கோவை, பிப்.14-
காதலர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்கள் கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் உற்சாகமாக கொண்டாடினர்.

காதலர் தினம் புதனன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் கொண்டாடினர். மேலும், சாதி ஆணவ படுகொaலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரியும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதேபோல், கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கேக் வெட்டியும் காதலர் தினத்தை போற்றும் துண்டறிக்கைகளையும் மாணவர்களிடம் வழங்கினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய குழுவின் சார்பில் தொப்பம்பட்டி பிரிவில் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் ந.ராஜா, ஒன்றியச் செயலாளர் கோகுல் கிருஷ்ணன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உடுமலை:
இதேபோல், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உடுமலையில் ஆதலினால் காதல் செய்வீர் என்ற தலைப்பில் காதலர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு சுமதி (எ) சத்தியபாமா தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பி.சுகந்தி, மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சாவித்திரி, மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட பொருளார் எ.ஷகிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்த தம்பதியினருக்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: