ஈரோடு,பிப்.15-
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறப்புக்காலமுறை ஊதியத்தை மாற்றி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்திவழங்க வேண்டும். பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலந்தழுவிய மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இதன்ஒருபகுதியாக, ஈரோடுதாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் (பொ)எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கே.முருகேசன், மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜே.பாஸ்கர் பாபு, மாவட்டசெயலாளர் கே.வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி, கண்மருத்துவ உதவியாளர் சங்க நிர்வாகி சுகுமார், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ராஜகோபல் உள்ளிட்டோர் கோரிக்கைகைளை விளக்கி பேசினர். இதில் 250க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.சுசீலா தலைமை வகித்தார். மாநில செயலாளர் எம்.கண்ணன் சிறப்புறையாற்றினர். மாவட்ட செயலாளர் கே.பால்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட 200க்கும்மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

Leave A Reply

%d bloggers like this: