தமிழகத்தில் தொழில்வளர்ச்சி சரிந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செவ்வாயன்று (பிப்.13) டைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது வருமாறு:
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை அளிப்பதோடு, வராக்கடனைத் தள்ளுபடி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 2.20லட்சம் கோடி ரூபாய் வாரக்கடனை ரத்து செய்துள்ளது. 2018 மார்ச் மாதம் வரை 9.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றால் இந்தியாவின் பிரதான வங்கியான ஸ்டேட் வங்கி நடப்பாண்டில் 2 ஆயிரம் கோடி நட்டம் அடைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியாவில் உள்ள ஒரு விழுக்காடு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 49 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
2014ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பீப்பாய் 140 டாலராக இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 60 டாலராகக் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் லிட்டர் 30 அல்லது 40 ரூபாய்க்கு வழங்க முடியும். டீசல் விலையையும் பெட்ரோலுக்கு இணையாக உயர்த்தி வருகிறார்கள்.
ஆண்டுக்கு இரண்டு கோடிபேருக்கு வேலை தருவதாக கூறியதை நிறைவேற்றவில்லை. ஜிஎஸ்டியால் சிறுகுறு தொழில்கள் மட்டுமல்ல, நடுத்தர தொழில்களும் முடங்கியுள்ளன. தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. தமிழகத்திலும் தொழில்வளர்ச்சி சரிந்துள்ளது. விவசாயத்தில் எதிர்மறையான வளர்ச்சி உள்ளது.

பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்க 15 கோடி வரை லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. சத்துணவு ஆயா முதல் துணைவேந்தர் நியமனம் வரை ஊழல் நடைபெறுகிறது. மாநில அரசு ஊழல் தடுப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். அரசுப்பணிகளில் ஆளும் கட்சியினரை மட்டுமே நியமிப்போர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
சாதி ஆணவக் கொலைகளை தடுக்கத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். டெல்டா பகுதியில் 15 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான் 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் உள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற முடியும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு மாறிவிட்டதால், தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச்சூழலில் தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து மாநில மாநாடு விவாதிக்க உள்ளது. மாநில மாநாடு தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவில்லை. தேர்தல் வருகிறபோது கட்சியின் மாநிலக்குழு கூடி பொருத்தமான உத்தியை உருவாக்கும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மிகப்பெரிய திட்டம் என்று கூறுவது பொய்யானது. தேசிய சுகாதாரத் திட்ட அளவிற்குக் கூட அது இல்லை. அதில், தனியார் மருத்துவமனைகளுக்குப் பலனளிக்கக்கூடிய வகையில் அந்தத் திட்டத்தில் பல ஷரத்துக்கள் உள்ளன. மொத்தத்தில் சுகாதாரத்திற்கும், கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி கடந்த காலங்களை விடக் குறைவானது.
பொதுவாழ்க்கையில் வருகிறவர்கள் சேவை நோக்கோடு செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் உள்ள படங்களில் 3 பேர் மட்டுமே முன்னாள் முதலமைச்சர்கள். ஜெயலலிதா உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்திருப்பது தார்மீக ரீதியில் தவறானது. மரபுக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் சிலைகள், உருவப்படங்கள் வைக்க சட்டம் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் வைக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை சட்டமன்றத்தில் திறந்திருக்கக் கூடாது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கோரியிருப்பது சரியானதல்ல. இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்த வேண்டும். பொதுப்போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் மானியம் இல்லாமல் நடத்த முடியாது. தமிழகத்தின் பட்ஜெட் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி. போக்குவரத்துக் கழகங்களுக்கு பற்றாக்குறை 3 ஆயிரம் கோடி. இது மொத்த பட்ஜெட்டில் 1.5 விழுக்காடுதான். எனவே, கட்டண உயர்வு தேவையற்றது. கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொண்டதாக அமைச்சர்கள் கூறுவது ஏற்புடையதல்ல.

வரும் பிப்.17 முதல் பிப்.20 வரை தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தமிழகம் குறித்த எதிர்கால அரசியல் அணுகுமுறையையும் கொள்கையையும் உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இச்சந்திப்பின்போது மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி உடனிருந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.