உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார அறிஞர் கௌசிக் பாசு தன்னுடைய புத்தகத்தில் பட்ஜெட் குறித்து இப்படி குறிப்பிட்டார். “பட்ஜெட்டுகள் பெரும்பாலும் உயர்தர மற்றும் நடுத்தர வர்கத்தினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளன. வருமான வரி தாக்கல் செய்வோர் வரி விலக்குகளால் மகிழ்வுருகின்றனர். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வோர் பட்ஜெட்டினால்
விளையும் எதிர்கால லாபம் குறித்து மகிழ்ச்சியடைகின்றனர். இவ்விரண்டிலும் அடங்காத ஏழை மக்கள் என்ன செய்வர்? இவ்விருவரும் மகிழ்ச்சியடைவதைக்கண்டு இன்பமுறுவர்” என்றார்.

பத்து நாட்களுக்கு முன், நடந்துவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட்து. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டின் போதும் காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களில் பட்ஜெட்டின்
துறை வாரியான ஒதுக்கீடுகள், புதிய அறிவிப்புகள், வரி திருத்தங்கள், பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து விவாதிப்பது வழக்கம். இந்த ஆண்டு பட்ஜெட் குறித்த விவாதங்களைக் காணும் போது கௌசிக் பாசு
கூறியதன் அர்த்தம் புரிந்தது. இவ்விவாதங்களில் வரி விலக்குகள், சந்தை லாபங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில், பட்ஜெட்டினால் பாமரனுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்த குரல்கள் வலுவிழக்கின்றன.
ஆர்.கே.சண்முகம் செட்டி தொடங்கி அருண் ஜெட்லி வரை சுதந்திர இந்தியா 22 நிதியமைச்சர்களைக் கண்டுள்ளது. ஏறத்தாழ 60 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்றுவரை அனைவருக்குமான
பொது சுகாதாரம், கல்வி, உணவு ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்ததாகத் தெரியவில்லை. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வறுமை ஒழிப்பு (Garibi Hatao), வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு (Self
Sufficiency in Agricultural Production), உணவுப் பாதுகாப்பு (Food Security Mission), மருத்துவக் காப்பீடு (Medical Insurance) என எண்ணிலடங்கா திட்டங்கள் அறிவிக்கப் படுகின்றன. இவை அரசின் திட்டங்களா அல்லது வெறும் எண்ணிக்கையா. இவை சரிவர செயல் வடிவம் கொள்கின்றனவா. போதிய நிதி மூலதனங்கள் கொடுக்கப் படுகிறதா, என கேள்விகளை அடுக்கலாம்.

இக்கேள்விகளின் நோக்கம் நிதியமைச்சர்களைச் சாடுவதோ கலங்கம் கற்பிப்பதோ அல்ல. இந்தியா கண்ட அனைத்து நிதியமைச்சர்களும் அவரளவில் ஆகச் சிறந்தவர்களே. மேற்குறிப்பிட்ட நீண்ட நெடிய பிரச்சினைகளை ஒரே ஒரு பட்ஜெட்டின் மூலம் தீர்க்கலாம் என்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்பதனை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்நிலை தொடர்வதற்கான காராணம் என்ன? சற்று விவாதிப்போம். பட்ஜெட் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பர் கூறினார் “பட்ஜெட் என்னதான் சிறப்பாக இருந்தாலும், மக்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்காது”. எதனால் இப்படி? இதற்கான விடை
எளிது. ஒரு தனி விவசாயியைக் கருத்தில் கொள்வோம். அவ்விவசாயி, குறிப்பிட்ட விளைபொருளின் விளைச்சலைப் பெருக்கினால் அவரின் வருமானம் உயரும். இதுவே, தேசிய அளவில் ஒரு குறிப்பிட்ட
விளைபொருளின் விளைச்சல் பெருகினால், சந்தையில் அதிக வரத்தின் காரணமாக விலை குறையும். எனவே விவசாயிக்கு உரிய விலை கிடைக்காது. இதைத் தான் பொருளியலில் (Economics) பெருநிலைப்
பொருளியலின் (Macro Economics) பிரச்சினைகளும் நுண்ணளவுப் பொருளியலின் (Micro Economics) பிரச்சினைகளும் ஒன்றல்ல என்பர். நிச்சையமாக இந்தியா பிரச்சினைகளின் தேசம் தான். ஆனால்,
இந்தியாவின் பிரச்சினைகள் சரிவரப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா? இவ்விடத்தில் ஒன்றை நினைவுகூற வேண்டும். இந்தியா ஒற்றை தேசமல்ல, 29 மாநிலங்களின் கூட்டமைப்பு. இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே
மொழி கலாச்சார வேற்றுமை மட்டுமல்ல, அவற்றிற்கும் அப்பால் இயற்கை அமைப்பிலும் வளங்களிலும் வேற்றுமை கொண்டவை இந்திய மாநிலங்கள். இந்தியாவின் பிரச்சினை என்பது தனி ஒரு தேசத்தின் பிரச்சினை அல்ல, 29
மாநிலங்களின் பிரச்சினை. ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினைகளும் வேறுபட்டவை, வெவ்வேறு இயல்பினவை. வறட்சி என்பது நாட்டின் தலையாயப் பிரச்சினையாக இருக்கலாம், அதற்காக மழைநீர் சேகரிப்பை
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க இயலாது. ஏனெனில், தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்சினையாக இருக்கலாம், ஆனால் பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில்
வெள்ளம் தான் பிரச்சினை. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது ஒரே ஒரு தீர்வின் மூலம் அனைத்து மாநிலங்களின் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது. ஒரே ஒரு மைய அரசின் மூலம் அனைத்து பிரச்சினைகளையும்
தீர்க்க முடியாது. இதன் அர்த்தம் மைய அரசு தேவையில்லை என்பதன்று, அதன் பணிகளும் கடமைகளும் வேறு என்பதே.

இப்படி வழி நெடுகிலும் பன்மைத்துவம் கொண்ட இந்தப் பரந்துபட்ட தேசத்தை டெல்லியில் இருந்து ஆள்வது என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனமோ, அதேபோல் இதனைச் சென்னையிலிருந்து நிர்வகிக்கலாம் என
நினைப்பதும் முட்டாள்தனம். இந்தியாவில் வேற்றுமை என்பது மாநிலங்களுக்கு இடையில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்தினுள்ளும் வேற்றுமை உண்டு. கோவையும் கடலூரும் ஒரே மாநிலத்தில் இருப்பினும்
ஒன்றல்ல. கொடைக்கானலும் ஒட்டன் சத்திரமும் ஒரே மாவட்டத்தில் இருப்பினும் ஒன்றல்ல. இது இடியாப்பச் சிக்கல் போன்றது தான். இதற்கு என்னதான் தீர்வு? நம் அரசியலமைப்புச் சட்டம் இதற்குத் தீர்வளிக்கிறது.
செத்த உடலாகக் கிடக்கும் 73 மற்றும் 74 ம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்பெற வேண்டும், புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் அவ்வளவே. கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றால்,
உள்ளாட்சிகள்தான் மக்களாட்சியின் முதுகெலும்பு. அதிகாரத்தைக் குவிப்பதல்ல மக்களாட்சி. மாறாக, அதிகாரத்தைப் பரவலாக்குவதே மக்களாட்சி. மாநிலங்களின் சுய ஆட்சி குறித்துப் பேசும் எவரும்
உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரமளித்தல் குறித்து வாய்திறப்பதில்லை. நாட்டை ஆளும் கட்சிகள்தான் உள்ளாட்சிகள் குறித்துப் பேசுவதில்லையென்றால், இக்கட்சிகளுக்கு மாற்றாகத் தோன்றும் புதிய
கட்சிகள் எவையும் உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதத்தினை உணர்ந்ததாகத் தெரியவில்லை. மக்களாட்சி என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரிகள் டெல்லியிலும் சென்னையிலும் உட்கார்ந்து நாட்டைப் புரட்டிப் போட்டிட முடியாது. ஆட்சியாளர்கள் ஆகச் சிறந்தவர்களாயினும், உள்ளாட்சி அமைப்புகள்ளுக்கு உரிய அதிகாரம் அளிக்காவிடில் அரசின் அனைத்துத் திட்டங்களும் பாழாகும்.

மத்திய அரசு ஒரு புறம் பொதுப் பட்டியலிலும் (Concurrent List), மாநிலப்பட்டியலிலும் (State List) உள்ள துறைகளின் மீது தனது எதேச்சதிகார ஆளுமையைச் செலுத்த முயற்சிக்கிறது. மறுபுறம் மாநில அரசுகள், இதற்கு எதிராக முஷ்டி முறுக்குகின்றன. இவ்விருவருக்கும் இடையே நிகழும் அதிகாரப் போட்டியில் உள்ளாட்சி அமைப்புகள் தனித்து விடப்படுகின்றன.

உள்ளாட்சிகளின் இறையாண்மையையும் இன்றியமையாமையையும் உணர்த்துவதில் நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒருபடி முன்னே சென்று நிற்கிறது. நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச்
சட்டமானது, அதிகாரங்களை மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் போதிய அதிகாரமளித்துள்ளது. உள்ளாட்சிகள் இல்லையெனில் என்ன நடக்கும் என்பதை இரு தமிழக உதாரணங்கள் பட்டவர்தனமாக்குகின்றன. கடந்த ஆண்டு டெங்குக் காய்ச்சல் தமிழகமெங்கும் கட்டுக்கடங்காமல் பரவிய போது சுகாதாரத்துறை செயலாளர் வீதி வீதியாகச் சென்று பணிகளைக் கவனித்தார். சுகாதாரத்துறைச் செயலரின் பணி வீதி வீதியாகச் செல்வதல்ல. இது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத வெற்றிடத்தைக் காட்டுகிறது. பின்னர்,
சென்னையில் மழை வெள்ளம் குறித்த அச்சம் தொற்றிய போது, தமிழக அரசு இரு தொகுதிகளுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீதம் நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இது போன்ற நேரங்களில்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால் இத்தனை பீதி தேவையில்லை.

வெறுமனே ஆட்சியாளர்களைக் குறைகூறிப் பயனில்லை. மக்களாட்சியைக் குறித்துப் பேசும் நாம் உள்ளாட்சியின் உன்னதங்களை உணர்ந்துள்ளோமா? அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தினை உள்ளாட்சித் தேர்தல்கட்கு அளிக்கிறோமா? குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகளைப் பராமரித்தல் போன்ற இன்றியமையாப் பணிகளைச் செய்யும் உள்ளாட்சிகள் மீது மக்களின் பாராமுகம் காட்டும் பொதுப் புதுத்தியினை என்னவென்பது? பேரிடர்களின்போது மக்களின் அவலங்களுக்கு முதலில் செவி மடுப்பது
மத்திய அரசோ மாநில அரசோ அல்ல, உள்ளாட்சி அமைப்புகளே. உள்ளாட்சிகள் மக்களின் தார்மீக உரிமை என்ற புரிதல் வேண்டும். உள்ளாட்சியின் ஊடாக நாட்டின் கடைசி குடிமகனும் மக்களாட்சியில் பங்கேற்க வேண்டும். உள்ளாட்சிகள் மட்டுமே உண்மையான மாற்றத்தைக் கொணர முடியும் என்ற அரசியல் பாலபாடத்தினை அரசியல் கட்சிகள் கற்க வேண்டும்.

அ.ஆனந்த்,
வேளாண் பொருளியல் (முதுகலை முதலாம் ஆண்டு)

Leave a Reply

You must be logged in to post a comment.