திரிபுராவில் ஆட்சியில் இருந்து வரும் இடதுசாரி அரசிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய சவாலை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். இச்சவாலை எதிர்கொள்ள உங்களது கட்சி எத்தகைய தயாரிப்பை மேற்கொண்டுள்ளது?
எங்களது கட்சி நல்ல தயாரிப்போடு களத்தில் முழுமையாக நிற்கிறது.
அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடன், கூடுதல் இடங்களில் வெற்றியோடு இடதுமுன்னணி அரசை எட்டாவது முறையாக அமைப்போம் என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்கத்துவங்கியுள்ளனர். உண்மையாக சொல்லப்போனால், மக்களிடமிருந்து வெளிப்பட்ட இம்முழக்கத்தையே எடுத்து நாங்கள் எங்களது இடது முன்னணியின் தேர்தல் அறிவிப்பில் இணைத்துள்ளோம். எங்களது மாநிலத்தில் உள்ள எளிய மக்களின் மனநிலை இதுவேயாகும்.

2008ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளை மிகப் பெரிய அளவில் எதிர்த்தது. எனினும், உங்களது அரசை கவிழ்ப்பதில் அவர்கள் தோல்வியைத் தழுவினர். இப்போதைய சவாலையும், 2008ல் நீங்கள் சந்தித்த சவாலையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தேர்தல் என்பது எப்போதுமே ஓர் அரசியல் போராட்ட சவாலாகும். தேர்தல் என்பது அரசியல் போராட்டத்தின் உயர்வான வடிவமாகும். எங்களது புரிதலின்படி அது ஓர் நம்பிக்கைக்கான போராட்டமாகும் (trust battle). எனவே, எதிர்த்தரப்பில் இருக்கும் எவரும் அனைத்து முனைகளிலும் அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் அவர்களால் இயன்ற அளவு பயன்படுத்திடவே பார்ப்பார்கள். எங்கள் தரப்பிலிருந்து, எல்லாவிதமான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம். எந்தவொன்றையும் செய்யத் தவறிடமாட்டோம். அதுவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதமர் உங்களது பெயரை வளைத்து, ‘மாணிக்’ மற்றும் ‘வைரம்’ என பேசி வருவது குறித்து நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இது கட்சியின் மீதான தாக்குதல் அல்லது உங்கள் மீதும், உங்களது அரசின் மீதுமான தாக்குதல் ஆகும். இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
இல்லை, இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தல் என்பது இரண்டு தனி நபர்களுக்கு அல்லது இரண்டு ஆளுமைகளுக்கு இடையேயான போட்டி அல்ல. இது தத்துவங்கள், அரசியல், திட்டம் மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியன குறித்த போராட்டமாகும். எனவே, அவர் (மோடி) அவரது வர்க்க கண்ணோட்டத்தையும், புரிதலையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், அவர் தனது கட்சிக்கு சாதகமாக, அவர் நம்பிக்கை கொண்டுள்ள அவரது சொந்த தத்துவங்களுக்கு சாதகமாகப் பேசுகிறார்.

உண்மையில் எனது தத்துவார்த்த நிலைபாடு அல்லது அரசியல் புரிதல் அல்லது வர்க்க கண்ணோட்டம் ஆகியவற்றின் பக்கத்தில் நான் நிற்கிறேன். எங்களுக்கு சொந்தமான திட்டம் இருக்கிறது. மக்களுக்கு சாதகமான திட்டம் இருக்கிறது. அது குறித்து சொந்த அனுபவம் கொண்டுள்ள மக்களிடம் அதனை நாங்கள் கொண்டு செல்கிறோம். எந்தவொரு மனிதருக்கும் அனுபவமே மிகச் சிறந்த நடுவரும், ஆசிரியரும் ஆகும். எல்லாவற்றையும் நாங்கள் எளிய மக்களிடமே விட்டு விடுகிறோம். அவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களது உடல் மொழி மிகத் தெளிவாக உள்ளது.

அப்படியானால், நீங்கள் நம்பிக்கையோடு உள்ளீர்கள்?
நான் கொண்டுள்ள இந்த நம்பிக்கையானது, நான் கூர்ந்து கவனித்து வரும் மக்களிடமிருந்து பெறப்பட்டதே ஆகும்.

மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்திட பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இடதுசாரிகள் கூறி வருகிறீர்கள். என்ன அடிப்படையில், ஏன் இடதுசாரிகள் இவ்வாறு கூறுகிறீர்கள்?
பகுத்தறிவுக்கு ஒவ்வாத கூட்டணியை அவர்கள் உருவாக்கியிருப்பதாலேயே நாங்கள் இவ்வாறு கூறுகிறோம். திரிபுராவைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி(ஐபிஎப்டி) கூறி வருகிறது. எனவே, பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடி அல்லாதோர்
இடையே பிரிவினையை ஏற்படுத்திடவே முக்கியமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. பழங்குடியினத்தவர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் ஆகியோருக்கு இடையே காணப்படும் ஒற்றுமையே திரிபுராவில் ஜனநாயக இயக்கங்களின் பின்னணியாக உள்ளது. இத்தகைய ஒற்றுமையின் அடிப்படையிலேயே இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசுகள் உருவாகின, தழைத்தன. இத்தகைய முன்னேற்றத்தின் மீதே இடதுசாரி அரசு தோன்றியது.
இடதுமுன்னணி அரசை அவர்கள் குறி வைக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? இந்த ஒற்றுமையை சீர்குலைக்காமல் – பழங்குடியினத்தவர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையே இடைவெளியை ஏற்படுத்திடாமல், அவர்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாது. எனவேதான் ஐபிஎப்டி அமைப்பை பாஜக பயன்படுத்துகிறது. அவர்களது அரசியல் கூட்டணியை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அவர்களது கட்சிதான் தேசிய அளவிலான கட்சி என்றும், இந்தியாவின் ஒற்றுமையையும், வாய்மையையும் அவர்கள்தான் உயர்த்திப் பிடிப்பதாகவும், இந்தியாவின் இறையாண்மையை அவர்கள்தான் பாதுகாத்திடுவதாகவும் பாஜக கூறி வருகிறது.
இத்தகைய கூற்று உண்மையானால், எல்லாவற்றையும் நன்கு தெரிந்து கொண்டே, திரிபுரா இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகிற ஐபிஎப்டியுடன் அவர்கள் அரசியல்
ரீதியாக கூட்டணி அமைக்கிறார்கள். திரிபுரா ஒரு சிறிய மாநிலம். 10,400 சதுர
அடியில், 40 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சின்னஞ்சிறு மாநிலமாகும்.
இன்றளவும் சட்டவிரோதமான அமைப்பாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பாகிய திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்எல்எப்டி) எனும் அமைப்பாலேயே ஐபிஎப்டி துவக்கப்பட்டுள்ளது. இவர்களது முகாம்கள் வங்கதேசத்தில் உள்ளன. திரிபுராவினுள்ளும் இவர்களது முகாம்கள் இருந்தன. அவற்றை எல்லாம் நாங்கள் அழித்தோம். அவர்களை நாங்கள் சுற்றி வளைத்தோம்.
ஒரு காலகட்டத்தில் திரிபுராவில், பதற்றம் நிறைந்த பகுதிக்கான சட்டமாகிய ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் இருந்தது. இவற்றை எல்லாம் நாங்கள் இல்லாமல் செய்தோம். கலவரமற்ற சூழலை, அமைதியை, ஒற்றுமையை, நட்புறவை நாங்கள் திரும்பக் கொண்டு வந்தோம். பின்னர், இவை எல்லாவற்றின் அடிப்படையில் நாள்தோறும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இத்தகையதொரு நிலையில், எதற்காக பாஜக இவர்களோடு கூட்டணி அமைக்கிறது?
v நீங்கள் கூட குறிப்பிட்டீர்கள்?
இது மிக மிகத் தெளிவாக உள்ளது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மாற்றுப் பாதை எது என்பதை திரிபுராவில் உள்ள இடது முன்னணி அரசு காட்டி வருகிறது. மேலும், வர்க்கப் போராட்டமோ அல்லது வெகுஜன போராட்டமோ, போராட்டக் களத்தில் உள்ள மக்களும் தற்போது ‘நமது தேசத்தில் சாதாரண மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தலைவர்களை மாற்றுவது மட்டும் போதாது’ என கூறத் துவங்கியுள்ளனர்.
மக்களுக்குத் தேவை மாற்றுக் கொள்கைகள்; மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள்; சாதாரண மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட கொள்கைகள். திரிபுரா போன்றதொரு சின்னஞ்சிறிய மாநிலத்தில், மத்திய அரசின் முறையான ஆதரவும், உதவியும் இல்லை; சொல்லப் போனால், மக்களுக்கு எதிரான தடைக்கல்லை உருவாக்கிடவே அவர்கள் முயன்று
வருகிறார்கள். திரிபுராவின் சாதாரண மக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு
மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை உண்மையில் அவர்கள் செயல்படுத்தி
உள்ளார்களா? அவர்களால் இதனை செய்திட இயலுமெனில், அவர்கள் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசில் இதனை ஏன் அவர்கள் செய்திடக் கூடாது? நாட்டிலுள்ள இதர மாநிலங்களில் ஏன் இதை செய்திடக் கூடாது?
எனவேதான் பாஜக திரிபுராவில் மக்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்கிறோம். இப்போது, தேர்தலுக்காக பாஜகவினர் உறக்கமின்றி இரவுகளை கழித்து வருகின்றனர். பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் என மத்திய அமைச்சரவையின் முக்கியப் புள்ளிகள் எல்லோரும் திரிபுராவில் இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். திரிபுரா ஒன்றும் உத்தரப்பிரதேசத்தைப் போன்றதொரு பெரிய மாநிலமல்ல. 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டுள்ள ஓர் சிறிய மாநிலம் ஆகும்.
v ஆனால், தேர்தல்களை இடதுசாரிகளுக்கு எதிரான தத்துவார்த்த போராட்டமாகவே பாஜகவும் பார்த்து வருகிறது, இல்லையா?
அது சரிதான். எந்தவொரு தத்துவமோ அல்லது அரசியல் புரிதலோ இல்லாமல் திட்டங்களை உருவாக்கிட இயலாது. பொருளாதார திட்டம் போன்ற எந்தவொரு திட்டமும் உங்களது தத்துவார்த்த புரிதல், அரசியல் மற்றும் வர்க்க புரிதல் ஆகியவற்றிலிருந்தே உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும்.
v பாஜக எழுப்பி வரும் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்சனை குறித்தும், அவர்கள் அமலாக்கிட உள்ள 7வது ஊதிய பரிந்துரை குறித்தும் உங்களிடம்
கேட்க விரும்புகிறேன். இவை குறித்த தங்களது கருத்து என்ன?
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது தேசிய அளவில் பற்றி எரிகிற ஓர் பிரச்சனையாகும். இந்திய தேசம் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பீடிக்கப்பட்டு இல்லை என்பது போலவும், திரிபுராவில் மட்டுமே இப்பிரச்சனை காணப்படுவது போலவும் அவர்கள் பேசி வருகின்றனர். இது நியாயமானதா? வேலையில்லாத் திண்டாட்ட பிரச்சனை என்பது நாட்டில் இந்த மாவட்டத்தில் இல்லவே இல்லை என ஏதேனும் ஒரு உதாரணத்தை யாராலும் அளித்திட இயலுமா? வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையிலிருந்து எந்தவொரு மாவட்டமும் விடுபடவில்லை. இப்பிரச்சனை பெருமளவில் அதிகரித்து வருகிறது. நமது தேசத்தில் இந்த நொடிப் பொழுதில், வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 25 கோடிகளைத் தாண்டியுள்ளது. அதற்கும் கூடுதலாகவும் இருக்கும். இதுவே தற்போதைய நிலைமையாகும்.
மத்திய அரசிடம் 45 லட்சங்களுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களை எல்லாம் அவர்கள் காணாமல் போகச் செய்துவிட்டார்கள், அவற்றை கலைத்து விட்டார்கள். இந்த காலிப் பணியிடங்களை எல்லாம் நிரப்பப் போவதில்லை என அவர்கள் ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். எந்தவொரு புதிய பணியிடங்களையும் அவர்கள் ஏற்படுத்துவதில்லை அல்லது எந்தவொரு பணிநியமனத்தையும் அவர்கள் செய்வதில்லை.
அதற்குப் பதிலாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக 98 லட்சம் மக்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அதே நேரத்தில், ஒன்றன் பின் ஒன்றாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் எல்லாவற்றின் காரணமாக தனியார் ஏகபோக மூலதனம் ஆதாயம் பெற்று வருகின்றது. லாபத்தை அதிகரிக்கச் செய்திட தொழிலாளர்களின், ஊழியர்களின் எண்ணிக்கையை அவர்கள் குறைத்திடுகின்றனர். குறைந்தபட்ச எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், அதிகபட்ச வேலைநேரம், மிகக்குறைந்த கூலி என்பதையே செயல்படுத்தி வருகின்றனர். தனியார் துறையினர் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர்.
அதன் விளைவாக, யார் வேலையில் இருந்து வந்தார்களோ அவர்கள் வேலையை இழந்துள்ளனர். மேலும், யார் வேலையில் இருக்கிறார்களோ, அவர்களும் வேலையை இழக்கப் போகின்றனர். அப்படியானால், வேலையில்லாத இதர இளைஞர்களுக்கு எங்கிருந்து வேலை கிடைத்திடும்? நமது நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2 கோடி பேர் வேலைதேடுவோராக வருகின்றனர்.
ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என 2014 தேர்தலின் போது பாஜக வாக்குறுதி அளித்தது. அப்படியானால், தற்போது வரை 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களது வாக்குறுதி என்னவாயிற்று? இந்நிலையில், தொழிற்சாலை
களை வானத்தில் வடிவமைத்திட இயலாது. எனவே, எங்களது சிறிய மாநிலத்தில் அதற்கு முறையான கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. இதற்கு முன்னர் இங்கு ரயில் கிடையாது; முறையான தேசிய நெடுஞ்சாலை கிடையாது, மின்சாரம் கிடையாது, தொலைத்தொடர்பு வசதிகள் கிடையாது.
v ஆனால், தற்போது நீங்கள் மின்சாரத்தை வங்கதேசத்திற்கு அனுப்பி வருகிறீர்களே?
இவை எல்லாம் இங்கு இருக்கவில்லை. இந்நிலையில், ஒருபுறம் நாங்கள் எல்லா காலிப் பணியிடங்களையும் நிரப்பி வருகிறோம். வேலையிலிருந்து ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதால் அப்பதவிகள் காலிப் பணியிடங்களாவது சாதாரண நிகழ்வே. எனவே, நாங்கள் இத்தகவல்களை எல்லாம் சேகரித்து குறித்த காலங்களில் அவற்றை நாங்கள் நிரப்பி வருகிறோம்.
அதே நேரத்தில், விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மருத்துவமனைகள், மாவட்டங்கள், உட்பிரிவுகள், பிளாக்குகள், தாலுகா அலுவலகங்கள், சாலைப்பணி, மின்சார வசதி விரிவாக்கம், பாசன வசதிகள் என புதிய திட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு புதிய பணியாளர்கள் நிறைய பேர் தேவைப்படுகின்றனர். எனவே, அவர்களை எல்லாம் நாங்கள் பணி நியமனம் செய்திட வேண்டும். இந்த புதிய பணியிடங்களை எல்லாம் நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.
ஆனால், எங்களது மாநிலம் சிறிய மாநிலம் ஆகும். அளவில் சிறியதாகும். அதன் கடன் அவ்வளவு பெரிதல்ல. எனவே இந்நிலையில், மத்திய அரசைப் போன்று எதையும் செய்திடாது நாங்கள் வீணாக இருந்திடவில்லை. மறுபுறத்தில், எங்களது மாநிலத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களின் பிரச்சனைகளை தீர்த்திட தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.
ரயில் வசதிக்கான போராட்டங்கள் நடைபெற்றபோது, நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் மூன்று முறை நான் சிறை செல்ல நேர்ந்தது. தற்போது ரயில் வசதி வந்துவிட்டது. மின்சார வசதியைப் பொறுத்தவரை, திரிபுரா பற்றாக்குறை மாநிலமாக இருந்தது. தற்போது நாங்கள் மின்மிகை மாநிலமாக உள்ளோம். வங்கதேசத்திற்கு 140 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்திடத் துவங்கியுள்ளோம். இந்தியாவின் இதர பகுதிகளுக்கு இந்த மின்சாரத்தை கொண்டு செல்ல மத்திய அரசு தவறுகிறது. இது அவர்களது வேலையாகும்.
தகவல்தொடர்பு வசதி பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விமான வசதி பெருமளவில் முன்னேறியுள்ளது. சாலை இணைப்புகளும், கிராமப்புறங்களினுள் சாலை இணைப்புகள் பெருமளவில் மேம்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, எங்களது மக்களின் வாங்கும் சக்தி, 15 ஆண்டுகளுக்கு முன்னர், சராசரியாக வருடாந்திர தனிநபர் வருமானம் 15000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.80,000 ஆக உள்ளது.
திரிபுரா சிறிய மாநிலம் என்றபோதும் அங்கு சந்தை என்பது விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்மயமாக்கலுக்கு கட்டமைப்பு வசதிகளோடு,
ஜனநாயகம், அமைதி மற்றும் உறுதியான நிலை போன்ற சூழல்களும் தேவைப்படுகின்றன. இல்லையெனில், முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இங்கு முதலீடு செய்ய மாட்டார்கள்.
இவையெல்லாம் இங்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்வாயிலாக, சூழல் என்பது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு முதலீட்டாளர்கள் வரத் துவங்கியுள்ளனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால், முதலாளித்துவ
உலகில் பொருளாதாரம் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவும்
இப்பிரச்சனையில் சிக்கியுள்ளது என்பது தான். இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் எத்தனை புதிய தொழிற்சாலைகள் இந்தியாவில் துவக்கப்பட்டுள்ளன என நீங்கள் சொல்ல முடியுமா? மேக் இன் இண்டியா, மேக் இன் இண்டியா என நமது பிரதமர் கூவிக் கொண்டே இருக்கிறார். ஆனால், யாராவது வந்திருக்கிறார்களா? இல்லை, யாரும் வரவில்லை.
மாறாக, தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில், நமது நாட்டின் தொலைதூரத்தில், ஒரு மூலையில் உள்ள திரிபுரா போன்ற மாநிலத்தால் மட்டும் திடீரென எவ்வாறு தொழில் வளர்ச்சியை எட்ட இயலும்? நாம் காத்திருக்க வேண்டும். இத்தகைய நிலைமைக்கு எதிராக பேசி வருபவர்கள் எல்லாம் எங்களது இளைஞர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திடவே முயன்று வருகின்றனர். ஆனால், எங்களது இளைஞர்கள் குழப்பமடையவில்லை. இவ்விஷயங்களை எல்லாம் எங்களது இளைஞர்களிடம் நாங்கள் கொண்டு செல்கிறோம்.
வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துக் கொண்டே இருப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு தொழிற்சாலையை எப்போது உங்களால் நிறுவிட இயலும்? ஆம், இதனை நான் உற்பத்தி செய்யப் போகிறேன், இப்பொருளை வாங்கிட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதனை உற்பத்தியாளர்கள் உணர வேண்டும். அப்போதுதான் அவர்கள் முதலீட்டை செய்திடுவார்கள்.
நமது நாட்டு மக்களின் வாங்கும் சக்தி மிகக் குறைவாக உள்ளது. 70 முதல் 77 சதவீத மக்களால் நாளொன்றுக்கு 25 முதல் 30 வரையிலான ரூபாய் கூட வருமானமாக ஈட்ட இயலவில்லை. அவர்களால் 25-30 ரூபாய் செலவழித்திட இயலாது. நமது தேசத்தில் அல்லது சந்தையில் இத்தகையதொரு நிலை உள்ளபோது, எவ்வாறு தொழில் வளர்ச்சி ஏற்படும்?
சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பது என்பது இந்திய அரசின் கொள்கைகளை சார்ந்தது ஆகும். அது இல்லாமல் இதனை நாம் செய்திட இயலாது. எனவே, இவ்விஷயங்களை எல்லாம் நாங்கள் எங்களது இளைஞர்களிடம் கொண்டு செல்கிறோம்.
எனவேதான், எங்களது கூட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் நீங்கள் சென்று பார்த்தால், இளைஞர்களும், எங்களது தாய்மார்களும், சகோதரிகளும் பெருமளவில் பங்கேற்பதைக் காண முடியும். மகனொருவன் தனது தாயுடன் வருகிறான். தாய் தனது மகனை தன்னுடன் அழைத்து வருகிறார். அது ஒரு வித்தியாசமான காட்சியாகும். இங்கே தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக என்னவெல்லாம் சொல்லி வருகிறதோ அதுவெல்லாம் வெளியிலிருந்து வருகின்ற மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கே ஆகும். நீங்களும் கூட அத்தகைய தவறான புரிதலில் இருப்பது போல் தோன்றுகிறது. எனவேதான், இவற்றையெல்லாம் உங்களுக்கு விளக்கிட நான் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டேன்.
– தமிழில்: ராகினி

Leave A Reply

%d bloggers like this: