====மதுக்கூர் இராமலிங்கம்=====
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 22ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. முத்துக்கும், உப்புக்கும் பெயர் பெற்ற தூத்துக்குடி மண்ணில் நடைபெறவுள்ள இந்த மாநாடு அரசியலின் ஆழ, அகலங்களை அளந்து முத்து முத்தான முடிவுகளை எடுக்க இருப்பதோடு, சாரமற்றதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலை உப்பு போல அர்த்தமுள்ளதாக மாற்றவுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளில் பின்பற்றப்படும் உள்கட்சி ஜனநாயகம் வேறு எந்த முதலாளித்துவ கட்சிகளாலும் பின்பற்ற முடியாதது. கம்யூனிச இயக்கத்தின் மாநாடு உள்கட்சி ஜனநாயகத்தின் உச்சம். பல முதலாளித்துவ கட்சிகளில் கொடி பிடிக்கும் தொண்டன் முடிவெடுப்பான் என்று அலங்கார வார்த்தைகள் உதிர்க்கப்பட்டாலும், முடிவெடுக்கிற இடத்திலிருந்து கொடிப்பிடிக்கிற தொண்டன் தள்ளியே வைக்கப்படுவான்.ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, கட்சி கிளைத்துவங்கி அரசியல் தலைமைக்குழு வரை முழுமையான ஜனநாயக நெறிமுறைகளோடு இயங்கி வருபவை ஆகும். தலைக்கு பின்னால் ஒளி வட்டம் வரையப்பட்ட தலைவர்கள் மட்டுமே கூடி முக்கியமான அரசியல் ஸ்தாபன முடிவுகளை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எடுப்பதில்லை. மாறாக அடி முதல் நுனி வரை முழுமையான விவாதம், கருத்துச் சுதந்திரம் என்கிற அடிப்படையில் விவாதங்கள் நடத்தப்பட்டு ஜனநாயக மத்தியத்துவம் என்ற உயரிய கோட்பாட்டின் வழிநின்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகல் இணையத்தில் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி கட்சியை நேசிக்கிற யாரும் இதை படிக்கலாம். கருத்துக்கூறலாம். திருத்தங்களை கூறலாம். அனைத்தையும் கட்சி பரிசீலித்து, அகில இந்திய மாநாட்டில் முழுமையாக விவாதித்து அங்கே முன்மொழியப்படுகிற திருத்தங்களையும் கருத்தில் கொண்டு தேவையானால் வாக்கெடுப்பு நடத்தி அதன் பிறகே கட்சியின் எதிர்கால திசைவழியை, நடைமுறை உத்தியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும். வேறு எந்த கட்சியிலும் இத்தகையதொரு நடைமுறையை இருப்பதாக கூறமுடியாது.

தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநில மாநாடும் முழுமையான உள்கட்சி ஜனநாயகத்தின் வெளிச்சத்திலேயே நடைபெறவுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கட்சி கடந்த வந்த பாதை, நடத்திய போராட்டங்கள், முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள், அறிந்து கொண்ட அனுபவம், கற்ற படிப்பினை அனைத்தையும் பரிசீலித்து அதனடிப்படையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான பாதையை வகுத்திட உள்ளது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு சொந்த நாட்டு மக்களுக்கெதிராகவே ஒருயுத்தத்தை தொடுத்துள்ளது. தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி என தொடர் தாக்குதல்களால் இந்திய மக்களின் வாழ்க்கையை குதறிக்கொண்டிருக்கிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அனைத்துத் துறைகளிலும் வம்படியாகத் திணிக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதலபாதாளம் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆர்எஸ்எஸ் என்கிற பயங்கரவாத அமைப்பின் அரசியல் முகமான பாஜக குருவின் குதர்க்கமான அரசியல் நிகழ்ச்சி நிரலை அன்றாடம் செயல்படுத்துகிறது. மாட்டிறைச்சி அரசியல் துவங்கி அயோத்தி பிரச்சனை வரை அனைத்தும் ஆர்எஸ்எஸ் வகுத்த வழித்தடத்திலேயே திணிக்கப்படுகிறது. மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதன் மூலம் ஒன்றுபட்ட மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்கிறது பாஜக. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கிற அதிமுகவினர் ஏற்கெனவே கூனல் விழுந்த முதுகெழும்பை கழற்றி மோடியிடம் கொடுத்துவிட்டனர். ஆளுநர் மாளிகை அதிகார மையமாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம், உதய் மின்திட்டம் என முன்பு எதிர்த்த அனைத்தையும் தற்போது தெண்டனிட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர். நீட் தேர்வு எனும் கொடுவாய் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவிட்டது. பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. புயல் வெள்ள மற்றும் வறட்சி நிவாரணத்தை வாதாடிப் பெறுவதற்கு வக்கற்ற அரசாக தமிழக அதிமுக அரசு உள்ளது.

தமிழகத்திலும் இந்துத்துவா சக்திகளின் சில்லரைச் சேட்டைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. படைப்பாளிகள், கவிஞர்கள், கலைஞர்கள், மதவெறி மற்றும் ஜாதி வெறி கும்பல்களால் அச்சுறுத்தப்படுகின்றனர். லஞ்சம் இல்லாத இடமேயில்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை பல்கலைக்கழக துணை வேந்தர் பிடிபட்டது கூட பங்கு ஒழுங்காக செலுத்தாததால்தான் என்று சொல்லப்படுகிறது. பணம் கொடுத்து பதவியை பிடித்தவர்கள் சரியாக மந்திரிமார்களுக்கு அவிர்பாகம் வழங்கி உத்தமர்களாக உலா வந்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் தமிழக மக்களின் உரிமைகளுக்கான போர்க்களத்தில் ஓங்காரப் பெரு முழக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

விவசாயம், தொழில், கலை, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடாத நாளில்லை. நீட்தேர்வு முதல் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான போராட்டம் வரை, காவிரி பிரச்சனை முதல் அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பாதுகாக்கிற போராட்டங்கள் வரை, விவசாயிகளுக்கு நியாயத்தை கோரி நடக்கும் போராட்டங்கள் முதல் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துகிற போராட்டம் வரை கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தையே போராட்டக் களமாக மாற்றிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.

அரசியலில் குதிக்கப்போவதாக ஆரவார அறிவிப்புகள் அன்றாடம் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. அரசியலில் சூனியம் நிலவுவதாகவும் அதை நிரப்பும் சூத்திரம் தங்களிடம் மட்டுமே இருப்பதாகவும் கூறிக் கொண்டு பல குறளி வித்தைக்காரர்கள் ஆயத்தமாகிறார்கள்.ஆனால் அரசியல் என்பது போராட்டக்களத்தில் விளைவது என்கிற உறுதியோடு மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் காண்கிறது. சுதேசி முழக்கமிட்டு, மேலைக் கடல் முழுவதும் கப்பல் விட்ட மண்ணில் கூடுகிற செங்கொடி இயக்கத்தின் மாநாடு இருள் சூழ்ந்த சூழலில் காலை வெளிச்சமாக, கலங்கரை விளக்கமாகத் திகழும் என்பது திண்ணம்.

மாநாட்டின் நிறைவு நாளில் நடைபெறவுள்ள செம்படை அணிவகுப்பு திசைகள் தோறும் தீபத்தை ஏற்றி வைக்கும். மக்களை பிரிப்பதற்காக படை திரட்டுவோரை பதற வைக்கும். ஜாதி மத வெறியர்களை வெருள வைக்கும். பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நிகழ்த்தவுள்ள உரை புதியதொரு பாதையை சமைப்பதாக அமையும்.
செங்கொடி உயரட்டும்
தமிழகம் நிமிரட்டும்.

Leave A Reply

%d bloggers like this: