தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சனியன்று (பிப்.17) துவங்கவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாட்டுக்கான தியாகிகள் ஜோதிகள் பயணம் விடுதலைப்போராட்ட வீரர் வஉசி, மகாகவி பாரதி, மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார், சிபிஎம் தலைவர் ஏ.நல்லசிவன் போன்ற முன்னோடி கள் பெயரால் வெள்ளியன்று புறப்பட உள்ளன.

ஒட்டப்பிடாரத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் பெயரிலான சுடரை ஜி.பஞ்சகல்யாணி எடுத்துக் கொடுக்க சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகராஜ் தலைமையிலும், எட்டய புரத்திலிருந்து பாரதி நினைவுச்சுடரை சி.ருக்மணி எடுத்துக் கொடுக்க இந்திய
ஜனநாயக வாலிபர் சங்க நகரத்தலைவர் பழவேசம் தலைமையிலும், விருது நகரிலிருந்து சங்கரலிங்கனார் நினைவுச் சுடரை எஸ்.பாலசுப்ரமணியம் எடுத்துக் கொடுக்க மகாலட்சுமி தலைமையிலும், நெல்லையிலிருந்து ஏ.நல்லசிவன், சு.பாலவிநாயகம் நினைவுச்சுடரை ம.ராஜாங்கம் எடுத்துக்கொடுக்க போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகி ஜோதி தலைமையிலும், திருவைகுண்டத்திலிருந்து டி.ஆர்.சுப்ரமணியம் நினைவுச்சுடரை எஸ்.சங்கரசுப்பு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுவாமிதாஸ் ஆகியோர் தலைமையிலும், ஆர்.மகாலிங்கம் நினைவுச்சுடரை பி.சுப்பையா எடுத்துக்கொடுக்க கட்சி யின் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமையிலும், கோவில்பட்டியில் கே.எஸ்.அமல்ராஜ் நினைவுச்சுடரை ஆர்.ஜவஹர் எடுத்துக்கொடுக்க மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு தலைமை யிலும், உடன்குடியில் எஸ். பூவலிங்கம் நினைவுச் சுடரை டி.தேவப்பிரகாஷ் எடுத்துக்கொடுக்க ஒன்றிய செயலாளர் பி.ஆறுமுகம் தலைமையிலும், 17ஆம் தேதி காலை தூத்துக்குடியில் சோமு,செம்பு நினைவுச்சுடர்களை எஸ்.கே.மகேந்திரன் எடுத்துக்கொடுக்க இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமர்நாத் தலைமையிலான குழுவினர் மாநாட்டு அரங்கிற்கு கொண்டு வருகின்றனர்.

சுடராய் ஜொலிக்கும் தியாகிகள்…!

வ.உ.சிதம்பரனார்: – தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைத்து உரிமைகளுக்காக போராடிய இந்தியாவின் முதல் தொழிற்சங்க தலைவர். வெள்ளையருக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவர். ஆங்கிலேய அரசால் 40 ஆண்டுகள் இரட்டை தீவாந்திர தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்குள்ளானவர். பாரதி: தேச விடுதலைக்கான போராட்டங்களுக்கு உத்வேகமூட்டும் அனல் பறக்கும் கவிதைகளை படைத்தவர். 1908ஆம் ஆண்டு சுயராஜ்ய தினம் கொண்டாடி சுப்ரமணிய சிவாவுடன் சிறை சென்றார். சங்கரலிங்கனார்: 1956இல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை ‘ தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றக்கோரி  76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அவர் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று, மானமே பெரிது” என்ற லட்சிய முழக்கத்தோடு 27.7.1956அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கிய இவர் தனது சடலத்தை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்குமாறு கூறி உயிர் நீத்தவர்.ஏ.நல்லசிவன்: போக்குவரத்து உள்ளிட்ட தொழிற்சங்கங்களிலும், நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரியதான விக்கிரமசிங்கபுரம் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராகவும், கட்சியின் மாநில செயலாளராகவும் திறம்பட செயல்பட்டவர். தூத்துக்குடி லேபர் காலனியில் 400 குடியிருப்புகளை காலி செய்ய முயற்சி நடந்தபோது துறைமுக நிர்வாகத்திடம் பேசி குடியிருப்புகளை பாதுகாத்தவர். சு.பாலவிநாயகம்: – ரயில்வே தொழிலாளியான சு.பாலவிநாயகம் திருச்சி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர். 1964இல் கட்சி தடை செய்யப்பட்டபோது 16 மாத காலம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். டி.ஆர்.சுப்ரமணியன்: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்செந்தூர், திருவைகுண்டம் தாலுகாக்களில் விவசாயிகளின் நில உரிமைக்கான போராட்டங்களுக்கு தலைமை வகித்து உச்சவரம்பு சட்டத்தின் மூலம் நிலம் கிடைக்க காரணமானவர். மக்கள் பணிக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சோமு, செம்பு:  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சங்க தலைவர்களான இவர்கள் தூத்துக்குடியில் மாணவர்களுக்கு கல்வியுடன் அரசியல் அறிவை புகட்டியவர்கள். சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டனர். ஆர்.மகாலிங்கம்: திருவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் ஊராட்சிமன்ற உறுப்பினரான இவர் விவசாயிகள் சங்கத் தலைவராக விளைபொருள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார்.கே.எஸ்.அமல்ராஜ்: சட்டக்கல்லூரி மாணவரான இவர் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்த சமூக விரோதிகளுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க போராட்டத்திற்கு தலைமை வகித்து நடத்தியதற்காக 2001 மார்ச் 17 இல் படுகொலை செய்யப்பட்டார்.பூவலிங்கம்: ஆங்கில அதிகாரி டபிள்யு.லோன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். விடுதலைப்போராட்ட பாரம்பரியத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

Leave A Reply

%d bloggers like this: