புதுதில்லி:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி அமிதவராய் பிப்ரவரி 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு முன்னதாக தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் முடிவு செய்ததன் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

காவிரி ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், கடந்த 2007-ஆம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அதில் 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. எனினும் 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதுபோல் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டிஎம்சி என்பதை 132 டிஎம்சியாக குறைக்க வேண்டும்; தங்களுக்கு கூடுதலாக 60 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகமும் மேல்முறையீடு செய்தது. முறையே, 30 டிஎம்சி மற்றும் 7 டிஎம்சி போதாது என்று கேரளா, புதுச்சேரி அரசுகளும் உச்ச நீதிமன்றம் சென்றன.இவ்வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி இவ்வழக்கில் இறுதி விசாரணையை துவங்கியது. மிக விரைவான முறையில், தொடர்ந்து 28 வேலை நாட்கள் விசாரணை நடத்தியது.

கர்நாடகா சார்பில் மூத்த வழக்கறிஞர் நாரிமனும், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆகியோரும் இவ்வழக்கில் ஆஜராகி வாதாடினர். கேரள அரசின் சார்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டன. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடினார்.

கடைசியாக, கடந்த 2017 செப்டம்பர் 20-ஆம் தேதி இவ்வழக்கு விசாரைணக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறை என்று மத்திய அரசைக் கண்டித்ததுடன், 2013-ஆம் ஆண்டே அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். அன்றோடு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதன்பின்னர் எழுத்துப்பூர்வமான வாதங்களை மட்டும் வைப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கிய நீதிபதிகள், காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தத்தமது தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், 150 நாட்களுக்குப் பிறகு, காவிரி வழக்கில் வெள்ளிக்கிழமையன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave A Reply