திருப்பூர், பிப்.14-
திருப்பூர் மாவட்டம், கூட்டப்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றதாக சொல்லப்படும் கொள்ளை சம்பவம் உண்மையா என்று சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களில் கூறியிருப்பதாவது: கூட்டப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 1997-இல் கொள்ளை நடைபெற்றது உண்மையா என்று சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தத்தனூரில் அத்திக்கடவு நீர் மாதம் ஒரு முறை மட்டுமே கிடைக்கப் பெறுவதால் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வீட்டுமனைப் பட்டா :
கிராம மக்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கி தொழிலைக் காப்பாற்ற வேண்டும். கோவை பிரதான சாலையிலிருந்து வெள்ளமடை வரை அமைக்கப்பட்ட சாலை தரமற்றதால் குறுகிய நாட்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து விசாரித்து சாலையை சீரமைக்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கும், ஆதி திராவிட மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கிராம வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து முறையாக வார்டுகளைப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும்.மேலும், பல்லடம் வட்டத்திற்கு உள்பட்ட பருவாய் கிராமத்தில் நான்கு நாள்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத பழைய பள்ளிக் கட்டடத்தை பராமரிப்பு செய்து, சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும். திருப்பூர் – ஆறாக்குளம் பேருந்தை பருவாய் வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

அடிப்படை வசதிகள் :
திருப்பூர், 15-வேலம்பாளையம் அருகேயுள்ள சோளிபாளையம் பகுதி பொது மக்கள் அளித்த மனுவில், எங்களது குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜீவ் வீதியில் பொது மக்கள் உபயோகித்து வந்த குடிநீர்க் குழாய்களில் பல நாள்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து. இந்நிலையில் குழாய்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டன. குடியிருப்பு பகுதியில் குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும்.கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வார வேண்டும். தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

குடியிருப்போர் நலச் சங்கம்:
திருப்பூர், விஜயாபுரம் தெற்குப் பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், எங்களது குடியிருப்பு பகுதியில் சுமார் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமையவுள்ளதாக அறிகிறோம். பொது மக்கள் நெடுங்காலம் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து கட்டப்படவுள்ளது. ஏற்கனவே அங்கு 60 ஆயிரம் லிட்டர் மற்றும் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு நீர்த் தேக்க தொட்டிகள் உள்ளன. இந்நிலையில் புதிதாகத் தொட்டி அமையவுள்ள இடம் பாறை என்பதால் துளையிடும் போது, அங்கு கட்டப்பட்டுள்ள பழமையான வீடுகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, புதிதாக கட்டவுள்ள நீர்த் தேக்கத் தொட்டியை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.