கோவை, பிப்.15-
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 7 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் எல்ஜிபி லிமிடெட் (ரோலன்) என்கிற தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு 140 நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்கிளையின் நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எல்ஜிபி நிறுவனம் சங்கம் சேர்ந்த தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக சங்கத்தின் முக்கியநிர்வாகிகளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது. நிறுவனத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அங்குள்ள தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் (பிப்.13) தேதி இரவுதொழிற்சாலையின் எதிரே போராட்டபந்தலில் அமர்ந்திருந்த தொழிலாளர்களை விரட்டியும், பந்தலை பிரித்தும் அங்கிருந்த ஆறு தொழிலாளர்களை கோவில்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்பின் அந்நிறுவன தொழிற்சங்க கிளையின் தலைவர் தினேஷை மறுநாள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஏஐசிசிடியு மாவட்ட பொதுச்செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பல முக்கிய சங்க நிர்வாகிகளின் மீது சதி ஆலோசனை நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையை சிபிஎம் மற்றும் சிஐடியு அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. தொழிற்சாலைக்குள் பேசிமுடிக்கவேண்டிய பிரச்சனையை காவல்துறையின் மூலம் அடக்க நினைப்பதை ஏற்கமுடியாது.ஆகவே, தமிழக அரசு இத்தொழிற் தகராறை உடனடியாக சுமூகமாய் பேசிமுடிக்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதோடு, வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமென என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.