மதுரை,

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில்  தமிழகப் பள்ளிக்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி அந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ரத்து செய்தார். இதை எதிர்த்து சிவகங்கையைச் சேர்ந்த இளமதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 200பேரின் தேர்வுத் தாளை மதிப்பிட்டதில் முறைகேடு நடைபெற்றதற்காக மொத்தத் தேர்வையும் ரத்து செய்வது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இது குறித்து, தமிழகப் பள்ளிக்கல்வித்துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Leave A Reply