திருப்பூர், பிப். 14-
வெள்ளகோவில் செவிலியர் மணிமாலாமரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் இருவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியராக பணிபுரிந்து வந்த மணிமாலா கடந்த சனிக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ அலுவலர் தமயந்தி மற்றும் உதவி மருத்துவ அலுவலர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோர் அளித்த நெருக்கடிதான் அவர் உயிரிழப்பதற்கு காரணம் எனக்கூறி அவரின் உறவினர்கள் மற்றும் செவிலியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர்.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வந்த இந்த போராட்டத்தின் விளைவாக புதனன்று மணிமாலாவின் மரணத்துக்குக் காரணமான மருத்துவ அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவதாகவும், மணிமாலாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி உறுதியளித்ததார். இந்நிலையில், மருத்துவ அலுவலர் தமயந்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோட்டிற்கும், உதவி மருத்துவ அலுவலர் சக்தி அகிலாண்டேஸ்வரி திண்டுக்கல் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும், செவிலியர் மணிமாலாவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான கடலூர் கொண்டு செல்லப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.