பள்ளிப்பாளையம், பிப்.13-
விசைத்தறி தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 18 ஆவது சபை கூட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.மோகன் தலைமையில் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட உதவி தலைவர் கே.மோகன் கொடியேற்றினர். மாவட்ட உதவி செயலாளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். பஞ்சாலை சங்க செயலாளர் எஸ்.தனபால், ஜெனரல் சங்க செயலாளர் சி.சௌந்தராசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தீர்மானங்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், எலச்சிப்பாளையம், வெப்படை, திருச்செங்கொடு பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மே தினம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வாரந்திர விடுமுறை அளிக்க வேண்டும். 8 மணி நேர வேலையுடன், ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக எம்.ஆர்.முருகேசன், செயலாளராக எம்.அசோகன், பொருளாளராக கே.மோகன், உதவி தலைவர்களாக எஸ்.ஆறுமுகம், கே.சண்முகம், உதவி செயலாளர்களாக எஸ்.முத்துக்குமார், ஜி.மோகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.