கோவை, பிப். 15-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னை நீரா பானத்தை மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து வைத்து, அதனை விற்பதற்கான அரசாணைகளை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில், கோவை மாவட்டத்தின் பிரதான பயிரான தென்னை 86 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் நீண்ட நெடிய தொடர்பு கொண்ட தென்னை மரத்திலிருந்து நீராபானம் இறக்குவதற்கு மாவட்டதென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று மாநில அரசு நீரா விதிகளின் படி நீரா இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்னை சார்ந்த 7 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆனைமலை தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், விநாயகா தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் ஆகியவை நீரா இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இதன்முதற்கட்டமாக இரண்டு நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் லிட்டர் கொள்ளளவினை இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் செயல் திட்டம் தயாரித்துள்ளனர்.

மேலும் நீரா இறக்குவது சார்பான தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக 40 விவசாயிகளுக்கு கேரளா மாநிலம் காசர்கோட்டிலுள்ள மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக முதற்கட்டமாக பிப்.19 முதல் பிப்.23 ஆம் தேதி வரைதொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரசாணையின் படி நீரா பானம் இறக்குவது மற்றும் விற்பனை செய்தல் சார்ந்த இந்த திட்டத்தினால் தென்னை விவசாயிகள் இரு மடங்கு வருமானம் பெருக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.இதேபோல், நீராவினை சார்ந்து நீரா சர்க்கரை, நீரா தேன், நீரா திண்பண்டங்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும், வெளிநாடுகளில் சந்தைப்படுத்தவும், அதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளவும் இயலும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக. இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், துணை ஆணையர் (கலால்) பாலசுப்ரமணியன், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணைஇயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.