திருப்பூர், பிப். 12 –
திருப்பூர் பின்னலாடைத் தொழில் நெருக்கடிக்குத் தீர்வு காண அனைவரும் ஒன்றுபட்டி போராடினால்தான் மாற்றம் காண முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் நடத்தப்பட்ட தொழில், தொழிலாளர் பாதுகாப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பேசுகையில், திருப்பூரில் மட்டும் தொழில் பாதிப்பு இல்லை. ஜவுளித் தொழில் சார்ந்த அனத்துப் பிரிவுகளும் எல்லா பகுதிகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த நிர்வாக ரீதியான பிரச்சனைகள் ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். ஆனால் மத்திய அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, வரி விதிப்பு, விலையேற்றம் போன்றவைதான் தொழில் பாதிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்றன.

தொழில் நெருக்கடிக்கு சிலர் தொழிலாளர்கள்தான் காரணம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. மின் கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, எரிபொருள் தொடர் விலையேற்றம் போன்ற மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் தான் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள் உள்பட அனைத்துப் பகுதியினரும் ஒன்றுபட்டுப் போராடும்போதுதான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 2019 தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தொழில் துறையினர் சிலர் நினைக்
கின்றனர். ஆனால் குஜராத் மாநிலம் சூரத்தில் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வலுவான போராட்டம் காரணமாகத்தான் வரி குறைக்கப்பட்டது. எத்தனை தடைகள் இருந்தாலும் அதைத் தாண்டி ஒற்றுமை ஏற்படுத்தினால்தான் வெற்றி பெற முடியும்.

விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை நீடிக்கிறது. இதுவரை பனியன் தொழிலில் இதுபோன்று முதலாளிகள் தற்கொலை என்று கேள்விப்பட்டதுண்டா? ஆனால் உலகமய, தாராளமயக் கொள்கை காரணமாக இப்போது பனியன் உற்பத்தியாளர்களும் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி காரணமாக 3 லட்சம் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலைவாய்ப்புத் தரும் இத்தொழிலைப் பாதுகாக்க அனைத்து தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மக்கள் சேர்ந்து போராட்டம் நடத்தாமல் மாற்றம் காண முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து மாநாட்டுக்கு தலைமை ஏற்ற கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கூறியதாவது: திருப்பூர் தொழிலும், மக்களும் பாதிக்கப்படும்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு-வும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இது போன்ற மாநாடு, கூட்டு இயக்கங்களை நடத்தியுள்ளது. தற்போது நடத்தப்படுவது நான்காவது மாநாடாகும்.மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியில் இருப்பதால் அரசியல் காரணத்திற்காக இது போன்ற மாநாடுகளை நடத்துவதாக சிலர் நினைக்கலாம். ஆனால் டிராபேக் குறைக்கப்பட்டது ஏற்றுமதி ஆடைத்தொழிலுக்கு மரண ஓலம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கமே அறிக்கை விட்டுள்ளது. இந்த தொழிலுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலை தடுத்து தொழிலைப் பாதுகாக்க இம்மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.

மேலும், திருப்பூர் மாவட்டத் தொழில்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனும், தொழிலாளர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணனும் முன்மொழிந்தனர். இத்தீர்மானங்கள் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் வரவேற்றார். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் குமார் துரைசாமி, சைமா துணைத் தலைவர் தாமோதரன், சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி ஆகியோர் உரையாற்றினர். டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் பங்கேற்றார். இந்நிகழ்வின் தொடக்கத்தில் திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இம்மாநாட்டில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: