புதுதில்லி:
புனே ஐடி ஊழியர் மோசின் ஷேக் வழக்கில், கொலையை நியாயப்படுத்தும் வகையில், மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சொந்தப் பகைமை, மதப்பகைமை என்றெல்லாம் பார்க்க முடியாது; கொலை என்றால் அது கொலைதான் என்று நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எல். நாகேஸ்வரராவ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

மேலும், இவ்வழக்கில் இந்து ராஷ்ட்டிரா சேனா அமைப்பினருக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனையும் நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.மகாராஷ்ட்டிரா மாநிலம் புனேயில், ஐடி ஊழியரான மோசின் ஷேக் (24) என்பவர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மோசின் ஷேக் உன்னட்டி நகரில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கும்பல் ஒன்று இவரை கடுமையாகத் திட்டி, அவமானப்படுத்தியதுடன் ஹாக்கி மட்டை, தடிகள், கற்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு, கொடூரமாகத் தாக்கியது. இதில் மோசின் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக இந்து ராஷ்ட்டிர சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் 2 சிறார்களும் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இந்து ராஷ்ட்டிர சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஜாமீன் கேட்டு புனே அமர்வு நீதிமன்றத்தை நாடினர். ஆனால், புனே நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

“மன்னர் சிவாஜியை மோசின் ஷேக் இழிவுபடுத்தினார் என்று கூறப்படுவதல்ல கொலைக்கான காரணம்; மாறாக, முஸ்லிம் என்பதனாலேயே ஷேக் கொல்லப்பட்டுள்ளார்” என்றும் குறிப்பிட்டது.

இதையடுத்து, குற்றவாளிகள் மும்பை உயர் நீதிமன்றம் சென்றனர். அங்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மகாராஷ்ட்டிர மாநில அரசு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.
“இந்தக் கொலை திட்டமிட்டு நடைபெற்றதாகும்; இந்து அமைப்புக் கூட்டத்துக்குப் பிறகு தூண்டப்பட்டே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது; குற்றவாளிகள் இந்தக் கொலைக்கு முன்னதாக, இந்து ராஷ்டிர சேனா அமைப்பின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்; அதைத்தொடர்ந்து மோசின் பச்சை ஆடை அணிந்திருந்ததும், தாடி வைத்திருந்ததும்தான் அவரை தாக்குதலுக்கு இலக்காக்கியுள்ளது” என்று மகாராஷ்ட்டிர மாநில அரசு நீதிமன்றத்தில் கூறியது.எனினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. “பலியானவரின் ஒரே தவறு அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதே” என்று கொலையை நியாயப்படுத்துவது போல கருத்து தெரிவித்த நீதிமன்றம், சொந்தப் பகைமைக் கொலைக்குக் காரணமல்ல; மதம்தான் காரணம் என்பதால் ஜாமீன் வழங்கலாம் என்றது.
இதனையடுத்து, ஜாமீன் விவகாரத்திற்கு எதிராக மகாராஷ்ட்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, “கொல்லப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை, அல்லது பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக கொலையை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகள், ஜாமீன் வழக்குவதற்காக மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த காரணத்தையும் கடுமையாக விமர்சித்தனர்.“நாட்டின் பன்முகத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும், பல்வேறு சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே ஒரு மதம் அல்லது ஒரு பிரிவினருக்கு எதிராகவோ, சாதகமாகவோ பாரபட்சமான கருத்துகளை நீதிபதிகள் தவிர்த்தல் அவசியம்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனையும் அதிரடியாக ரத்து செய்தனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும் பிப்ரவரி 16-ஆம் தேதி அவர்களை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave A Reply