கோவில்பட்டி:
உலக அளவிலும், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தமிழைப் பாதுகாப்பது கம்யூனிஸ்ட்டுகளே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி கோவில்பட்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது தமிழ்நாடு மாநில மாநாடு பிப்.17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் புதனன்று தமிழ் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு மாநிலக்குழு உறுப்பினர் இரா.மல்லிகா தலைமை வகித்தார். நகர்க்குழு செயலாளர் இரா.முருகன், ஒன்றியச் செயலாளர் ல.பெ.ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரசல், கோவில்பட்டி நகர்க்குழு உறுப்பினர் ஆ.சக்திவேல்முருகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தமுஎகச பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-
தமிழ்மொழியின் அடையாளமும் பண்பாடும் இன்றைக்குப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேசிய இன சிந்தனை என்ற அடையாளத்தை ஒழிக்க முயற்சி நடைபெறுகிறது. தேசிய இனக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளப் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கள் மறுத்துவருகின்றன. இந்தி, சமஸ்கிருதம் என்ற இலக்கை நோக்கி ஆட்சியர்களின் நகர்வு உள்ளது. தமிழகத்தில் தமிழ்மொழியைப் பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு முக்கியப் பங்காற்றிவருகிறது. தங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை மிரட்டும் வேலையைத் தமிழகத்தில் பாஜக செய்துவருகிறது.
மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி ஆந்திராவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் குறித்துத் தமிழக ஆட்சியாளர்கள் மத்தியில் இதற்கெதிராகச் சிறு முணுமுணுப்பு கூட இல்லை.
இந்திய துணைக்கண்டத்திலேயே சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தனித்து இயங்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான். மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் 5 ஆயிரத்து 800 பொருட்கள் அகழாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சாதி சார்ந்தோ, மதம் சார்ந்தோ ஒரு அடையாளம் கூட இல்லை. முற்றிலும் தமிழர்களின் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையிலான பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் இறவாதன் பெயர் பொறிக்கப்பட்ட பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறவாதன் என்றால் பிறரை அண்டிப்பிழைக்காதவன் எனப் பொருள்.
சமஸ்கிருதத்தின் துணையின்றி வளர்ந்த தமிழ்மொழிக்கு ஹார்வேர்டு பல்கலைக்கழக இருக்கைக்கு நிதி கொடுக்கமாட்டோம் எனப் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறிவருகிறார். இவர்கள் மண்ணின் கோட்பாட்டோடு, தமிழ்மொழியின் அடையாளத்தோடு மோதுகிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. திருவில்லிபுத்தூர் ஜீயர் சோடாபாட்டில் வீசுவோம் என்று சொன்னார். இந்த இரண்டு விஷயங்களையும் பாஜக கண்டிக்கவில்லை.
அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்றத்தில் நிர்வாக மொழியாக எது இருக்கவேண்டுமென கேள்வி வந்தபோது ஆங்கிலம் இருக்கலாம் எனக் காங்கிரஸ் கட்சியினர் கூறினர். ஆனால்.. அவரவர் தாய் மொழியிலேயே இருக்கவேண்டும். அவரவர்கள் தங்களது தாய் மொழியிலேயே சட்டமன்றத்தில் பேசலாம் எனக் கூறியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடரும் என்ற நேருவின் வாக்குறுதிக்குத் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் இல்லாத ஒரு தலைமுறையைத் தமிழகத்தில் உருவாக்கவும், கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும், பேச்சுமொழியாக மட்டுமே தமிழை வைத்துக்கொள்ள முயற்சிகள் நடைபெறுகிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.
1967-1972-ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பேசிய விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, இலங்கை மருத்துவக் கல்லூரியில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டுவர முடியாதா எனக் கேள்வியெழுப்பித் தமிழ் மொழியின் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். அன்றைக்கு முதல்வராக இருந்த அண்ணா ஐந்தாண்டுகளில் ’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ எனக் கொண்டுவருவோம் எனக் கூறி சட்டத்திருத்தம் செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கீழடி அகழ்வாய்வுக்கு நிதி ஒதுக்க மறுத்ததேன் எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை.கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாத்து அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு மத்திய அரசுக்கு அளித்துவிட்டது. 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டதா? இல்லையா என்பது குறித்தும் மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.
தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. திருக்குறள் வேதத்தின் பகுதியாக எழுதப்பட்ட தர்மசாஸ்திரம். தமிழ் தனித்து இயங்கும் மொழி அல்ல. அது சமஸ்கிருதத்தைத் தாங்கியே நிற்கிறது என்று எழுதியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் கல்வியிலிருந்து தமிழைப் பறிக்கும் போராட்டமும், இந்தியாவின் வரைபடத்திலிருந்து இந்தி அல்லாத பிற மொழிகளை எடுத்துவிடும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. எதிர்காற்றுக்குப் பயந்து பாய்மரத்தை இறக்குபவர்கள் நாங்கள் அல்ல. தமிழையும் அதன் தொன்மையையும் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும்.
மதுக்கூர் இராமலிங்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசியதாவது:
தமிழ் மொழி குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பேசிவருகிறது. எங்களது குரலை இப்போது காதுகொடுத்து கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். சோவியத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டுமென்று சொன்னவர் லெனின். கம்யூனிஸ்ட்டுகள் இயல்பாகவே தாய்மொழியின் மீது பற்றுக் கொண்டவர்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இருந்தபோது ஒரு பத்திரிகையாளர் தாடி வைத்துள்ளீர்கள். டர்பன் கட்டியுள்ளீர்கள் இது ஒரு மதத்தின் அடையாளம் இல்லையா என கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுர்ஜித் அது இனத்தின் அடையாளம், மொழியின் அடையாளம் என்று பதிலளித்தார்.
தமிழ்நாடு என்ற பெயரே சிலருக்கு கசப்பாக இருக்கிறது. பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வைகை இல்லம், பொதிகை இல்லம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வந்தவுடன் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலம் வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மொழிவழி மாநில அமைப்பையே ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.
திருத்தணியைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஊர்வலம் நடைபெற்றது. அதில் ம.பொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் ஜீவா, வெங்கட்ராமன் ஆகியோரின் மண்டை உடைக்கப்பட்டது. தமிழக எல்லைக்காக ரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விமான நிலையங்களில் தமிழ் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மைல் கல்லில் கூடத் தமிழில் இல்லை. தமிழின் வளர்ச்சி என்பது தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்போடு தொடர்புள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகத் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வைத் தமிழகத்தில் சுமார் 20 லட்சம் பேர் எழுதியுள்ளனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடவும், அதைத் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
தமிழகப் பள்ளிகளில் உள்ள கரும்பலகையிலிருந்து தமிழை அப்புறப்படுத்திவிட்டு ஹார்டுவேர் பல்கலையில் மட்டும் தமிழ் வந்து பலனில்லை. தமிழ் செம்மொழி, மூத்தமொழி எந்த வழியிலாவது அதை ஒழித்துக்கட்ட மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். மொழிக்கு எதிரான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு தமிழர்களுக்கு விரோதமாக, தமிழக இளைஞர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது.
தமிழகத்தில் பேருந்துக்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து திருமங்கலத்திற்கு ரூ.35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க மாநில அரசு மறுத்து வருகிறது.
முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசு மோடி அரசின் மோசமான கொள்கைகளுக்குத் துணை போகிறது.
தன்னாட்சி தமிழகம் ஆழி.செந்தில்நாதன்
1948-49-ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழியைக் காக்க நடைபெற்ற போராட்டத்தில் கோவில்பட்டியின் பங்கு மகத்தானது. உழைக்கும் மக்கள் உரிமை பறிக்கப்படும்போது, பாட்டாளி மக்கள் நசுக்கப்படும்போது, சாதி-மத மோதல்கள் பிரச்சனைகள் முன்னுக்கு வரும்போது மக்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
கோவில்பட்டி கடலை மிட்டாயில் தொடங்கி மீன்பிடித் தொழில் உள்ளிட்ட நமது பாரம்பரிய தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நாடே சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது.
லெனினும், ஸ்டாலினும் அவரவர் தாய்மொழியில் தான் எதையும் சாதிக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். சீன இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருப்பதற்குக் காரணம் அனைத்தும் தாய்மொழியில் இருப்பதால்தான்.
தமிழில் அதிகாரம், உரிமை, ஆட்சி, நீதி இருக்க வேண்டும். தாய்மொழியில் படித்து முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். அது இருந்தால்தான் சுதந்திர நாடு, ஜனநாயக நாடு. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டுமெனப் போராடிக் கொண்டிக்கிறோம். இன்னும் நீதி கிடைக்கவில்லை.
மத்திய அரசு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பது குறித்த விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளியிட வேண்டும். ஆங்கிலத்தில் சிறிய அளவில் வெளியிட்டால் போதும். பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது. இந்தப் பிரச்சனையை முதலில் வெளிக் கொண்டுவந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான்.
பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்கள் மிகவும் பின் தங்கியுள்ளன. இவற்றை வளப்படுத்துவதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக மொழி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மத்திய அரசின் ராணுவமும், காவல்துறையும் இணைந்து மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொள்ளாச்சியில் மட்டும் 80 பேர் முதல் 120 பேர் வரை கொல்லப்பட்டனர். மருதுபாண்டியர், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி போன்றவர்கள் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணில் மொழிக்கு உரிமையில்லை என்றால் என்ன அர்த்தம்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மலையாள மொழியைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லை.
மத்திய அரசும், மாநில அரசும் தமிழுக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ? அதையெல்லாம் செய்கிறார்கள். விமான நிலையத்தில் விமானம் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்புத் தமிழில் இல்லை. கேட்டால் தொழில்நுட்பக்கோளாறு என்கின்றனர்.
செம்மொழி நிறுவனத்தை உருக்குலைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. சமஸ்கிருதத்தைப் புகுத்த வேண்டுமென்பதே ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தம். தமிழ் பல்கலைக்கழகம், திராவிடர் பல்கலைக்கழகம் எனப் பெயர் வைத்தால் அது பிரிவினைவாதம் என்கின்றனர். இந்தியாவில் ஒட்டு மொத்த கலாச்சாரத்தை உருவாக்குவதில் தமிழுக்குப் பெரும் பங்குண்டு.தமிழகத்தின் இலக்கிய மையமான கோவில்பட்டியில் சமீபத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் பெரியார் புத்தகங்களை விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மொழிப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மகத்தானது. ஒரே நாடு என்ற பெயரில் நமது அடையாளங்களை அழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழுக்கு இன்றைக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் நாம் கூட்டாட்சித் தத்துவத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.