1.குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில், சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர் பீவி, 2006-இல் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. இவர்கள் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக கூறி, இந்த என்கவுண்ட்டர்களை அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்றைய பாஜக தலைவர் )அரங்கேற்றியிருந்தார்.3.இதுதொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமித்ஷா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மும்பை சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்தது. அமித்ஷா விசாரணைக்கு ஆஜராகாமல் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்தபோது, அன்றைய நீதிபதி உத்பத் கடும் கோபமடைந்து, அமித் ஷாவைக் கண்டித்தார். அமித்ஷா ஆஜராகியே தீர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், 2014 மே மாதத்தில் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும், உத்பத் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு பி.எச். லோயா நியமிக்கப்பட்டார்.
4.ஆரம்பத்தில் லோயா நீக்குப்போக்காக நடந்துகொண்டது போல இருந்தாலும், ஒருகட்டத்தில் அவரும் அமித்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அவர் ஆஜராகாத போது கண்டிக்கவும் செய்ததுடன், அமித் ஷா மீதான சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் ‘2014 டிசம்பர் 30’ என்று தீர்ப்புத் தேதியையும் அறிவித்தார்.
5.ஆனால், அதற்கு முன்னதாகவே டிசம்பர் 1-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, 48 வயது லோயா திடீரென மரணம் அடைந்தார்.
6.இது பெரும் விவாதமாக மாறியது. நீதிபதி லோயா மரணத்திற்கும் சொராபுதீன் வழக்குக்கும் தொடர்பு இருப்பதாக லோயாவின் சகோதரி அனுராதா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவிக்க மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தம் வருவதாக உயிருடன் இருந்தபோது லோயா தங்களிடம் கூறியதாக அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.7.அமித்ஷாவை விடுதலை செய்தால், மும்பை நகரின் மையப்பகுதியில் பல ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட வீட்டுமனையை பெற்றுத் தருவதாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரே பேரம் பேசியதால், லோயா, மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், எனினும், சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் முறையான நீதி அளிக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
8.லோயாவின் உயிர் பிரிவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக வந்த கைபேசி தகவல் இந்த மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்தி விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
9.இதனிடையே, லோயா மரணத்திற்குப் பிறகு, அவரது இடத்திற்கு வந்த நீதிபதி கோசாவி, டிசம்பர் 30 அன்று சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கிலிருந்து அமித் ஷாவை முழுமையாக விடுதலை செய்தபோது, லோயா மரணம் தொடர்பான சர்ச்சை பெரிதானது.
நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனாவாலா, பத்திரிகையாளர் பி.ஆர். லோன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றம் சென்றனர்.
10.தற்போது இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, நீதிபதி ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.
11.இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஷந்தனா கவுடர் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கப்பட்டதற்கு மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததும், அதைத்தொடர்ந்தே தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
12.ஆனால், இந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்று பாஜக தலைமையிலான மகாராட்ஷ்டிர அரசு கடுமையாக போராடி வருகிறது. சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா-வுக்காக ஆஜரான ஹரீஷ் சால்வே-யை, இந்த வழக்கில் மகாராஷ்ட்டிர அரசு வழக்கறிஞராக நியமித்திருப்பதுடன், மத்திய முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி-யையும் இறக்கிவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.