ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற வாலிபர் சங்கத்தினரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன் சங்கத்தின் கொடியை உடைத்து செங்கல்பட்டு காவல் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலைத் தருவதாக கூறி இதுவரையிலும் வழங்காததைக் கண்டித்தும், படித்த இளைஞர்களைப் பக்கோடா விற்கச் சொன்ன மோடியைக் கண்டித்தும், ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ரயில் மறியல் போராட்டம் நாடுமுழுவதும் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாகச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் தலைமையில் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ரயில் நிலையம் செல்லும் வழியில் செங்கல்பட்டு துணைக்கண்காணிப்பாளர் மதிவானன் தலைமையிலான காவலர்கள் போராட்டம் நடத்த வந்த வாலிபர் சங்கத்தினரை காட்டுமிராண்டித்தனமாகத் தடுத்துநிறுத்தினர். கைகளில் ஏந்தியிருந்த சங்க கொடியைப் பிடுங்கினர்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் சட்டையை பிடித்து கிரிமினல் குற்றவாளியைப் போல் தரதரவென இழுத்துச் சென்றனர். மற்றவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். சங்கத்தின் கொடியை அவமதித்த காவல் துறையினரைக் கண்டித்து முழக்கமிட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். காவல் துறையின அராஜகத்தைக் கண்டித்து வாலிபர்கள் அங்கு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ: https://youtu.be/CcbUEmAJo5k

Leave A Reply

%d bloggers like this: