கோவை, பிப். 14-
உலகமெங்குaம் சோசலிசத்தின் மீதான ஈர்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 22 ஆவது மாநாடு செவ்வாயன்று மணியகாரன்பாளையத்தில் துவங்கியது. இம்மாநாட்டை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து பேசியதாவது: முதலாளித்துவமா அல்லது சோசலிசமா என்கிற விவாதம் தற்போது உலகமெங்கும் பற்றிக் கொண்டிருக்கிறது. செங்கொடியின் கீழ் இருந்த சோவியத் யூனியன் தற்போது இல்லை. உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இல்லை. ஆனாலும் சோசலிசத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. காரணம் முதலாளித்துவம் வத்தால் எந்த மாற்றத்தை உருவாக்க முடியாது. கம்யூனிஸ்டுகளின் பொருளாதார கொள்கைகளால்தான் மாற்றத்தை தரமுடியும் என்கிற நிதர்சனத்தை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் உலகின் வல்லரசான அமெரிக்காவில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களிடம் முதலாளித்துவமா? சோசலிசாமா? என்கிற கருத்துக் கணிப்பை மேற்கொண்டனர்.

இதில் 65 சதவீதமான இளைஞர்கள் சோசலிசம்தான் தீர்வு என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். உலகின் முதல் வல்லரசு நாட்டிலேயே இதுதான் நிலை.இந்திய நாட்டை பொருத்தவரையில் 2004ல் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ஆதிக்கம் செலுத்துகிற இடத்தில் நாம் இருந்தோம். உலகமயம், தாராளமயம் கொள்கையை தீவிரமாக ஆதரிக்கும் முதலாளித்துவ அரசுக்குத்தான் நாம் ஆதரவு அளித்தோம். வகுப்புவாத சக்திகள் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக இந்த ஆதரவை நாம் அளித்தோம். இடதுசாரிகள் ஆதரவில்லாமல், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சி இல்லை என்கிற நிலையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்த காலகட்டத்தில்தான் நூறுநாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து, அதனை ஆட்சியாளர்களை நிறைவேற்ற வைத்தோம். மேலும், முதலாளித்துவ அரசே ஆனாலும் மக்கள் விரோத திட்டங்களை அமலாக்காமல் தடுத்தோம். குறிப்பாக, ஒன்பது மாதங்கள் சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்து கொண்டே இருந்தபோதும், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை ஏறவிடாமல் தடுத்தோம்.

ஆனால், இன்று சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை பெருமளவில் குறைந்துள்ளபோதும் மோடி அரசு தினம், தினம் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்திக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய சந்தையை கொண்ட மக்கள் வாழுகிற நாடு இந்தியா. 1989 ஆம் ஆண்டிலிருந்து கடுமையாக நாசகர பொருளாதார, உலகமய கொள்கைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு இந்தியாவில் ஆட்சியா என்பதை முதலாளித்துவ சக்திகளால் பொறுக்க முடியவில்லை. மேலும், அவர்களை கவலை கொள்ளச் செய்தது. இதன் காரணமாகத்தான் கம்யூனிஸ்டுகள் தயவில் ஆட்சி என்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவில் உள்ள முதலாளித்துவ சக்திகள் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள முதலாளிகள் நமது வளர்ச்சியை அழிக்க முனைந்தனர். அதன் எதிர்வினையை நாம் தற்போது வரை எதிர்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு சாகசங்களை மேற்கொண்டனர்.

இதன் ஒருபகுதிதான் மேற்கு வங்கம். இவர்கள் ஆணிவேரான அதை வெட்டியெடுக்க துணிந்தார்கள். இதனால்தான் மேற்குவங்க மாநிலத்தில் பல நூறு தோழர்களை நாம்பலிகொடுத்துள்ளோம். கம்யூனிஸ்டுகள் எங்கெங்கல்லாம் வலுவாக இருக்கிறார்களோ அங்கே திட்டமிட்டு ஒன்றிணைந்து அழிக்க நினைத்தார்கள். இதில் முதலாளித்துவத்தின் வர்க்க நலன் இருக்கிறது. இந்த பின்னணியை நாம் புரிந்து கொண்டால் இதிலிருந்து நாம் மீளமுடியும். கம்யூனிஸ்டுகள்தான் மாற்று என்கிற நம்பிக்கையை வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதிலிருந்து நாம் படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சோர்வடைய ஒன்றுமில்லை. விழும், ஆனால் மீண்டும் எழும் என்கிற உத்வேகத்தோடு வேலையை வேகப்படுத்தி வலுவாக முன்னேற வேண்டிய நேரமிது. காங்கிரசுக்கு மாற்றாக எந்த அடிப்படை மாற்றத்தையும் மோடி ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, நமது நாட்டின் மக்களை காப்பாற்றுகிற எந்த நடவடிக்கையும் மோடி மேற்கொள்ளவில்லை. வளர்ச்சி குறித்து மோடி பேசியதை கேட்டு நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று அவரை ஆதரித்த தொழில் முனைவர்கள் உள்ளிட்டு பலர் இப்போது வெளிப்படையாக பேசுகிறார்கள். இருப்பதை பாதுகாக்க முடியாதவரால் புதிதாக எதையும் உருவாக்க முடியாது. தற்போது, சிவகாசியில் பட்டாசு, தீப்பட்டி தொழில்கள் அழிவு நிலையில் உள்ளது. கைத்தறி, பனியன் என இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரதான தொழில்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுதான் மோடியின் ஆட்சி.

அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு இங்கிருந்து வேலை பார்ப்பவராக மோடி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் மின்சார தளவாடங்கள் தொழிற்சாலை இயங்குவதற்கு இங்குள்ள பிஎச்எல் போன்ற நிறுவனத்தை மூடுவதற்கு திட்டம் போடுகிற தேசவிரோத ஆட்சி செய்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயி மட்டுமல்ல, நூறு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயியும் வாழவில்லை. உணவுத் தேவையை பூர்த்தி செய்யாமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தியாவில் இன்று கம்யூனிஸ்டுகள் வளர்வதற்கு இதைவிட வேறு என்ன சூழல் வேண்டும். மேலும், தங்களின் தோல்விகளை மறைப்பதற்குத்தான் உணவு, உடை என பல்வேறு விதமான பண்பாட்டின் போரால் கவனத்தை திசை திருப்பி கலவரத்தை உருவாக்குகிறார்கள். ஊடகத்தில் விவாத பொருளாக இவை மட்டும்தான் முன்வைத்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து மக்களை விடுவித்து அணிதிரட்ட வேண்டிய தேவை நமக்குள்ளது. சோசலிசம்தான் மாற்று என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம்முடைய வளர்ச்சியை தடுப்பதற்கு நமது வர்க்க எதிரிகளிடம் அரசு பலம், ஊடக பலம், பொருளாதார பலம் அனைத்தும் கொண்டவர்களாக உள்ளனர். ஆகையால் அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடைபெறும் அரசியல் கொஞ்ச தூரம் செல்லும் அவ்வளவுதான். வளர்வதற்கு வாய்ப்புள்ள ஒரே இயக்கம் கம்யூனிஸ்டுகள்தான். அரசியல் அப்பாவியாக நாம் இல்லாமல் நமதுகருத்தோடு ஏதோ ஒரு புள்ளியில் இணைகிற அனைத்து பிரிவினைரையும் ஒன்றினைத்து, நமது முன்னோர்கள் எந்த லட்சியத்திற்காக உழைத்தார்களோ, தியாகம் செய்தார்களோ அதனை நிறைவேற்ற முனைப்பாக பணியாற்றி வெற்றிபெறுவோம். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி மாவட்டமான கோவை மாவட்ட மாநாடு அத்தகைய திட்டங்களை உருவாக்கட்டும். இவ்வாறு அ.சவுந்திரராசன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.