ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியர், ஜேஎன்யூ ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் பேராசிரியர் எம்.ஜகதீஷ்குமார் பல்கலைக்கழகத்தில் எந்தவொரு வகுப்பிற்கும் சென்று மாணவர்களுக்கு ஒருபோதும் பாடம் கற்பித்ததில்லை. மேலும் எந்தவொரு ஆராய்ச்சி மாணவருக்கும் ஆய்விற்கான வழிகாட்டியாகவும் அவர் செயல்படவில்லை. பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்ற எந்தவொரு பாடவகுப்புகளிலும் தொடர் பிரச்சனைகள் இருப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து வராமல் இருப்பதாகவோ எந்தவொரு புகாரையும் அவர் இதுவரையிலும் பெற்றதுமில்லை. ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து ஆய்வு மேற்பார்வையாளர்களுக்கு தொடர்ச்சியான, பரவலான பிரச்சினைகள் இருப்பதாக இதுவரையிலும் எந்தவொரு எச்சரிக்கையும் அவருக்குத் தரப்பட்டதில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தால் உருவாக்கப்படும் எதிர்மறைப் பிரச்சாரங்களுக்கு மாறாக இந்தப் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நலன் பயக்கும் வகையில் இருப்பதாலுமே இதுபோன்ற பிரச்சனைகள் இதுவரையிலும் துணைவேந்தருக்கு ஏற்படவில்லை என்பதே உண்மை.

பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை, இந்த படிப்புகள் பெரும்பாலும் அயல்நாட்டு மொழிகளில் இருப்பதால், மாணவர்கள் வகுப்பறைகளில் செயல்படுவதை வைத்து ஒவ்வொரு செமஸ்டருக்கும் தொடர்மதிப்பீட்டிற்கென்று குறிப்பிடத்தக்க அளவு (பொதுவாக சுமார் 40 – 50%) மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான ஊக்கத்தை மாணவர்களுக்கு அளிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களுடைய நடவடிக்கைகள் மீதான பொறுப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. வகுப்புகளுக்கு வராமல் இருப்பதற்குத் தரப்படும் தண்டனையிலிருந்து தப்புவதற்காக வெறுமனே வகுப்புகளுக்கு வருகின்ற வகையில் இருக்கும் தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள முறையைப் போலன்றி, வருகை தராமல் போன வகுப்புகளுக்கான தண்டனையை மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்குவதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நடைமுறை இருக்கிறது.

பட்டமேற்படிப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, தில்லி பல்கலைக்கழகத்திலும் கட்டாய வருகைப் பதிவு என்பது இல்லை. தயாரித்து வந்து விளக்குதல், ஒதுக்கப்பட்ட சில வேலைகள், தேர்வுகள், தனிப்பயிற்சிகள் என்று இருக்கும் மிகவும் இறுக்கமான காலஅட்டவணைகள், செமஸ்டருக்கு 50%  மதிப்பெண்கள் வகுப்பறைச் செயல்பாடுகளுக்காக வழங்கப்படுவது ஆகியவை வகுப்புகளுக்கு வராமல் தவிர்க்கின்ற பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு சிரமத்தையே உருவாக்கும்.  மேலும் பல்கலைக்கழகங்களால் வரையறுக்கப்பட்ட சில பொதுவான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சில கையேடுகளைக் கொண்டு இங்கே வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக பாடத்திற்கான முக்கிய கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட பாட ஆசிரியர் கொண்டிருக்கும் கருத்துக்களின் வழியாகவே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

உதவித் தொகை பெறும் மாணவர்களின் உதவித்தொகைக்கான படிவங்கள் ஒவ்வொரு மாதமும் கல்வி ஆலோசகர் மற்றும் / அல்லது மையத்தின் தலைவர் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த விதி உதவித்தொகையைப் பெறுகின்ற அனைத்து ஆய்வு மாணவர்களுக்கும் பொருந்தும். தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவையும், (தற்போது, ​​மூன்று வருடங்கள்) எம்.பில் மற்றும் பிஎச்.டி ஆய்வுச் சுருக்கம், ஆய்வேடுகளை சமர்ப்பிப்பதற்கும், அவற்றை, நிரூபிப்பதற்கென்று உள்ள காலக்கெடுவையும் மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எம்.பில். ஆய்வேடுகள் இரண்டு செமஸ்டர்களுக்குள்ளும், பிஎச்.டி.ஆய்வேடுகள் நான்கு ஆண்டுகளுக்குள்ளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போதுமான காரணங்கள் இருந்தால் இந்தக் காலக்கெடு ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு அதற்குள்ளாக ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்படவில்லையெனில், ஆய்வு மாணவரின் பதிவு நீக்கப்படும் அல்லது அவர் தன்னுடய ஆய்வைக் கைவிட்டுவிட வேண்டும்.

ஆய்வுக் காலம் முழுவதிலும், ஆய்வு மேற்பார்வையாளரால் வைக்கப்படும் நியாயப்படுத்தப்பட்ட எதிர்மறைக் கருத்தின் மூலமாக மாணவரின் உதவித்தொகை நிறுத்தப்படுவதையோ, பதிவு ரத்து செய்யப்படுவதையோ அல்லது முற்றிலுமாக அவரை ஆய்விலிருந்து நீக்கி விடுவதையோ செய்துவிட முடியும். உண்மையில், எதிர்பார்த்த நிலைக்கு வருவதில் மாணவர் எவரும் தோல்வியுறும்பட்சத்தில், அவரை நீக்குவது என்பது பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைப் படிப்புகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஐம்பதாண்டுகளில் மாணவர் வருகை குறித்து எந்த பிரச்சனையும் எழுந்ததில்லை என்கிற உண்மைக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சான்றளிக்கின்றனர்.  அதே போன்று ஆசிரியர்கள் தங்களுடைய வகுப்புகளை முறையாக எடுப்பதிலும் பிரச்சனைகள் வந்ததில்லை என்று மாணவர்களும் சொல்கிறார்கள். வழக்கமாக வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை திட்டமிடப்படாத கூடுதல் வகுப்புகளை எடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளும் மாணவர்களை மட்டுமல்லாது, மூத்த மாணவர்கள், வருகைதரும் ஆசிரியர்கள், ஆய்வுமேற்பட்ட மாணவர்கள் போன்றவர்களை வற்புறுத்தி முன்னேற்பாடில்லாத மாதக்கணக்கிலான வகுப்புகளையும், பட்டறைகளையும் நடத்தச் சொல்கின்ற ஆர்வம் நிறைந்த, கல்விப் பசி கொண்ட மாணவர்களாலும் நிறைந்திருக்கும் வகுப்பறைகளைக் கொண்டதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இருக்கிறது.

ஆய்வு மாணவர்களால் நடத்தப்படுகின்ற பலவீனமான பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள், வாசிப்புக் குழு வகுப்புகள் தவிர, வளாகத்தில் உள்ள பல்வேறு அரசியல் அமைப்புகளால் நடத்தப்படும் வகுப்புகளும் இங்கே நடைபெறுகின்றன.
உலகிலேயே பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்காக பயிற்சி வகுப்புகளை நடத்துகின்ற ஒரே மாணவர் அமைப்பாக ஜேஎன்யூ மாணவர் பேரவை மட்டுமே இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு, வாதங்களை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஒருவேளை வகுப்புகளைத் தவறவிட்டால் அதனை ஈடுசெய்தும் வருகின்றனர்.

அப்படியென்றால் ஏன் வருகைப்பதிவைப் புறக்கணிக்க வேண்டும்? பேராசிரியர் எம்.ஜகதீஷ்குமாரின் அறியாமை நிறைந்த தன்னிச்சையான நடவடிக்கைகள்தான் என்பதே இந்தக் கேள்விக்கான மிக எளிய பதிலாக இருக்க முடியும். அந்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் கொள்கைகளுக்கு முரண்பாடாக பொதுவாக கற்றலுக்கு எதிராக இருக்கிறது என்று கூறி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருதலைப்பட்சமாக இந்த முடிவு அறிவிக்கப்பட்ட டிசம்பர் 22 முதலே தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். தங்களுடைய மிதமான ஆட்சேபணைகளை பல்கலைக்கழகப் பள்ளிகள் மற்றும் மையங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதியுள்ளன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய பாடங்களை அதிகப்படியாக சேர்க்க, தணிக்கை செய்து கொள்ள, முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளலாம் என்பதோடு, கூடுதல் படிப்புகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றிருக்கும் நிலைமையில், 8000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவரின் வருகையைப் பதிவு செய்து கணக்கிடுவதற்கான ஆள்பலம் எங்கே இருக்கிறது? மேலும் ஏற்கெனவே அங்கே இருப்பவர்களையே திரும்பவும் எண்ணிப் பார்க்கின்ற இந்த நடவடிக்கைகளின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது?

இந்த வருகைப்பதிவு திட்டம், பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்காக உள்ள ஆய்வு மாணவர்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தினசரி கையொப்பமிட வேண்டும், மையத்தின் தலைவர், ஆய்வு மேற்பார்வையாளர் கையெழுத்திட்ட தினசரி அனுமதிச் சீட்டுகள் இருந்தால் மட்டுமே வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியும் என்ற நிபந்தனைகள் அவர்களிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளன. பல்கலைக்கழகம் என்பது சிறைச்சாலை அல்ல, ஆய்வு மேற்பார்வையாளர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் அல்ல. ஆய்வுக் காலம் என்பது என்பது சிறைத் தண்டனைக் காலத்திற்கு முற்றிலும் மாறானது. ஏனென்றால் ஆய்வேட்டை எழுதுவதற்கான படைப்பாற்றலை சுதந்திரம் மற்றும் உள்ளிருந்து வருகின்ற ஒழுக்கம் ஆகியவற்றால் மட்டுமே வளர்த்தெடுக்க முடியும். பல துறைகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வு மாணவர்கள், சில துறைகளில் 350 மாணவர்கள் கூட இருக்கின்ற நிலையில், தினசரி அனுமதிச் சீட்டுகளை வாங்குவதற்காக மாணவர்கள் தங்களுடைய விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்து வரிசையில் நிற்க வேண்டுமென்றால், தங்களுடைய கள வேலைகள், நூலக வேலைகள், ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பது தவிர அன்றாட வாழ்வில் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் எப்போதுதான் செய்வது?

ஜேஎன்யூ நிர்வாகம் இது குறித்து அளிக்கப்பட்ட முறையீடுகள் எதற்கும் பதிலளிக்காமல் காத்து வரும் அமைதி எந்தவிதமான எதிர்வாதங்களும் வைக்கப்படவில்லை, வகுப்புகளில் மாணவர்களின் வருகை குறையவில்லை என்பது போன்ற உண்மைகளை மூடிமறைப்பதாகவே இருக்கிறது. வருகைப்பதிவிற்கான தாள்களில் வகுப்புகளில் முழுமையாக கலந்து கொண்டிருக்கும் கருத்து வேறுபாடு கொண்ட மாணவர்கள் கையெழுத்திட மறுத்து விட்டனர். ஜேஎன்யூ மாணவர் பேரவையால் பிப்ரவரி 9 அன்று நடத்தப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தைத் தவிர, மற்ற நாட்களில் வகுப்புகள் இயல்பாகவே நடந்தன.

வருகைப்பதிவுத் தாளில் கையெழுத்திட மறுப்பவர்களுக்கு, (அவர்கள் வகுப்பிற்கு வரவில்லை என்று எடுத்துக் கொண்டு) ஜனவரி மாதத்திற்கான உதவித்தொகை மட்டுமல்லாது, அதற்கடுத்து வரும் காலங்களிலும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என்ற புதிய தண்டனையை வழங்கிடும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி 8 உத்தரவே இதற்கான காரணமாக இருந்தது. அந்த உத்தரவில், விடுதிகளை விட்டு வெளியேற்றுவது, அடுத்த செமஸ்டர் பதிவை ரத்து செய்வது போன்ற அச்சுறுத்தல்களும் சேர்ந்திருந்தன. மாத வருமானம் 6000 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் 25% அளவில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய கல்விச் செலவுகள், விடுதிக் கட்டணங்கள் ஆகியவற்றுக்காக தாங்கள் பெற்று வருகின்ற மிகவும் குறைந்த இந்த கல்வித் தொகையையே நம்பியே இருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், வருகைப்பதிவு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிகளில் இல்லாத இந்த முடிவுகள் பல்கலைக்கழகம் செய்கின்ற அட்டூழியம் என்பதைத் தவிர வேறல்ல.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜேஎன்யூவை மூடுவதற்கான அனைத்து வகையிலான முயற்சிகளையும் ஜகதீஷ்குமார் மேற்கொண்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் எழப்போவதில்லை. சிறிதும் தளர்வடையாத ஜேஎன்யூவின் மனப்பாங்கை அழித்தொழிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கும் உண்மையைப் புரிந்து கொண்டு, இந்த தேர்தல் ஆண்டிலாவது ஜேஎன்யூ மீது அவர் மேற்கொண்டிருக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொள்ளுமா?

http://indianexpress.com/article/opinion/clockwork-attendance-is-an-assault-of-jnu-spirit-5059532/

ஆயிஷா கித்வாய் (மொழியியல் பேராசிரியர், ஜேஎன்யூ ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்.)

-தமிழில்: முனைவர் தா. சந்திரகுரு
விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: