எஸ். ஏ. பெருமாள்
சிபிஎம் மாநில மாநாடு தூத்துக்குடியில் மிகுந்த சீரோடும் சிறப்போடும் நடைபெற்று பிப். 20 ல் மாபெரும் செம்படை அணிவகுப்பு நிகழ உள்ளது. தமிழகம் முழுதுமுள்ள கட்சிக் கிளைகள் பங்கேற்பதற்குத் தயாராகி வருகின்றன. கடந்த முன்றாண்டு காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக களம் பல கண்டவர்கள் வருகிறார்கள் முத்து நகர் நோக்கி.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தனி வழியே, தன்னிகரற்றுப் போராடிய வ.உ.சி. யின் பூமி அது. 1908 ஆம் ஆண்டிலேயே கோரல் மில் தொழிலாளர்களை சங்க மாக்கி வெள்ளை முதலாளிகளுக்கெதிராக வர்க்கப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தலைவர் அவர்.
நாட்டின் முதல் தொழிற்சங்கத்தை தூத்துக்குடி கோரல்மில்லில் துவக்கியதும், வேலை நிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியதும் அவரே. கோரல் மில்லில் முந்நூறுக்கும் மேற்பட்ட கிராமத் தொழிலாளர்கள் பணியாற்றினர். காலை ஐந்தே முக்கால் மணி முதல் மாலை ஆறேகால் மணி வரை தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். அவர்களது மாத ஊதியம் ஆறுமுதல் ஏழு ரூபாய் தான்.
தொழிலாளர்கள் மாலையில் வேலை விட்டுச் செல்லும் போது தலையெல்லாம் பஞ்சுத் தூசி ஒட்டியிருக்கும் அதைப் போக்கிக் கொள்ள தொழிலாளர்களின் உள்ளங்கையில் வேப்ப எண்ணெய் ஊற்றுவார்கள், அதைத் தலையில் தேய்த்துக் கொண்டு வீடு செல்வர். தலைக்கு கரம்பை மண்ணைத் தேய்த்துக் குளித்துவிட்டு சுடு கஞ்சி குடித்து விட்டு படுப்பார்கள். மீண்டும் அதிகாலை புறப்பட்டு வேலைக்குப் போய் தினசரி பனிரண்டு மணி நேரம் உழைப்பார்கள். இவர்களுக்குத்தான் வ.உ.சி சங்கம் வைத்தார்.வெள்ளை முதலாளியிடம் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு, வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. எந்த சமரசத்திற்கும் நிர்வாகம் வர மறுத்ததால் வ.உ.சி 1908 பிப்ரவரி 27-ல் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தார். வேலைநிறுத்தம் கடுமையான அடக்குமுறைகளை மீறி வெற்றிகரமாக ஒரு மாதகாலம் நடந்தது. ஏழைத்தொழிலாளி ளின் பசிபோக்க வ.உ.சி. தனது மனைவியின் நகைகளை விற்று கஞ்சித் தொட்டி திறந்தார்.
முடிவில் வேலை நேரம் பத்துமணி நேரமாகக் குறைக்கப்பட்டு ஒன்றரை ரூபாய் ஊதிய உயர்வு கிடைத்தது. இந்தியாவின் இந்த முதல் தொழிற்சங்கத்தை நிறுவி, ஸ்ட்ரைக்கில் ஈடுபட வைத்த பெருமை வ.உ.சி அவர்களையே சாரும். பிற்காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வெள்ளை நீதிமன்றம் வாழங்கியது. கோரல் மில் ஸ்ட்ரைக், கப்பலோட்டிய காழ்ப்புணர்வில் சதிவழக்குப் போடப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்தத் தீர்ப்பைக் கண்டித்து கோரல் மில் தொழிலாளர்கள் ஒரு நாள் கண்டன வேலை நிறுத்தம் செய்தனர். இந்தியாவில் நடந்த தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வேலைநிறுத்தம் இதுதான்.
இதைத் தொடர்ந்து தான் பம்பாயில் திலகர் கைது செய்யப்பட்டபோது தொழிலாளர்கள் ஆறு நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இது தான் தொழிலாளி வர்க்கத்தின் இரண்டாவது அரசியல் வேலைநிறுத்தமாகும்.ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி சென்றபோது அப்போதைய தலைவர் அண்ணாச்சி சங்கர நாராயணன் வ.உ.சி பற்றி கதை கதையாய் சொன்னார். நானும் தோழர் டி.கே.சுவாமி தாசும் கேட்டு கண்கலங்கினோம். அண்ணாச்சியிடம் இதை எழுதுமாறு கூறினேன். அவர் எழுதவில்லை.
வ.உ.சி இன்று மறக்கப்பட்ட துயர நாயகனாய், மறைக்கப்பட்ட மாமனிதராய்……
தொழிலாளி வர்க்கமும் செங்கொடி இயக்கமும் உங்களை இதயத்தில் வைத்துப் போற்றவே பிப்.20 -ல் செம்படை தூத்துக்குடியில் அணிவகுக்கிறது வ.உ.சி.!

Leave a Reply

You must be logged in to post a comment.