சு.வெங்கடேசன்:

ஜீயர் முதல் விஜயேந்திரர் வரை என்ற இந்த தலைப்பு மீனாட்சி முதல் ஆண்டாள் வரை என்று பரிணமித்திருக்கிற ஒரு நாளிலே இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இங்கே பேராசிரியர் சுபவீ அவர்கள் மிக அழகாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். எது தற்செயல், எது திட்டமிடப்பட்ட செயல் என்ற கேள்விகளுக்குள் ஒவ்வொரு நாளும் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோமோ என்று நான் நினைக்கின்றேன். குறிப்பாக இரண்டு விஷயங்களை இங்கே சொல்லலாம்.

பிப்ரவரி நான்காம் தேதி ஹிந்துக் கோவில் மீட்பு மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பற்றி எரிகிறது. இது தற்செயலா, தற்செயல்தானா . . . தற்செயலாய் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். ஆண்டாளுக்கு இப்படி ஆகி விட்டதே என்று ஒரு அம்மா தொலைக்காட்சி முன்னால் தோன்றி தாரை தாரையாக அழுகிறார். அழுது கொண்டே இருக்கிறார். அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படுகிறது. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு . . .

இது தற்செயலா, திட்டமிடப்பட்டதா என்றால், பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக் கடிதம் பதினைந்து நாட்களுக்கு முன்னாலே போயிருக்கிறது. அப்படியென்றால் பத்மஸ்ரீ விருதுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னால் பெயர் போனதால்தான் அவர் தாரை தாரையாக அழுதிருக்கிறார். ஆண்டாளை வைத்து நடக்கிற பகடி இருக்கிறதே, நடக்கிற வியாபாரம்  இருக்கிறதே, எவ்வளவு கேவலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டாள் மீது என்ன மரியாதை இருக்கிறது? எது தற்செயல், எது திட்டமிடப்பட்ட செயல்?

இங்கே தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதைப் போல மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாகச் சீர்கேடுதான் இதன் காரணம் என்று மாவட்ட ஆட்சியரின் பேரில் ஓர் அறிக்கை வருகிறது. அடுத்த நாள் தீக்கதிர் பத்திரிக்கையாளர் மாவட்ட செய்தித் தொடர்பாளருக்கு தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு மட்டும் ஏன் இதைக் கொடுத்தீர்கள்? எல்லா பத்திரிகைகளுக்கும் ஏன் இதைக் கொடுக்கவில்லை என்று கேட்டால், நாங்கள் இந்தச் செய்தியே அனுப்பவில்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்து விட்டது. அப்படியென்றால் இந்த அறிக்கையை வெளியிட்டது யார்? சில குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டதன் பின்னணி என்ன? இவையெல்லாம் தற்செயலா? தற்செயல் என்று எளிதில் நாம் கடந்து விட முடியாது.

இரண்டாம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீப்பிடித்தற்குப் பிறகு இன்றைக்கு வரை மூன்று இடங்களில் தமிழகத்தில் ஆங்காங்கே கோவில்களில் தீவிபத்து நடக்கிறது. தோழர் வெண்புறா அவர்கள் முகநூலிலே நேற்றைக்கு ஒரு ஸ்டேட்டஸ் ஒன்று போட்டிருக்கிறார். மசூதியை இடிக்கிறதெல்லாம் ஓல்டு ஸ்டைல், கோவிலுக்கு தீ வைக்கிறதுதாண்டா இப்போ நியூ ஸ்டைல். புதிய உத்தி அப்படி என்று. தற்செயலா? மதுரைக்கு வந்த ஞானசம்பந்தன் மதுரை ஆதீனத்தில் உட்கார்ந்திருந்த போது, ஆதீன மண்டபத்திற்கு எதிரிகள்- சமணர்கள் தீ வைத்து விட்டார்கள் என்று பிரச்சனையைக் கிளப்பித்தான் மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை அழித்த கும்பல், இந்த கும்பல். அன்றைக்கு அவர் பெயர் என்னவோ தெரியாது. இன்றைக்கு அவர் பெயர் எச்.ராஜாவாக இருக்கலாம். இது வரலாறு முழுக்க இருப்பது. தோழர் அருணன் அவர்கள் மிக அழகாக நிழல் தரா மரத்தில் இந்த சம்பவத்தை வைத்துத்தான் அவருடைய நாவலை எழுதியிருப்பார். ஹிட்லருடைய வாழ்க்கையிலும் அதைப் பார்க்கலாம். நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சிகள் தீவைத்து விட்டார்கள் என்று சொல்லித்தான் ஜெர்மனியின் அனைத்து ஜனநாயக சக்திகள் மீதான நரவேட்டையை பாசிசக் கும்பல் நடத்தியது. தீவைப்புகளுக்குப் பின்னாலும், முன்னாலும் இருக்கிற அரசியலை மிகநுட்பமாக நாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இதில் எது தற்செயல்? அல்லது எது திட்டமிடப்பட்ட செயல் என்று நாம் பார்க்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இங்கே குறிப்பிட்டதைப் போல கடந்த நான்கு நாட்களாக, தமிழ்நாடு முழுக்க திராவிட அறநிலையத்துறையிடம் இருந்து கோவிலை மீட்போம் என்ற குரல். .அதை இங்கே பேராசிரியர் சுபவீ அவர்களும் மிக அழகாகக் குறிப்பிட்டார். இந்தியாவுக்கே வழிகாட்டுவதைப் போல ஹிந்து அறநிலையத் துறை என்பது 1925ஆம் ஆண்டு அன்றைய நீதிக்கட்சி எப்படி கொண்டு வந்தது. அந்தக் கோரிக்கைகூட அன்றைய பகுத்தறிவாளர்கள் சொன்ன கோரிக்கையல்ல. ஆன்மீகவாதிகள் சொன்ன கோரிக்கை.  அதே போல, இந்தியாவுக்கே வழிகாட்டுவதைப் போல ஒரு மடத்தின் கையிலே இருந்த கோவில் நிர்வாகத்தை எடுத்து மக்கள் சபையின் கையிலே கொடுத்த ஒரு முன்னுதாரணமான முதல் நடவடிக்கை மீனாட்சி அம்மன் கோவிலைச் சார்ந்த நடவடிக்கை என்பதையும் வரலாறு நமக்குச் சொல்லுகிறது. இங்கே பல நண்பர்கள் சொல்கிறார்கள். மீண்டும் உள்ளூர்காரனிடம் கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று. திட்டமிட்டு இந்த பிரச்சனைகள் முழுக்க கிளப்பப்படுவதை நம்மால் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

அதே போல, இன்னொரு முக்கியமான விஷயம். இன்றைக்கு ஜீயர் உண்ணாவிரதத்தைப் பற்றி தோழர்கள் எல்லோரும் குறிப்பிட்டதைப் போல கோதை பிறந்த ஊர், கோபாலன் வாழ்ந்த ஊர் என்று வைஷ்ணவர்கள் பாடுகின்ற ஊரில்தான் சோடா பாட்டில் வீசும் ஊர், கல்லெறியில் கலக்கும் ஊர் என்று இன்றைக்கு ஜீயர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜீயர் என்றால் என்ன அர்த்தம் என்று வைஷ்ணவ அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். மிக முக்கியமானது வைஷ்ணவ அகராதி. தெய்வத்தின் உரு அல்லது தெய்வத்தின் மகன் என்று ஜீயர் என்றால் அர்த்தம் போட்டிருக்கிறது. தெய்வத்திற்கு சோடா பாட்டில் வீசத் தெரியுமா? சோடா பாட்டில் தேவையென்றால் அது தெய்வமா? இந்த கேள்விகளெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மைதான், திருமணம் ஆகி, குழந்தை குட்டியோடு இருக்கிற ஒருவரை வைஷ்ணவ சம்பிரதாயப்படி, மட சம்பிரதாயப்படி ஜீயர் என்று ஒருவரைத் தேர்வு செய்து விட்டால் அவருக்கு நடக்கிற முதல் சடங்கு, இறந்தவர்களுக்கு நடத்தப்படுகின்ற சடங்கு. ஏனென்றால் அந்த மனிதன் இறந்து விட்டான். அதற்குப் பிறகு இனிமேல் அவர் கடவுளின் உரு என்று மாற்றுகிற சடங்குதான் முதல் சடங்கு. அதற்குப் பிறகு அந்தக் குடும்பத்தோடோ, அல்லது அவர்களுடைய சொந்த பந்தங்களோடோ எந்த உறவும் அவருக்கு இருக்கக் கூடாது என்பது அந்தச் சடங்கின் ஐதீகம். ஆனால் குடும்பங்கள் இல்லாமல் இவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியெல்லாம் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வி. நான் அதற்குள் போகவில்லை.

இன்றைக்கு ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இன்றைக்கு முடிப்பதாக தற்காலிகமாக அறிவித்திருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் உண்ணாவிரதம் மீண்டும் தொடர வேண்டிய அல்லது உண்ணாவிரதத்தை மீண்டும் நடத்த வேண்டிய மிகப் பெரிய முக்கியமான காரணம் இருக்கிறது. நான் அதை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையில் தமிழகத்தில் ஒரு பத்து நாட்களாக வைஷ்ணவ மடாதிபதிகளோ, வைஷ்ணவ ஜீயர்களோ  யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்றால், ஒரு நபருக்கெதிராக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அந்த நபரின் பெயர் நாகசாமி. அவருக்கு பத்மஸ்ரீ விருது பத்து நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் பத்மஸ்ரீ விருது கொடுக்கப்படது என்றால் இரண்டு காரணங்கள். . . ஒன்று, கீழடி போன்ற தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தை உலகத்துக்கு சொல்லுகிற ஒரு அகழாய்வை மூடி விட்டீர்கள் என்று நாம் கத்திக் கொண்டிருக்கிற போது, குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற போது, தமிழகத்தில் ஒரு பெரிய எதிர்ப்பலை உருவாக்கிக் கொண்டிருந்த போது நீ இதற்கா சொல்கிறாய், இந்தா, நான் இன்னொரு அகழாய்விற்கு ஒரு தொல்லியலாளருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கிறேன் என்று அவர்கள் கொடுக்கிறார்கள். ஏனென்றால் நாகசாமி இப்போது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புத்தகம் எழுதினார். உங்கள் எல்லோருக்கும் தெரியும். தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து வந்த மொழி. சமஸ்கிருதத்தின் துணையோடு நின்ற மொழி. சமஸ்கிருதத்திடம் கடன் வாங்கித்தான் இந்த மொழி காலகாலமாய் உயிர் பெற்றிருக்கிறது என்று சொல்வதற்காகவே அவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

அதைவிட மிக முக்கியமான புத்தகம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதினார். ராமானுஜர் மித் அண்ட் ரியாலிட்டி என்ற புத்தகம். அது என்னவென்றால் ராமனுஜரின் வாழ்க்கை நமக்குத் தெரியும். வைஷ்ணவத்தின் மிகப் புரட்சிகரமான குரலாக ராமானுஜரின் குரல் இருந்தது. வேதத்தை மறுத்த, வேதத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க கூடாது என்றால் நான் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லி, நம்பியை வீட்டிற்குள் அழைத்து, மனிதருக்குள் இருக்கின்ற பேதங்களை நீக்கிய ஒரு மகாமனிதர். அவருடைய தொடர்ச்சியாகத்தான் தென்கலை வந்தது என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு தென்கலைக்கும், வடகலைக்கும் என்ன வித்தியாசம் என்பது வேறு. வடகலையிலே இருக்கிறவர்களுடைய தர்மசூத்திரம் மிக அழகாகச் சொல்கிறது. அவர்களுடைய கோட்பாடு, உயிர்களிலே மிக உயர்ந்தவன் மனிதன், மனிதனிலே மிக உயர்ந்தவன் பிராமணன். பிராமணனிலே மிக உயர்ந்தவன் வைஷ்ணவன். வைஷ்ணவனில் மிக உயர்ந்தவன்  புருஷ வகையறாக்கள் என்று சொல்கிறது. ஏனென்றால் அந்த வகையறாவில் இருந்துதான் ஜீயர் வர வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக தென்கலை சொல்கிறது, ஒரு பிராமண வைஷ்ணவனை விட சூத்திர வைஷ்ணவன் உயர்ந்தவ.ன் ஏனென்றால் சமூக அதிகாரம் அவனுக்கு இல்லை என்கிறது. ராமானுஜர் துவக்கி வைத்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான, பிராமணியத்திற்கு எதிரான, வேதக் கோட்பாடுகளுக்கு எதிரான ஒரு புரட்சி, கருத்து மாற்றம் என்பது தொடர்ச்சியாக வந்து இன்றைக்கு எல்லாம் மீண்டும் சமப்படுத்தப்பட்டு விட்டன.

ஆனால் இந்த புத்தகத்தில் அவர் என்ன எழுதுகின்றார் என்றால், மூன்று விஷயங்கள். ராமானுஜரை மூன்று பேர் கொலை செய்ய முயற்சித்தார்கள் .முதல் நபர் ராமானுஜருடைய குரு. ராமானுஜருக்கு வேதங்களை, சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுத்த குரு. இவன் வேதத்தை மீறிக் கருத்துக்களைச் சொல்கிறான். வேதத்தை அவமதிக்கிறான். வேதத்தை சூத்திரனும் கேட்கலாம் என்று சொல்கிறான் என்று கொலை முயற்சியை முதன்முதலில் செய்தவர் அவருடைய குரு. இரண்டாவதாக ராமானுஜரின் மீது கொலை முயற்சியைச் செய்தவர், அறங்காவலர் குழு என்று இன்றைக்கு நாம் சொல்கிற, அன்றைய திருவரங்கத்தின் நிர்வாகக்குழுவின் தலைமைப் பூசகர் கொலை முயற்சி செய்தார். பூசகர் இதைச் செய்வார்களா என்றால், பாட்டில் வீசத் தெரியும், கல் எறியத் தெரியும் என்பது புதுக் குரல் அல்ல. காலம் காலமாக இருக்கிற குரல்தான். இதே வேலையைத்தான் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ராமானுஜரின் வாழ்க்கையிலும் இதுதான் நடந்தது. மூன்றாவது கொலை முயற்சியைச் செய்தது அன்றைய சோழ மன்னன்.

ஆனால் இந்த புத்தகத்தில் அவர் என்ன எழுதுகிறார் என்றால், இது எல்லாமே பொய். இவை எதற்கும் வரலாறு இல்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் ராமானுஜர் வேதங்களை மீறியெல்லாம் எதையும் செய்யவில்லை. இந்த புரட்சி, சமூகப் புரட்சி இதெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. வைஷ்ணவம் என்ன சொன்னதோ அதன்படி அவர் வாழ்ந்தார் என்று சொல்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை எழுதியற்காகத்தான் அவருக்கு இப்போது பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள். அதாவது காலம் காலமாக வைஷ்ணவ இலக்கியம் என்ன சொன்னதோ, அதை மறுத்து வைஷ்ணவத்தின் மிகப் பெரிய மனிதனாக இருக்கின்ற ராமானுஜரின் வாழ்க்கையை மறுத்து ஒருவர் புத்தகம் எழுதியிருக்கிறார். இதற்கல்லவா நீங்கள் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். இது எங்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது. எங்களின் முன்னோர்கள் சொன்ன வழிபாட்டு உரிமைக்கு எதிரானது, எங்கள் முன்னோர்கள் சொன்ன வரலாற்றிற்கு எதிரானது என்றல்லவா இவர்கள் போராடியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக வைரமுத்துவிற்கு எதிராகப் போராடுகிறார்கள். நண்பர்களே, இதையெல்லாம் இங்கே நண்பர்கள், தோழர்கள் விரிவாக குறிப்பிட்டதைப் போல ஒருபக்கம் கண்ணீருக்கு, இல்லையென்றால் கழுத்தறுப்பதற்கு என்றுதான் விருது கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனும் சரி, நாகசாமியும் சரி.

விஜயேந்திரரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தே இருந்தது, தேசியப் பண்ணுக்கு எழுந்து நின்றது தெரியும். நான் முதலிலேயே குறிப்பதைப் போல நாகசாமிக்கு இந்த விருதைக் கொடுத்ததற்கே இன்னொரு காரணம் – சமஸ்கிருதத்தினுடைய துணை இல்லாமல் தமிழ் இயங்கியதில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதற்கு எதிராக ஒரு கருத்தை அவர்கள் விதைத்ததனால் வந்தது. இந்த வார்த்தைகளைக் கவனித்தாலே தெரியும். அது தமிழ்த்தாய் வணக்கம் அல்ல, தமிழ்த்தாய் வாழ்த்து. மிகவும் முக்கியமான, நுட்பமான வார்த்தை. ஏன் தமிழ்த்தாய் வணக்கம், மொழி வணக்கம் என்று வைக்கவில்லை? வணக்கம் என்றால் எல்லோரையும் வணங்குவதற்கு எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்காது. என் இறைவனைத் தவிர யாரையும் வணங்கமாட்டேன் என்று சொல்லுகிற இறை நம்பிக்கையாளர்கள், மதப்பிரிவினர் இருக்கிறார்கள். அரூபமான எதையும் நம்ப மறுக்கிற, வணங்க மறுக்கிற  நாத்திகவாதிகள் இருப்பார்கள். தாய் தந்தையரைத் தவிர வேறு யாரையும் நான் விழுந்து வணங்கமாட்டேன் என்று சொல்லுகிற புண்ணிய மகன்கள் இருப்பார்கள், குழந்தைகள் இருப்பார்கள். எல்லோரும் ஒன்று கிடையாது. அதனால்தான் தமிழ்த்தாய் வணக்கம் என்று வைக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து என்று வைத்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து என்ற சொல்லே ஒரு முற்போக்கான, மிக முக்கியமான ஒரு சொல். அதுமட்டுமல்ல. மொழி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டது. நான் பேசுவதனால்தான் என் மொழி வாழ்கிறது. எனவே என்னால் உருவாக்கப்பட்ட, மக்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியை மக்கள் சமூகம் வாழ்த்தித்தான் அதைப் போற்ற வேண்டுமே தவிர, வணங்கி அல்ல. எனவே தமிழ்த்தாய் வாழ்த்து என்பதே கடவுள் மறுப்பின் இன்னொரு அடையாளம் என்பது மிக முக்கியமானது. இவர்களுக்கு அதுவே பெரிய எரிச்சலான விஷயம்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இன்னொன்றையும் மிக முக்கியமாக எழுதினார். அது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு வரை தமிழ்நாட்டில் முழங்கப்படுகின்ற முழக்கம் இருக்கிறது அல்லவா, பல போராட்டங்களில், பல கூட்டங்களில் போடப்படுகின்ற ஒரு கோஷம், ஒரு முழக்கம், இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா. இதை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். மனோன்மணியம் நாவலில் அந்த மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிற போது, மாணவர்கள் போடுகிற கோஷம்.  இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா விஜயேந்திரரே உனக்கு இந்தப் படை போதுமா, எச்.ராஜாவே உனக்கு இந்தப் படை போதுமா என்று மனோன்மணியம் எங்களுக்கு அன்றைக்கே சேர்த்து எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன்.

இன்றைக்கு மிகமிக முக்கியமாக இன்றைக்கு கருத்து சுதந்தரத்திற்கெதிராக, வெளிப்பாட்டு சுதந்தரத்திற்கெதிராக இரண்டுவிதமான நெருக்குதல்கள் மிகநுட்பமாக கடந்த இருநூறு ஆண்டுகளாக, அல்லது கடந்த பல நூறு ஆண்டுகளாக மதக்கட்டுப்பாட்டுக்குள் என்னவெல்லாம் சீர்திருத்தங்களை நம்முடைய முன்னோர்கள் செய்தார்களோ, அந்த சீர்திருத்தங்களையெல்லாம் மிகநுட்பமாக அடித்து நொறுக்குகிற வேலையைச் செய்கிறார்கள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் கடந்த நூறு ஆண்டுகளாக சமூகத்தில் என்னெல்லாம் சமூக இயக்கங்களின் மூலம் முற்போக்கான சாதனைகள் நிகழ்த்தப்பட்டதோ அவற்றையெல்லாம் அடித்து நொறுக்குகிற வேலையைச் செய்கிறார்கள். இரண்டும் திட்டமிட்டு செய்யப்படுகிறது. மிகநுட்பமாகச் செய்யப்படுகிறது. அதே போல எல்லா ஆலயங்களையும் தங்களது அரசியல் களங்களாக மாற்றுகின்ற வேலையை இங்கே துவக்கி இருக்கிறார்கள். அவற்றினுடைய வெளிப்பாடுகளைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், கலைஞர்களாகிய நாம் இன்றைக்கு இந்த வெளிப்பாட்டுச் சுதந்தரத்திற்கு, கருத்துச் சுதந்தரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கிற இந்த தாக்குதல்களுடைய உச்சமான இந்த காலத்தில் அனைத்து சக்திகளும் திரண்டு தமிழகத்தில் மிக வலிமைமிக்க, பல நூறு ஆண்டுகளாக நாம் பெற்ற, நாம் போராடிப் பெற்ற, நம்முடைய முன்னேற்றத்தின் அடித்தளமான இந்த உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க கூடாது மட்டுமல்ல, இதற்கெதிரான வலிமையான இயக்கங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: https://www.youtube.com/watch?v=vu325SDLsGE

உரை எழுத்தாக்கம்: முனைவர் தா.சந்திரகுரு

 

Leave A Reply

%d bloggers like this: