ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாம் மீது கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.  3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீநகர் அருகே உள்ள கரன் நகர் பகுதியில் அமைந்துள், துணை ராணுவப்பிரிவான மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எப்.) முகாமுக்குள் திங்கள்கிழமை அதிகாலையில் தீவிரவாதிகள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை நோக்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டார். இதனால் தீவிரவாதிகள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து  தப்பி சென்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்தனர்.

இரு பிரிவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படை வீரர் முஜாகித் கான் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: