சென்னை,

 சென்னையில் ஐடி-யில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்த 15 சவரன்  நகை மற்றும் விலை உயர்ந்த ஐபோன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் பொறியாளர் பணியாற்றி வருகிறார். தாழம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் திங்கள்கிழமை இரவு 1 மணியளவில் பணி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்ற காவலர்கள், பலத்த காயத்துடன் அவர் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து  இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணின் செல்போனை தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: