சிபிஐ(எம்) அரசியல் நகல் தீர்மானம் வெளியீடு
                         இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18முதல் 22வரை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள அரசியல் நகல் தீர்மானத்தை, ஜனவரி 19 முதல் 21 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மத்தியக் குழு கூட்டம் நிறைவேற்றியது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதற்காக அரசியல் நகல் தீர்மானம் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் சர்வதேச, தேசிய நிலைமைகள் குறித்த விவரங்களை நகல் தீர்மானம் முழுமையாக அளிக்கிறது. அரசியல் மற்றும் நடைமுறை உத்தியை தீர்மானிப்பதுடன், கட்சி நிறைவேற்ற வேண்டிய எதிர்கால கடமைகளை குறிப்பிடுகிறது. நகல் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நகல் தீர்மானம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் முழுமையாக http://cpim.org/documents/xxii-congress-draft-pol-resolution என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மொழிகளில் விரைவில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

சர்வதேச நிலைமை                                                                                                                                                             கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகான சர்வதேச நிலைமையின் முக்கியமான அம்சங்கள் :

உலகப் பொருளாதாரம் மிதமான அளவில் மீட்சியடையும் என மதிப்பீடுகள் குறிப்பிட்ட போதும்,2008ல் ஏற்பட்ட சர்வதேச மூலதனத்தின் நிதி நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் மீது ஏற்படுத்தியுள்ளஅமைப்பு ரீதியான நெருக்கடி தொடர்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதை இது மேலும் தீவிரமடையச் செய்துள்ளது. மேலும், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் மக்களின் ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதல்களை அதிகரிக்கச் செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான கண்டன இயக்கங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உலக முதலாளித்துவத்தின் இத்தகைய பொருளாதார நெருக்கடி நீடித்து வருவது, உலகளவில் நாடுகளுக்கிடையேயும், அந்தந்த நாடுகளுக்குள்ளேயும் பொருளாதார அசமத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது

உலகளவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதுடன், பொருளாதார நெருக்கடியின் எதிர்மறை தாக்கத்தை சமாளித்திடும் முயற்சியில் அனைத்துவிதமான வழிகளிலும் தனது அராஜகமான ஆக்கிரமிப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அரசியல் மற்றும் ராணுவ தலையீடுகளின் வாயிலாக அதைச் செய்கிறது.

லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளில்அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ தலையீடுகளுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இக்கண்டத்தின் நாடுகளில்அதிகாரத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலானஅரசுகளை சீர்குலைத்திடவும், மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பலையைதடுத்து பின்வாங்கச் செய்யவும், தனது அனைத்துஆயுதங்களையும் அமெரிக்கா பயன்படுத்திவருகிறது.

அதிதீவிர வலதுசாரிகளும், நவீன பாசிச சக்திகளும் ஐரோப்பிய கண்டத்தில் வளர்ந்து வருகின்றன. இத்தோடு உலகின் பல்வேறு நாடுகளின் அரசியலில்வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதை இக்காலகட்டத்தில்காண முடிந்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின்மிக பிற்போக்குத்தனமான பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது, இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஏகாதிபத்திய முகாமின் ஒருங்கிணைப்பையும், ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையேயான முரண்பாடுகள் மட்டுப்படுத்தப்படுவதையும் 21வது மாநாட்டில்நாம் சுட்டிக் காட்டினோம். இந்த இடைப்பட்ட காலத்தில்,ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே புதிய மோதல்களும், முரண்பாடுகளும் தோன்றி வருவதன் காரணமாகவும், நவீன தாராளவாதத்தின் நீடித்த நெருக்கடியின்காரணமாகவும் நாம் சுட்டிக் காட்டிய போக்கு நடைபெறாது உள்ளது.

இந்தியா போன்ற சில நாடுகளின் அமெரிக்கஆதரவு நிலைபாட்டின் காரணமாக, சர்வதேச அளவில்அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்குமுறையில் பலதுருவ அமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக சர்வதேச அளவில்பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால்,அமெரிக்கா தன்னிச்சையாக இத்தகைய ஒப்பந்தங்கள்சிலவற்றை திரும்பப் பெற்றுள்ளது. மேலும், பலதரப்புஏற்பாடுகளுக்கு பதிலாக அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள முயல்கிறது. இவற்றின் காரணமாக இத்தகைய ஒப்பந்தங்கள் நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்திலும் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்று வருகின்றன. இவை நமது நாட்டின் உறுதித்தன்மையிலும், அண்டை நாடுகளுடனான நல்லுறவிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சோசலிச நாடுகள் – இந்த இடைப்பட்ட காலத்தில்சீனாவின் வலுவும், உலகளவிலான செல்வாக்கும் அதிகரித்துள்ளன. வியட்நாம் மற்றும் கியூபா தங்களது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க, நீடிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன. அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணை பயன்பாடு ஆகியவற்றைச் சுற்றியேகொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் பிரதான பிரச்சனை இருந்து வருகின்றது.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வருடாந்திர சர்வதேச கூட்டங்களுடன், அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளிடையேயான ஒற்றுமையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்துவோம்                                                                                                                 அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பாஜக அரசின் வெறுக்கத்தக்க சரணாகதி போக்கிற்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்திடுவதற்கு எதிராகவும் இந்திய மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை சிபிஐ(எம்) மேற்கொள்ளும். பொருளாதாரம், போர்த்திறன், ராணுவம் மற்றும் அயலுறவுக் கொள்கைகள் என அனைத்துத் துறைகளிலும் இத்தகைய இளைய பங்காளியைப் போன்ற நிலைபாட்டை எடுப்பதை சிபிஐ(எம்) எதிர்த்திடும்.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களின்தாய் நாட்டிற்கான கோரிக்கையை அடைந்திடவும் சிபிஐ(எம்) தனது முழு ஆதரவை தொடர்ந்து அளித்திடும்.தற்போதைய பாஜக அரசால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா ஆகியவற்றிற்கிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் பிணைப்பை சிபிஐ(எம்) கடுமையாக எதிர்த்திடும்.

தனிநபர் குழுக்களின் ஆதரவுடனான அல்லது அரசுஆதரவு பெற்ற அனைத்து வகையிலான, வடிவங்களிலான தீவிரவாதத்தையும் சிபிஐ(எம்) தொடர்ந்து உறுதியாக எதிர்த்திடும்.சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா மற்றும் லாவோஸ் போன்ற சோசலிச நாடுகளுக்கு சிபிஐ(எம்) தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவை தத்தமது நாடுகளில் சோசலிசத்தை வலுப்படுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது.அடிப்படைவாதம், மதவெறி, தீவிரவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் சிபிஐ(எம்) தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.உலகம் முழுவதிலும் உள்ள, குறிப்பாக தெற்காசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள, இடதுசாரி புரட்சிகர இயக்கங்களுடனான தனது தொடர்பை சிபிஐ(எம்) மேலும் வலுப்படுத்திடும்.ஏகாதிபத்தியத்தால் பல்வேறு வழிகளில் குறிவைத்துதாக்கப்படும் சோசலிச நாடுகளுக்கு தனது முழுமையான ஆதரவை சிபிஐ(எம்) தெரிவித்துக் கொள்கிறது

தேசிய நிலைமை                                                                                                                                                                            மோடி அரசின் கிட்டத்தட்ட நான்காண்டு கால ஆட்சி, வலதுசாரி எதேச்சதிகார மற்றும் மதவாத ஆட்சியதிகாரத்தை ஏற்படுத்திட வழிகோலியுள்ளது. நவீன தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்படுவதால் உழைப்பாளி மக்களின் மீது எல்லா விதத்திலும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைஅமலாக்கிட திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால், அரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக மாண்புகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது. அத்தோடு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவுடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவதும், அதன் இளைய பங்காளியைப் போன்று நடந்து கொள்வதும் நடைபெற்று வருகிறது. மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை கட்டுப்படுத்துவது, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளை தலைகீழாக்குவது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக எதேச்சதிகாரப் போக்கை கட்டமைத்து வருகிறது. இவையெல்லாம் இந்த அரசின் ஆட்சிமுறையின் குறிப்பிட்ட அம்சமாக உள்ளன.

பொருளாதார நிலை                                                                                                                                                                        மோடி அரசின் கடந்த மூன்றாண்டு மற்றும் ஒன்பது மாத காலஆட்சியில், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியின் விளிம்பிற்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது.பொய்யான புள்ளிவிபரங்களின் மூலம் பொருளாதார மந்தத்தை மூடி மறைத்திட அரசு தீவிரமாக முயன்றபோதும், உண்மை வெளிவந்து விட்டது. இந்தியப் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டிட மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணக்கீடுகள் (GDP series) மாற்றியமைக்கப்பட்டன. இருந்தபோதும், மாற்றியமைக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையின் கீழும் 2015-16இல் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2017-18ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் 6.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

கடந்தநான்காண்டுகளில் இது மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும். தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளபுள்ளி விவரங்களின்படி, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, 2013-14 மற்றும் 2016-17 ஆகிய வருடங்களுக்கு இடையேயான காலத்தில் முழுமையான வேலைவாய்ப்பின் அளவு (absolute level of employment) சுருங்கியுள்ளது. பல்வேறு துறை சார்ந்த காரணிகள் பொருளாதார மந்தத்திற்கு தங்களது பங்களிப்பைச் செலுத்தினஎன்றபோதும், அரசு மேற்கொண்ட கொள்கைப்பூர்வமான முயற்சிகளான பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி முறையின் (ஜிஎஸ்டி)அமலாக்கமும் அனைத்து பிரதானமான துறைகளையும் கடுமையாக பாதித்துள்ளன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது, சிறு வர்த்தகர்களை மிக மோசமாக பாதித்தது. மேலும் பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு(SMEs) ) மூடுவிழா நடத்தி, பெருமளவிலான வேலையிழப்பிற்கு இட்டுச் சென்றது. முறைசாராத் துறையில் பணியாற்றிடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. விவசாயிகளால் தங்களது விளை பொருளை சந்தையில் விற்க இயலாமல் போனதோடு, அடுத்த நடவு காலத்திற்கான விதைகளையும், உரங்களையும் அவர்களால் வாங்க இயலவில்லை.ஜிஎஸ்டியின் அறிமுகம் என்பது, மக்கள் மீதுசுமையை அதிகரிக்கச் செய்த கார்ப்பரேட் ஆதரவுநடவடிக்கையாகும். மேலும், இது இந்த அரசின் நவீன தாராளவாத தாக்குதலின் ஒரு பகுதியேயாகும்.

ஜிஎஸ்டி அமலாக்கம் கூட்டாட்சி கோட்பாட்டை குறைத்துமதிப்பீடு செய்துள்ளது. இதன் காரணமாக, மாநிலங்களின் உரிமைகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதோடு, மறைமுக வரியின் அளவை அதிகரிக்கச் செய்துள்ளது. சாதாரண மக்கள், சிறு மற்றும்நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் முறைசாராத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி புதிய சுமைகளை ஏற்றியுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் சேவைத் துறையின் பல்வேறுதுறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.நவீன தாராளவாதக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்குவதின் ஒரு பகுதியாக மோடி அரசு பெருமளவிலான தனியார்மய நடவடிக்கையைத் துவக்கியுள்ளது. இது மூன்று அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

(அ) ராணுவத் தளவாடங்களின் உற்பத்தி,ரயில்வே, வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது

(ஆ) அரசுத் துறைகளில் 100 சதவீத அளவில்அந்நிய நேரடி முதலீட்டிற்குகதவுகளைத் திறந்து விடுவது

(இ) மின் விநியோகம், குடிநீர் விநியோகம் மற்றும் போக்குவரத்து போன்றஅடிப்படை சேவைத் துறைகளை தனியார்மயமாக்குவது என்பனவே அந்த மூன்று அம்சங்களாகும். இதன் வாயிலாக, இந்திய மற்றும் வெளிநாட்டு பெரு மூலதனத்திற்கு மிகப் பெரிய செல்வத்தை மோடி அரசு அள்ளித் தருகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச் சீர்திருத்தக்கொள்கை, விளைச்சலுக்கான செலவு மற்றும் விளைபொருட்களின் விலை, கடன் மற்றும் காப்பீட்டு பாதுகாப்பு ஏழை மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்வது, உணவுப் பாதுகாப்பு, கால்நடை வளம் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் கிராமப்புற இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கையின் ஒவ்வொரு அம்சமும் மோடி அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்தில் ரொக்கப் பரிமாற்றமே பிரதானமாக உள்ளதால், பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கிராமப்புறப் பொருளாதார வாழ்வில் ஆழமான பாதிப்பும், எதிர்மறைத் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சியதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் இறைச்சிக்காக கால்நடைகள் கொல்லப்படுவதற்கும், கால்நடைகளின் வர்த்தகத்திற்கும் எல்லா விதத்திலும் தடை விதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பில் மோடி அரசு மிகப் பெரியதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய பொருளாதாரக்கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE)வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகிறபோது, ஜனவரி-ஏப்ரல் 2017ல் கிட்டத்தட்ட 15 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் உழைப்புச் சந்தையில் நுழைகின்றனர். இவர்களில் பலருக்கு வேலை எதுவும் கிடைக்காமல், அவர்கள் வேலையில்லாமலேயே உள்ளனர்.

இந்துத்துவா தாக்குதல்                                                                                                                                                          அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் பல்வேறு அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில்ஆர்எஸ்எஸ் ஆட்கள் ஊடுருவி ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதை கடந்தநான்காண்டு காலத்தில் காண முடிந்துள்ளது. மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் பாஜக-ஆர்எஸ்எஸ்ஆட்கள் ஆவர். இவர்களில் சிலர் மதவாதநிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லதங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். அரசியல் சாசன அமைப்புகள் தலைகீழாக மாற்றப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டுமென்ற தங்களது விருப்பத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் மத்திய அரசால் மேலிருந்து திணிக்கப்படுகிற அதேநேரத்தில், அடிமட்ட அளவில், ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்துவா பரிவாரங்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. இஸ்லாமியர்களை குறி வைக்கும் நோக்கத்துடன், கால்நடை வியாபாரிகள் அல்லது விவசாயிகள்மீது பசு பாதுகாவலர் என்ற பெயரிலான கும்பல்கள் குறி வைத்து, அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைத் தொடுக்கின்றன. இத்தகைய பாசிச பாணியிலான தாக்குதல்களில், பசு வதை அல்லது மாட்டிறைச்சி என்ற பிரச்சனையில் கடந்தமூன்றாண்டு காலத்தில் 30க்கும் மேற்பட்டகொலைகள் நடந்துள்ளன. பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமையிலான மாநிலஅரசுகள் வெளிப்படையாக பசுக்குண்டர்களை ஊக்குவித்து, ஆதரவளிக்கின்றன. மக்களை மதரீதியாக பிளவுபடுத்திட, ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்களைக் குறி வைத்து, அவர்களை தேச விரோதிகளாகச் சித்தரிப்பது போன்ற வழிமுறைகளைஇந்துத்துவா படையினர் பயன்படுத்துகின்றனர்.

அதிகரித்து வரும் எதிர்ப்புகளும், விரிவடைந்து வரும் போராட்டங்களும்                                                                   மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள்,மதவாத நிகழ்ச்சிநிரல் மற்றும் எதேச்சதிகார தாக்குதல்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதை இக்கால கட்டத்தில் காண முடிந்துள்ளது.

விவசாயிகளின் கூட்டுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. மகாராஷ்டிர மாநிலவிவசாயிகள் நடத்திய 11 நாள் வேலைநிறுத்தமும் அதனைத் தொடர்ந்த இயக்கங்கள், மத்தியப் பிரதேச மாண்டசூர் அதன் சுற்றுவட்டார மாவட்டப் பகுதிகளில் விவசாயிகள் தன்னெழுச்சியாக நடத்திய இயக்கங்கள், ஜார்க்கண்டில் குத்தகைதாரர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிராகசந்தால் பர்கானாஸ் மற்றும் சோட்டாநாக்பூரில் நடைபெற்ற இயக்கங்கள், ராஜஸ்தானின் சிகார் மற்றும் இதர ஐந்து மாவட்டங்களில் அனைத்துப் பகுதியைச் சார்ந்த கிராமப்புற மக்களின் ஆதரவுடன் விவசாயிகள் நடத்திய நீடித்த மற்றும் பரவலான இயக்கம் ஆகியன இவற்றுள் மிக முக்கியமானவையாகும்.

மாநில அரசுகளோடு மல்லுக் கட்டி இக்கோரிக்கைகளில் சிலவற்றில் இப்போராட்டங்களால் வெற்றி பெற முடிந்தது. 187 விவசாய அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டு மேடையின் சார்பில் நவம்பர் 20-21ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் நாடு முழுவதிலுமிருந்து பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் கலந்து கொண்டனர். சமீப காலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டியக்கத்தில் இது மிக முக்கியமானதாகும். இப்போராட்டங்கள் அனைத்திலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

செப்டம்பர் 2, 2016 அன்று தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை சார்பில் பொதுவேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. இதில் தொழிலாளர்களும், ஊழியர்களும் பெரும்எண்ணிக்கையில் பங்கேற்றனர். தனியார்மயத்தை எதிர்த்த வங்கித் துறை ஊழியர்கள், உருக்காலைத் தொழிலாளர்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டங்கள் போன்ற துறைவாரியான மிகமுக்கியமான இயக்கங்களும் நடைபெற்றுள்ளன. பெங்களூரில் அங்கன்வாடிஊழியர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் இத்தகைய துறைவாரியானபோராட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தில்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2017ஆம் ஆண்டு நவம்பர் 9முதல் 11 வரையிலான மூன்று நாட்கள்தொழிலாளர்கள் கூட்டாக நடத்திய மகாபாடவ் எனும் மகா முற்றுகை இயக்கத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பங்கேற்று தங்களதுஎதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் இந்திய தொழிற்சங்க மையம் பிரதானமான பங்காற்றியது.

எதேச்சதிகாரமான மதவாததாக்குதல்களுக்கு எதிராக ஜேஎன்யு, எச்சியு,எப்டிஐஐ போன்ற மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் போராட்ட இயக்கங்கள் நடைபெற்றுள்ளன. பாசிசத் தன்மையோடு பசு குண்டர்களால் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் படுகொலைகளையும் கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டங்களும், இயக்கங்களும்நடைபெற்றுள்ளன. கல்புர்கியின் படுகொலையை அடுத்து அதிக எண்ணிக்கையிலான பிரபல எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்களுக்களிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். கௌரி லங்கேஷ் படுகொலையை அடுத்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன.

ரோஹித் வெமுலாவின் மரணத்தையொட்டியும், உனாவில் தலித் மக்கள் மீதுதொடுக்கப்பட்ட தாக்குதல்களை கண்டித்தும் நாடு தழுவிய கண்டன இயக்கங்களும், கூட்டுப்பிரச்சாரங்களும் இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளால் நடத்தப்பட்டன.

வர்க்க, வெகுஜன மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டு மேடை, ‘மக்கள் ஒற்றுமை, மக்கள் உரிமை இயக்கம்’ (ஜன்ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன்) செப்டம்பர்2017ல் ஏற்படுத்தப்பட்டது. அது உருவாக்கியுள்ள கோரிக்கை சாசனத்தை முன்னிறுத்தி கூட்டுப் பிரச்சாரங்களும், இயக்கங்களும் மேற்கொள்ளப்படும்.

சுருங்கச் சொன்னால்…                                                                                                                                                                 தனது அரசியல் நிலையை பாஜக கெட்டிப்படுத்தியுள்ளது. மோடி அரசின்கீழ், நவீன தாராளவாத முதலாளித்துவச் சுரண்டல் மக்கள் மீது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைஅரங்கேற்றுவதன் வாயிலாக அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகள் அரிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஏகாதிபத்திய உத்திகளுக்கு நெருக்கமாக இந்தியாவை கொண்டு செல்ல பாஜக தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. இவையெல்லாம் எதேச்சதிகார-மதவாத ஆட்சிமுறை ஏற்பட்டு வருவதை குறிக்கின்றன.அதே நேரத்தில், மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. பல்வேறு பிரிவைச் சார்ந்த மக்களின் எதிர்ப்புக்களும், இயக்கங்களும் அதிகரித்து வருவதில் இதனைக் காண முடிகிறது.

ஆளும் வர்க்கங்கள்ஒரு புறமும், தொழிலாளி வர்க்கம் மற்றும்விவசாய வர்க்கம் மறுபுறமும்என இந்த இரு தரப்புக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. இத்தகையதொரு நிலையில், உழைப்பாளி மக்களின் பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல நாம்தலையீடு செய்திட வேண்டும்.தங்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராக உழைப்பாளி மக்களின்பல்வேறு பிரிவினர் நடத்திடும் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல கட்சி தனது தலையீட்டை அதிகரித்திட வேண்டும். நவீனதாராளவாத கொள்கைகளின் தாக்கங்களுக்கு எதிரான போராட்ட இயக்கங்களை மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இயக்கங்களோடு இணைப்பதே, பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையாகும். நவீன தாராளவாதக் கொள்கைகள், இந்துத்துவா மதவெறி மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றிற்கெதிரான போராட்டங்கள்ஒன்றோடு ஒன்று பிரிக்க இயலாதபடி பின்னிப்பிணைந்தவையாகும்.

அரசியல் கட்சிகளின் நிலை                                                                                                                                                  நமது கட்சித் திட்டம் சுட்டிக் காட்டுகிறபடி, பாஜக என்பது “பிரிவினைவாத, மதவாத மேடையைக் கொண்ட பிற்போக்குத்தனமான கட்சியாகும். பிற மதங்களின்பால்வெறுப்பு, சகிப்புத்தன்மையின்மை, தீவிரதேசியவாதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே அதன் பிற்போக்குவாத உள்ளடக்கம் அமைந்துள்ளது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் எனும் அமைப்பால் பாஜக வழிநடத்தப்படுகிறது. அதனைச் சார்ந்தவர்களால்ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. எனவே, பாஜகஒரு சாதாரண முதலாளித்துவ கட்சியல்ல. பாஜக ஆட்சியதிகாரத்தில் உள்ளபோது, அரசு அதிகாரம் மற்றும் அரசு இயந்திரம் ஆகியவற்றை அணுகுவதற்கான வாய்ப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குக் கிடைக்கிறது.” பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பால் பாஜக வழிநடத்தப்பட்டு, அதிகாரம் செய்யப்படுகிறது.

தற்போது, இந்தியாவில் உள்ள 29மாநிலங்களில் 19ல் பாஜக தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஆட்சி அதிகாரத்தில்உள்ளது. மக்களவையில் அதற்குப் பெரும்பான்மை உள்ளது. மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக உள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகிய இரண்டு பொறுப்புகளிலும் முதன்முறையாக பாஜக-ஆர்எஸ்எஸ்அமைப்பைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.பாஜகவைப் போன்ற வர்க்க குணாம்சங்களையே காங்கிரஸ் கட்சியும் கொண்டுள்ளது. பெரும் முதலாளிகள்-நிலப்பிரபுக்கள் ஆகிய வர்க்கத்தினர் நலனையே அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதன் அரசியல் செல்வாக்கும், ஸ்தாபனமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி பிரதானமான ஆளும் வர்க்கக் கட்சி என்ற இடத்தை பாஜகவிடம் அளித்துள்ளது. மதச்சார்பற்ற கட்சியாக காங்கிரஸ் தன்னை காட்டிக் கொள்கிறது.ஆனால், மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்களை மேற்கொள்ளும் திறனற்றது என்பதை நிரூபித்துள்ளது. நவீன தாராளவாத நிகழ்ச்சி நிரலின்முன்னோடியாக காங்கிரஸ் கட்சி விளங்கியது. மேலும், அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டை ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சியாக, இக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதையே அக்கட்சி தொடர்கிறது.நமது நாட்டிலுள்ள பெரும் முதலாளிகளின்அரசியல் பிரதிநிதிகளாகத் தற்போது பாஜகவும், காங்கிரசுமே இருந்து வருகின்றன.

நமது கட்சித் திட்டத்தின் புரிதலின் அடிப்படையில், பெரும் முதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்களின் நலன்களை காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன், ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளையும் கடைப்பிடிக்கிறது. எனவே, ஐக்கிய முன்னணியில் அவர்களை நேச சக்தியாகவோ அல்லதுகூட்டாளியாகவோ நடத்துகிற நடைமுறை உத்தியை நாம் கைக்கொள்ள முடியாது.ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருப்பதோ பாஜக ஆகும். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் அதற்கு இருக்கும் அடிப்படையான இணைப்பின் பின்னணியில், அது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, பாஜகவையும் காங்கிரசையும் சமமான அபாயங்களாக நடத்துகிற நிலைபாட்டை எடுக்க இயலாது.

கருத்தொற்றுமை உள்ள பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தினுள் காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பது என்பது நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே, மதவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பரந்துபட்ட மக்கள் திரட்டலுக்காக நாம் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். காங்கிரஸ் மற்றும் இதர முதலாளித்துவ கட்சிகளைப் பின்பற்றுகிற எளிய மக்களை நம்பக்கம் ஈர்க்கும் வகையிலான வர்க்க மற்றும்வெகுஜன அமைப்புகளின் கூட்டியக்கங்களை நாம் உருவாக்கிட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி சேராத மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் பிரச்சனைகளில், மதவாதம் மற்றும் எதேச்சதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராக எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இத்தகைய கட்சிகளுடன் கூட்டியக்கங்களுக்கு நாம் முயற்சி செய்து அவற்றை உருவாக்கிட வேண்டும்.

ஒரு மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட மாநிலக் கட்சிகள் குறித்த நமது அணுகுமுறையை இறுதி செய்யும்போது அக்கட்சிகளின் பங்களிப்பு மற்றும் அரசியல் ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நமதுகட்சியின் நலனை முன்னெடுத்துச் செல்வது,இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது ஆகியவற்றை மனதில் கொண்டதாகநமதுஅணுகுமுறை அமைய வேண்டும். எனினும், மாநிலக் கட்சிகளுடன் தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு கிடையாது.

கட்சியையும், இடது ஜனநாயக மாற்றையும் வலுப்படுத்துவோம்                                                                                              கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலமே கட்சியை வளர்ப்பதும், இடதுசாரி-ஜனநாயக முன்னணியை கட்டமைப்பதும் சாத்தியமாகும். மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவான சூழலிலும், கேரளா, திரிபுரா நீங்கலாக இதர மாநிலங்களில் முன்னேற்றம் இல்லாத சூழலில் இதுமிக முக்கியமான ஒன்றாகும். நமது கட்சியின் அடித்தளத்தையும், செல்வாக்கையும் விரிவடையச் செய்வதன் மூலம் மட்டுமே நாம் இடதுசாரி-ஜனநாயக மாற்றை நோக்கி நகர இயலும். இதற்கு மக்களுடனான உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்திட அனைத்துத் தரப்பிலும் குறிப்பான முயற்சிகள் தேவையாகும். மேலும், இத்தகைய தொடர்பை அரசியல் செல்வாக்காக மாற்றிட வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை உருவாக்கிட வேண்டும்.

அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்றவாறான ஓர் திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரிகள், கட்சிகள், வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோரைக் கொண்ட ஜனநாயக சக்திகளைஓரணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதே நேரத்தில், இடதுசாரிகளின் கூட்டு மேடைகளின் வாயிலாக இடதுசாரி-ஜனநாயக மாற்று தேசிய அளவில் முன்னிறுத்தப்பட வேண்டும்.மாற்றுக் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இடதுசாரி-ஜனநாயக திட்டத்தையேஇந்த நகல் அறிக்கை முன்னிறுத்துகிறது. உழைப்பாளி மக்கள், விவசாயிகள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிமக்களின் இதர பிரிவினர் ஆகியோரின் அடிப்படைக்கோரிக்கைகளை இது உள்ளடக்கியிருக்கும். இத்தகைய பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் ஒட்டி வர்க்கப் போராட்டங்களையும், வெகுஜன இயக்கங்களையும் கட்டிட இடதுசாரி-ஜனநாயக சக்திகளை அணி திரட்டிட இயலும்.

அரசியல் நிலைபாடு                                                                                                                                                                   மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சி தந்த அனுபவத்தில், இந்துத்துவா மதவாத சக்திகளை தனிமைப்படுத்திடவும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்திடவும் பாஜக அரசுதோற்கடிக்கப்படுவது அவசியமானதாகும்.

எனவே, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை அணி திரட்டிபாஜக மற்றும் அதன் கூட்டணியில் இருப்பவர்களை தோற்கடிப்பது பிரதானமான கடமையாகும். எனினும், காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ ஏற்படுத்திக் கொள்ளாமல் இதனை செய்திட வேண்டும்.

மத்தியில் பாஜக அரசாலும், மாநிலக்கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் உள்ள மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகளாலும் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்சி நடத்திடும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலும், பொருளாதாரக் கொள்கைகள் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒன்றுபட்ட இயக்கங்களை உருவாக்கிட கட்சி முயற்சி மேற்கொள்ளும்.

வெகுஜன இயக்கங்கள் மற்றும் கூட்டுப் போராட்டங்களுக்கான கூட்டு மேடைகள் அனைத்து மட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளுக்கான எதிர்ப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டியக்கங்கள், முதலாளித்துவக் கட்சிகளின் பின்னால் அணி திரண்டுள்ள எளிய மக்களை ஈர்த்திட வேண்டும்.

அரசிற்கு உள்ளேயும், வெளியேயும் இந்துத்துவா சக்திகளால் விடுக்கப்படும் கடுமையான சவால்களின் பின்னணியில், அனைத்து மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளை அணி திரட்டும் வகையிலான பரந்த மேடைகளை உருவாக்குவது அவசியமாகும். அடிமட்ட நிலையில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராட மக்கள் ஒற்றுமையை கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் அல்லது தேர்தல் உடன்பாடுகளாக இவை பார்க்கப்படக் கூடாது.அதே போன்று, ஜனநாயக உரிமைகள் மீதுதொடுக்கப்படும் எதேச்சதிகார தாக்குதல்களுக்கு எதிராகப் போராட பரந்த ஒற்றுமைகட்டப்பட வேண்டும்.

கட்சியின் சொந்த பலத்தை உருவாக்கிடவும், வளர்த்தெடுத்திடவும் கட்சி முன்னுரிமை அளித்திடும். இடதுசாரி ஒற்றுமையை விரிவுபடுத்தி, வலுப்படுத்திட கட்சி பாடுபடும்.

திட்டவட்டமான திட்டத்தை முன்வைத்து கூட்டியக்கங்களையும், கூட்டுப்போராட்டங்களையும் நடத்திட அனைத்து இடதுசாரி-ஜனநாயக சக்திகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதன் வாயிலாகவே இடதுசாரி-ஜனநாயக முன்னணி உருவாக இயலும். திட்டவட்டமான திட்டத்தை முன்வைத்து மேடையை உருவாக்கிட பல்வேறுஇடதுசாரி-ஜனநாயக சக்திகளை மாநிலங்களில் ஒருங்கிணைத்திட வேண்டும். தேசிய அளவில், நமது அரசியல் பிரச்சாரங்களில் இடது-ஜனநாயக மாற்று முன்னிறுத்தப்பட வேண்டும். மேலும், இடதுசாரி-ஜனநாயக முன்னணியில் அணி திரளத் தகுந்த அனைத்து சக்திகளையும் அணி திரட்டிட வேண்டும்.

கட்சியின் மேற்கூறப்பட்ட அரசியல் உத்தியின் அடிப்படையில் பாஜகவிற்கு எதிரான வாக்குகளை பெருமளவில் கைப்பற்றிடப் பொருத்தமான தேர்தல் உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

தற்போதைய சூழலில் நமது கடமைகள்                                                                                                                                                மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். சுரண்டலுக்கும், நவீனதாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படும் அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களும் அணி திரட்டப்பட வேண்டும். மேலும் வேலை, நிலம், உணவு,கூலி மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கான போராட்டத்திற்கு அவர்கள் திரட்டப்பட வேண்டும். தன்னெழுச்சியான போராட்டங்கள் உருவாகும்போது அவற்றில் கட்சி தலையீடு செய்து அவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இந்துத்துவா மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் முன்னிற்க வேண்டும். சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் தத்துவார்த்தத் தளத்தில் இப்போராட்டம் நடத்தப்படவேண்டும். மதவாத சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் பரந்துபட்ட மேடை உருவாக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளவேண்டும். பெண்களது உரிமைகளுக்கான, அவர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு எதிரான இயக்கங்களை கட்சிதொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எல்லா நிலைகளிலும் ஆதிவாசி மக்களின் உரிமைகளை கட்சி பாதுகாத்திட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்திட பரந்துபட்ட ஒற்றுமை கட்டப்பட வேண்டும்.

தேசத்தின் இறையாண்மையை பாதுகாத்திடவும், அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவில் ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு எதிராகவும் மக்களை திரட்டிட தனது பிரச்சாரங்களை கட்சி விரிவுபடுத்திட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிவதை மூடி மறைக்க பாஜக பயன்படுத்தும் அதன் தீவிர தேசியவாத நிலைபாட்டை கட்சி அம்பலப்படுத்திட வேண்டும்.

அதிகரித்து வரும் எதேச்சதிகாரப் போக்கை எதிர்கொள்ள பரந்துபட்ட சக்திகளை கட்சி அணி திரட்டிட வேண்டும். ஜனநாயகத்தின் மீதும், கலைத்துறையின் சுதந்திரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்பளுக்கு எதிராக பரந்துபட்ட திரட்டல் உருவாக்கப்பட வேண்டும்.

தனது சொந்த ஆற்றலை வலுப்படுத்திடவும், வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை கட்டுவதன் வாயிலாக தனதுசெல்வாக்கையும், வெகுஜன அடித்தளத்தையும் விரிவுபடுத்திட கட்சி முன்னுரிமை அளித்திட வேண்டும். மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும், கட்சி மற்றும் இடதுமுன்னணி மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் இயக்கங்களை நடத்திட கட்சி குறிப்பான கவனத்தை செலுத்திட வேண்டும். திரிபுரா மற்றும் கேரளாவில் அமைந்துள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசுகளைப் பாதுகாப்பது மிக முக்கியமான கடமையாகும்.

இடதுசாரிகளின் கூட்டு மேடையின் அடிப்படையிலான கூட்டியக்கங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் தற்போது காணப்படும் குறைபாடுகளைக் களைந்து இடதுசாரி ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இடதுசாரி-ஜனநாயக திட்டத்தை ஒட்டி இதர ஜனநாயக அமைப்புகளையும் சக்திகளையும் ஈர்த்திட இதுவே அடிப்படையாக இருந்திட வேண்டும்.இத்தகையதொரு திட்டத்தை ஒட்டி நடத்தப்படும் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் மூலமே உண்மையான மாற்று, அதாவது இடதுசாரி-ஜனநாயக மாற்று உருவாகிடும்.

தமிழில் : கிரிஜா

Leave A Reply

%d bloggers like this: