====என்.ராஜேந்திரன் =====                                                                                                                                                           உங்ககிட்ட ஸ்மார்ட்போன் இருக்கா? அப்போ வாட்ஸ்அப் நெம்பர் சொல்லுங்க என்று சொல்லும் அளவுக்கு அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம் பிடித்துவிட்டது வாட்ஸ்அப். இதற்குப் போட்டியாக டெலிகிராம், கூகுள் டியோ, ஹைக் என எண்ணற்ற சமூக வலைத்தள செயலிகள் இருந்தாலும், எவையும் தொட்டுவிட முடியாத உயரத்தில் வாட்ஸ்அப் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் அது முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணம் தேவைக்கேற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பதுதான். அப்படி தற்போது வந்துள்ள வசதிகள் புதிய ரகமானவை.

வாட்ஸ்அப் மூலம் வர்த்தகம்
வழக்கமான வாட்ஸ்அப் செயலியின் கிளை போல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதிக்கு தனியாக ‘வாட்ஸ்அப் பிஸினஸ்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை எளிதாக தொடர்பு கொண்டு, வர்த்தகம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.உலக அளவில் பல நாடுகளிலும் இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியா மட்டுமல்லாமல் பிற நாட்டு வாடிக்கையாளர்களார்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். உற்பத்தியாளரோ விற்பனையாளரோ நேரடியாக வாடிக்கையாளருக்கு பொருட்கள் குறித்த விவரங்கள், விலை, சிறப்பு அம்சங்கள், காணொலிகள், படங்கள், புதிய அறிமுகங்கள் பற்றியும் தகவல் அனுப்பமுடியும்.

வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தல், புதிய தள்ளுபடிகள், வாழ்த்துக்களை பரிமாறுதல் என பல விதத்திலும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய செயலியில் பாதுகாப்பிற்கு சில வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நீங்கள் சில எண்களை பாதுகாப்பு கருதி வேண்டாம் என்று எண்ணினால் அவற்றை தடுத்து கட்டுப்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் மக்கள் அதை அப்படியே பயன்படுத்த விரும்பினால் அப்டேட் மட்டும் செய்து கொள்ளலாம். தனியாக வேறு எண்ணில் பதிய விரும்பினால் இந்த புதிய செயலியை பதிவிறக்கம் செய்து வர்த்தகத்திற்கான எண்ணை பதிவு செய்து OTP பெற்று பயன்படுத்தலாம்.

பணப்பரிமாற்ற வசதி
பீம், பேடிஎம் போன்ற ஆப்களில் உள்ள UPI கேட்வே மூலம் பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. வங்கி கணக்கு எண் விபரங்களைக் கொடுக்காமல் மொபைல் எண்ணை மட்டும் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய உதவும் இந்த வசதி, மற்ற ஆப்களைக் காட்டிலும் வாட்ஸ்அப்பில் எளிதாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்களும் வர்த்தக நோக்கர்களும் கருதுகின்றனர். இந்த வசதியை ICICI வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்ய புதிய வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை பணம் அனுப்புவோர் மற்றும் பெறுபவர் இருவரும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வாட்ஸ்அப் மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும். 70க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகள் UPI வசதியில் இணைக்கப்பட்டிருப்பதால் வாட்ஸ்அப் தரும் வசதி பயனுள்ளதாக இருக்கும்.இந்த வசதி தற்போதுதான் பயனருக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. செட்டிங்ஸ் பக்கத்தில் Payments என்ற வசதி சேர்க்கப்பட்டிருந்தால் இதனை செயல்படுத்தலாம். . உங்களுக்கு பேமெண்ட்ஸ் வசதி காட்டப்படவில்லையென்றால் அடுத்த அப்டேட்டிற்காக காத்திருக்கவும். அப்டேட் கிடைத்தவர்கள் பேமெண்ட்ஸ் என்பதைத் திறந்து, விபரங்களை அளித்தால் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். பயனர் உறுதி செய்யப்பட்டவுடன் உங்கள் வங்கிக் கணக்கிற்கான UPI பின் எண்ணை உள்ளிட்டு பேமெண்ட்ஸ் வசதியை செயல்படுத்தலாம்.

வருகிறது குரூப் சேட்
வீடியோ கால் வசதியில் புதிய அறிமுகமாக குரூப் சேட் அறிமுகமாகிறது. குரூப்பில் உள்ள அனைவருடனும் ஒரே நேரத்தில் வீடியோ காலிங் முறையில் உரையாட இந்த வசதி உதவும். இது தற்போது சோதனை அடிப்படையில் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.யூடியூப் பார்க்கலாம்
வாட்ஸ்அப் செயலி வழியாக யூடியூப் காணொலிகளை பகிரும் வசதி ஐபோனிற்கு வந்துவிட்டது. விரைவில் ஆண்ட்ராய்ட் போனிற்கும் இந்த அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது.

Leave A Reply

%d bloggers like this: