திருப்பூர், பிப்.13-
கடந்த நான்காண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எல்லாமே தோல்வியாக இருக்கிறது. மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் கூறினார்.

திருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டரில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் அ.சவுந்தரராசன் பங்கேற்று பேசுகையில்: தொழில் வளர்ச்சி மாநாடு நடத்துவதற்கு மாறாக தொழிலைக் காப்பாற்ற, தொழிலாளர்களைப் பாதுகாக்க மாநாடு நடத்துகிறோம். தொழிலை, விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், அவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கும் நிலையில் நாம் தொழிலையும், தொழிலாளரையும் பாதுகாக்க போராடுகிறோம்.

முன்பு சந்தையைப் பிடிப்பதற்கு யுத்தம் செய்தனர். இப்போது ஒப்பந்தம் என்ற பெயரில் சந்தையைப் பிடிக்கப் பார்க்கின்றனர். சொந்த நாட்டுக்கு பாதிப்பு, உரிமை பறிபோகிறதென்றால் சர்வதேச ஒப்பந்தம் அவசியமில்லை. இந்த நாட்டுத் தொழில் மீது இன்னொரு நாட்டுப் பொருள் ஆதிக்கம் செலுத்தினால் அதைத்தடுக்க வேண்டியது அரசின் கடமை. சர்வதேச ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிப்பதில்லை. அதை மீறிச் செயல்படுகிறது. அப்படி இருக்கும்போது நம் நலனுக்கு எதிரான திட்டங்களை ஏற்க முடியாது என்று மறுக்கும் துணிவு நமக்கு வேண்டும். இந்தியா என்ற பெரிய சந்தையைப் புறக்கணித்துவிட்டு, இதை இழந்துவிட்டு யாராலும் தொழில் செய்ய முடியாது. அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் மூடு மந்திரமாக உள்ளன. அதை பற்றி அறியாமல் இருந்தால் நாம் அரசியல் அப்பாவிகளாக இருப்போம். ஜிஎஸ்டி வரி விதித்தால் பல முனை வரி போய், ஒரு முனை வரியாக மாறும். அப்போது விலை குறையும் என்றனர். வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைப்போம் என்றனர். ஆனால் நடந்தது என்ன? கார்ப்பரேட்டுகள் பலனடைந்துள்ளனர். ஆனால் சிறு, குறு தொழில் துறையினர் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நான்காண்டு காலத்தில் மோடி என்ன சாதித்தார்? ஒவ்வொரு துறையிலும் தோல்வி. மோடி என்றாலே தோல்வி என்று அர்த்தம். நாடு தொழில் வளர்ச்சி அடைய மக்களின் வாங்கும் சக்தியும், உற்பத்தியாளர்களின் தாங்கும் சக்தியும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது, அபரிமித வரி விதிப்பதால், உற்பத்தியாளர்களுக்கு தாங்கும் சக்தி இல்லை. இரண்டும் சேர்ந்து விளைவு கடுமையாக இருக்கிறது. அரசு எடுக்கும் எந்த முடிவும் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். அரசின் கொள்கைகளால் விவசாயம் பாதிப்பு, வேலை பாதிப்பு, கூலி பாதிப்பு என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவர்களை கை தூக்கி விடுவதே மக்கள் நல அரசுக்கு இலக்கணம். ஆனால் இங்கு இல்லாதவர்களை மேலும் சுரண்டி, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார சுழற்சி இல்லாவிட்டாலும் சில கார்ப்பரேட்டுகள் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் தொழிலைக் காப்பாற்றினால்தான் முன்னேற முடியும். வீடு, மருத்துவமனை, கல்வி என அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர வேண்டும். ஆனால், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் தொழிலாளர்களிடம் பல கோடி ரூபாய் பெறக்கூடிய மத்திய அரசு ஏன் இன்னும் இஎஸ்ஐ மருத்துவ
மனையைக் கட்டவில்லை.

மத்திய அரசு பட்ஜெட்டில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வரக்கூடிய நிலையில் எப்படி இவ்வளவு மோசமான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. 2019 தேர்தலுக்கு முன்பாக மக்களை திசை திருப்ப, தேசபக்தி பொங்கி வழிவதாகக் காட்டுவதற்கு பக்கத்து நாட்டோடு ஒரு யுத்தத்தை நடத்தக்கூடும் என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.அமைதி, சமாதானம், மக்கள் ஒற்றுமை நிலவினால்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். அண்டை நாடுகளுடன் சண்டையில்லாத முன்னேற்றம் அவசியம். போராட்டம் என்பது யாரும் விரும்பாதது, ஆனால் நம் மீது அது திணிக்கப்படுமானால் நாம் என்ன செய்வது? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலை உள்ளது. அவர்கள் துரத்த துரத்த முட்டுச்சந்துக்கு ஓடினால் தப்பிக்க முடியாது. தடுப்பாட்டம் ஆடுவதற்கு பதில் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டும். உள்நாட்டுத் தொழிலைக் காப்பாற்ற, உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தை வலுவாக நடத்த வேண்டும். இப்போதுதான் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: