ஏற்காடு, பிப்.15-
ஏற்காடு வனப்பகுதியில் இருந்து பச்சை மூங்கில்கள் வெட்டி கடத்தப்படுவதை வனத்துறையினர் கண்டும், காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு அயோத்தியாப்பட்டினம், குப்பனூர் வழியாக செல்லும் மலைப்பாதையை ஒட்டிய பகுதிகளில் உள்ள காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக் கொள்ள வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். இதனை குத்தகை எடுத்த நபர்கள் அங்குள்ள காய்ந்த மூங்கில்களை மட்டுமே வெட்டி எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அங்குள்ளபச்சை மூங்கில்களையும் சேர்த்து வெட்டி எடுத்து சென்று வருகின்றனர்.

மேலும், இதனை அங்குள்ள வனத்துறையினரும், சோதனை சாவடியில் பணிபுரியும் வன அலுவலர்களும் கண்டுக்கொள்வதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அதுவும், 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், மூங்கில் அரிசி விளைந்து பின்னர் மூங்கில் குத்தேடு காய்ந்து அழிந்து விடும். கடந்த 2014 ஆம் ஆண்டுதான் இவ்வாறு ஏற்காடு மலைப்பகுதிகளில் உள்ள மூங்கில்கள் காய்ந்து போயின. இதன்பின் கடந்த இரு ஆண்டுகளில் சில மூங்கில்கள் மட்டுமே முளைத்து வளர்ந்து வருகின்றன.தற்போது இந்த புதிய மூங்கில்களையும் வெட்டி  அழிப்பதால் அப்பகுதியின் பசுமை சூழலே அழிந்துபோகும் நிலை ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இவ்வாறு பச்சசை மூங்கில் வெட்டப்படுவதை வனத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: