====ஆர் பத்ரி====                                                                                                                                                                   தனிநபர் சாகசங்களுக்கும், பரபரப்பான வெற்று அறிவிப்புகளுக்கும் விளம்பர வெளிச்சம் பாய்ச்சப்படும் இன்றைய சூழலில்.. மக்களின் மனசாட்சியாய் களத்தில் நின்று நாளும் கிழமையுமின்றி இயங்கி கொண்டிருக்கிறது ஒரு அரசியல் கட்சி.. வாக்குறுதிகளோ, தலைவர்களோ அல்ல தீர்வு. மாற்றுக் கொள்கைகளே உண்மையான விடுதலையை தரும் என நம்பிக்கை விதைத்து மக்களிடையே, மக்களுக்காக ஓய்வறியாது உழைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..அதிகார மையத்தின் செல்லச் சாமியார் மடம் ஈஷா மையம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த 44 ஏக்கர் நிலங்களை மீட்க வைத்திருக்கிற மகத்தான முற்றுகை போராட்டம்.. ஜீவ நதியான தாமிரபரணியிலிருந்து தண்ணீரை எடுத்து தனியார் குளிர்பான கம்பெனிகளுக்கு வழங்கக் கூடாது என போர்ப்பிரகடனம் செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்த தண்ணீர் சத்தியாகிரக இயக்கம், சிப்காட் வளாகத்திலிருந்து 77 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டு குத்தகைக்கு கோகோ கோலா நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை கண்டித்து அரசாணை நகல் எரிப்பு போர் மூலம் நிலத்தை திரும்ப பெற்ற இயக்கம்.. ஆறுகளிலிருந்து திருடப்படும் மணல் திருட்டை தடுப்பதற்கான எழுச்சியான போராட்டங்கள், கடலோரப் பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சியை தடுப்பதற்காக என அதிகார வர்க்கத்தை அதிர வைத்த போராட்டங்கள்..

நமது தாய்மடியான கீழடியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு சென்னையிலும், நெல்லையிலும், மதுரையிலுமாக போர் முழக்கங்கள், நீட் கொடுமையை எதிர்த்தும், இந்தி திணிப்பை கண்டித்தும் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டு தலையீடுகள்.. மறியல், முற்றுகை என நேரடி தலையீடுகளோடு, கருத்தரங்கம், மாநாடு என கருத்தியல் பிரச்சாரங்கள்..
சாதியின் பெயரால் ஆணவத்தோடு நிகழ்த்தப்படும் படுகொலைகளை கண்டித்த உறுதிமிக்க போராட்டங்கள், தடுப்பதற்கான தனிச்சட்டம் தேவை என உரத்த முழக்கத்தோடு சேலம் முதல் சென்னை வரை நடைபெற்ற கோரிக்கை நடைபயணம், தீண்டாமை கொடுமைகளை கண்டித்தும், வன்கொடுமைகளை எதிர்த்தும், தலித் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காகவும் நூற்றுக்கணக்கில் நேரடி தலையீடுகள்..

மதவெறி சக்திகளை உறுதியாக எதிர்த்தும், மக்கள் ஒற்றுமை மேடைகளை அமைத்தும் சமூக நல்லிணக்கத்திற்காக எடுக்கப்படும் முயற்சிகள்,, கட்சி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்கினாலும், கொடிகளை எரித்தாலும் பின்வாங்காமல் உறுதியாக முன்னேறுவோம் என சூளுரைக்கும் குரலாய்..

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்ற பெயரால் எளிய மக்களும், சிறு வணிகர்களும் துவண்டு நின்ற நிலையில் அவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற ஆவேச எதிர்ப்பியக்கங்கள், தடியடி, மண்டை உடைப்பு, சிறைவாசம் என எதையும் எதிர்த்து களத்தில் எதிர்கொண்ட துணிச்சல்மிக்க போராட்டங்கள். விவசாயிகளின், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக, மாணவர் நலன் காத்திட, இளைஞர்கள் கோரிக்கைகளுக்காக கல்வி நிலைய வளாகங்களிலும், மக்கள் மன்றங்களிலும் முன்னெடுக்கப்பட்ட எண்ணற்ற நூறு நூறு போராட்டங்கள்.. பெண் உரிமைகளுக்காகவும், பாலியல் கொடுமைகளை கண்டித்தும், போதையற்ற தமிழகத்தை கட்டியமைக்கவுமாக நடைபெற்ற முக்கிய இயக்கங்கள்.. இன்னமும் இன்னமுமாய் கடந்த மூன்று ஆண்டுகள் முழுமையாய் களத்தில்..

விலைவாசி உயர்வுக்கு காரணமான அரசுகளின் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், விலைகுறைப்பை முன்வைத்தும் 3000 குழுக்கள் 20 லட்சம் துண்டறிக்கைகளோடு நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு. வேலையின்மைக்கு எதிரான ஒரு வாரகால பிரச்சார இயக்கத்தில் 1000 தெருமுனை கூட்டங்கள், 27000 பங்கேற்போடு 5 இலட்சம் மக்களோடு கோரிக்கை குறித்த கருத்து பிரச்சாரம்.. எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்தோடு 70,000 தோழர்கள் தமிழக தெருக்களில் வலம் வந்து பல லட்சம் மக்களிடம் நடைபெற்ற அரசியல் உரையாடல்.. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காத்திடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும் கோரிக்கைகளை முன்வைத்து 300 மையங்களில் நடைபெற்ற மறியலில் 30,000 க்கும் அதிகமானோர் கைது.. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும், பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரட்டல்.. என பட்டியல் நீள்கிறது..

மக்களுக்காக இத்துணை போராட்டங்களை நடத்தியிருக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்களை கோரிக்கைகளின் பால் அணிதிரட்டுவது எவ்வாறு என்ற கேள்விகளோடு கூடுகிறோம்..

அதிகார வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கட்சி ஸ்தாபனமே.. அதை மேலும் செழுமைப்படுத்தவும், விரிவுப்படுத்தவுமான திட்டமிடல்களுக்காக கூடுகிறோம்.

வசீகரிக்கும் வார்த்தைகளல்ல.. அரிதாரம் பூசி சிரிக்கும் தலைவர்களல்ல.. மக்கள் விடுதலை என்பது பொதுவுடமை கொள்கையிலே தான் புதைந்து கிடக்கிறது என உரத்து முழக்கமிட கூடுகிறோம்..

தியாகத் தலைவர்கள் கொடுத்துச் சென்ற படபடக்கும் செங்கொடிகளோடும், மானுடத்திற்கு விடுதலை கிடைக்கும் நாள் வரை ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஜோதியோடும் உற்சாகமாய் கூடுகிறோம்..

ஆர்ப்பரித்து வாருங்கள் முத்து நகருக்கு செங்கடலாய் சங்கமிக்க..

Leave A Reply

%d bloggers like this: