி நிற துண்டறிக்கை அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தாழ்த்தப்பட்
டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் அரசு சார்ந்த அலுவலராக இங்கு வருகிறார். இச்சூழலில் அரசு சார்பிலான ஆணையத்தின் நிகழ்ச்சியை ஆதாயம் தேடும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சொந்த நிகழ்ச்சிபோல் இந்த துண்டறிக்கையில் காட்டியுள்ளனர். மேலும், இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் வி.சக்திவேல், தனி வட்டாட்சியர் அ.ரவிச்சந்திரன் ஆகிய அரசு அலுவலர்களின் பெயரும் பாஜக கட்சி நிர்வாகிகள் பெயருடன் சேர்த்து அச்சிடப்பட்டு, அதன் கீழே பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையும் அச்சிடப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இதுபோல் துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டால் அரசு அதிகாரிகள் பெயர் தவிர்க்கப்பட வேண்டும் என்பது விதி. அதேபோல் தனிப்பட்ட எந்தவொரு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் அரசு அதிகாரிகள் பங்கேற்கக் கூடாது என்பதும் அரசு அலுவலர் நடத்தை விதிமுறையில் உள்ளது. ஆனால், இந்த துண்டறிக்கையில் வெளிப்படையாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பெயர் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கேட்டபோது, “பொதுவாக மத்திய அரசு,மாநில அரசு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நியமன அலுவலர்கள் வரும்போது மாவட்ட ஆட்சியர் உடன் சென்று நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது மரபு. எனினும் அரசியல் கட்சியின் துண்டறிக்கைகளில் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயர் பிரசுரிக்கக் கூடாது. என்னிடம் யாரும் இது பற்றி தொடர்பு கொண்டு அனுமதி கேட்கவும் இல்லை. அவ்வாறு துண்டறிக்கை அச்சிட்டிருப்பதும் தெரியாது. மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் இது பற்றி விசாரிக்கிறேன்.” என்றார்.

அரசமைப்புச் சட்டத்தையோ, அதன் மாண்பையோ மதிக்காத கட்சி பாரதிய ஜனதா. எனவே அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என்ற வேறுபாடு இல்லாமல், தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இழிவான முறையில் பித்தலாட்டத்தில் ஈடுபடுவது அக்கட்சிக்கு கைவந்த கலை. அரசு சார்ந்த நிகழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நடத்துவதுடன், அதில் மாவட்ட அரசு அதிகாரிகளையும் பங்கேற்கும் விதத்தில் ஏற்பாடு செய்திருப்பது இந்த அற்பத்தனமான பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறது.

-(ந.நி).

Leave a Reply

You must be logged in to post a comment.